twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Dhillukku dhuddu 2 review: தில்லுக்கு துட்டு 2.. பேய்கூட ரூம் போட்டு சிரிக்கும் பாஸ் ! - விமர்சனம்

    சந்தானம் - ராம்பாலா கூட்டணியின் காமெடி அட்ராசிட்டி தான் தில்லுக்கு துட்டு 2 திரைப்படம்.

    |

    Rating:
    3.5/5
    Star Cast: சந்தானம், ஷ்ரிதா சிவதாஸ், ராஜேந்திரன், ஊர்வசி, தீப்தி சதி
    Director: ராம் பாலா

    சென்னை : பேயை கலாய்த்து நம் வயிறை புண்ணாக்கும் சந்தானம் - ராம்பாலா கூட்டணியின் காமெடி அட்ராசிட்டி தான் தில்லுக்கு துட்டு 2 திரைப்படம்.

    கதை, லாஜிக், நம்பகத்தன்மை என ஒரு வழக்கமான சினிமாவுக்கு தேவைப்படும் அத்தனை அம்சங்களையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, இரண்டு மணி நேரம் பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் மட்டுமே எடுக்கப்பட்டுள்ள படம் இது. அதனால தேவையில்லாம இந்தப் படத்துல கதை இருக்கா, லாஜிக் இருக்கானு எல்லாம், 'உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?'ங்கற ரேஞ்சுக்கு சுவத்தை உடைச்செல்லாம் தேடக்கூடாது.

    Dhillukku dhuddu 2 movie review

    ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளிவந்த பேய் - காமெடி படக் கதைகளில் ஒன்று தான் இது. ஆனால் தங்களது ஸ்டைலில் கலாய் கலாய் என கலாத்து பேயையே அலற வைத்திருக்கிறார்கள் இயக்குநர் ராம்பாலாவும், சந்தானமும். போதாக்குறைக்கு அவர்களுடன் மொட்டை ராஜேந்திரனும், ஊர்வசியும் சேர்ந்துகொள்ள, கேட்கவா வேண்டும் தியேட்டரே குலுங்கி குலுங்கி சிரிக்கிறது.

    ஆட்டோ டிரைவர் சந்தானமும், அவரது மாமா மொட்டை ராஜேந்திரனும் சேர்ந்து செய்யும் கலாட்டாவால் அல்லோகலோலப்படுகிறது அவர்களின் குடியிருப்பு காலனி. இதனால் கடுப்பாகும் மற்ற குடியிருப்புவாசிகள், இருவரையும் காலி செய்ய சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தான், நாயகி ஸ்ரித்தா சிவதாஸிடம் யாராவது 'ஐ லவ் யூ' சொன்னால் உடனே அவர்களை ஒரு பேய் அடித்து உதைத்து வெளுத்து வாங்கிவிடும் என்பது அவர்களுக்கு தெரிய வருகிறது. எப்படியாவது சந்தானத்தையும் அந்தப் பேயிடம் சிக்க வைத்துவிட வேண்டும் என அவர்கள் திட்டம்போட, கடைசியில் பாவம் பேய் தான் சந்தானத்திடம் சிக்கி சின்னாபின்னமாகிறது.

    Dhillukku dhuddu 2 movie review

    நீண்ட நாட்களுக்கு பிறகு மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க மீண்டும் அதே பழைய சந்தானமாகவே திரும்பி வந்துவிட்டார். வெல்கம் பேக் சந்தானம். இனிமே இப்படித் தான் என சொல்லி ஹீரோவான சந்தானம், இந்த படத்தில் நல்லாவே டான்ஸ் ஆடி, சண்டை போட்டு நடித்திருக்கிறார். வழக்கம் போல தனது கவுண்டர் வசனத்தால், ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை படத்தில் வரும் எல்லோரையும் கலாய்த்து தள்ளி விடுகிறார்.

    பல படங்களுக்கு பிறகு இந்த படத்தில் தான் மொட்டை ராஜேந்திரனுக்கு காமெடி ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. இடையில் கொஞ்சகாலம், 'நான் காமெடியனா இல்லை கேரக்டர் ஆர்ட்டிஸ்டா?' என அவரே குழம்பிப் போகும் அளவிற்கான படங்கள் பலவற்றில் அவர் நடித்திருந்தார். இந்தப் படத்தில் மீண்டும் தன் டிரேட் மார்க் காமெடியைத் தந்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அந்த 'ஓ.பி.யா' காமெடியும், கதவு சீனும், தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகு கூட நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறது.

    இந்தக் கூட்டணியில் இரண்டாம் பாதியில் ஊர்வசியும், ஜெயபிரகாஷ் பிபின், பிரஷாந்த் ராஜ் கூட்டணியும் இவர்களுடன் இணைந்து கொள்ள, 'போதும்பா வயிறு வலிக்குது' என கெஞ்சும் அளவிற்கு கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்கிறார்கள்.

    Dhillukku dhuddu 2 movie review

    சந்தானத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது இயக்குனர் ராம்பாலாவுக்கு மட்டுமே தெரிந்த வித்தைபோல. மிகவும் தூக்கியும் வைக்காமல், அதேசமயம் அவரிடம் வாங்க வேண்டிய விஷயத்தை சரியாக வாங்கியும் ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார். ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு சிரித்து மகிழ ஒரு படம் எடுத்ததற்காகவே ராம்பாலாவுக்கு தனி பாராட்டுகள்.

    என்ன தான் இருந்தாலும் பேயை கலாய்ப்பதற்கு ஒரு அளவு இல்லயா. பேய் எல்லாம் பாவம் ராம்பாலா சார். பேய்களுக்கு மட்டும் ஒரு சங்கம் இருந்திருந்தால், இந்நேரம் ஒரு பெரிய போராட்டமே வெடித்திருக்கும். சைட் கேப்பில், மந்திரவாதிகளையும், சாமியார்களையும் கூட கலாய்த்திருக்கிறார்கள்.

    ஹீரோயின் ஸ்ரித்தா சிவதாஸ் அழகு பொம்மையாக மிளிர்கிறார். படத்திலும் கேரள பெண்ணாகவே வருவதால், ரொம்ப கஷ்டப்படாமல் நடித்திருக்கிறார். நிறைய படங்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    'மவனே யாருகிட்ட', 'காத்தாடி போல் ' என இரண்டு பாடல்கள் தான் படத்தில். ஷபிர் இசையில் இரண்டுமே கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. ஒரு பேய் - காமெடி படத்துக்கு தேவையான பின்னணி இசையை கச்சிதமாக தந்திருக்கிறார். தேவையில்லாமல் பாடல்களைத் திணித்து திரைக்கதையைக் கெடுக்காமல் இரண்டே பாடல்களைத் தந்திருப்பது நலம்.

    ஒரு ஹாரர் படத்துக்கு தேவையான காட்சிகளை, சரியாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தீபக்குமார் பதி. சந்தானம் ஹீரோவாகிவிட்டதனால், அவரை இன்னும் கொஞ்சம் அழகாக காட்டியிருக்கலாம். மாதவனின் படத்தொகுப்பு, படத்தை போரடிக்க விடாமல் கொண்டு செல்கிறது.

    என்ன தான் பேயை கலாய்த்தாலும், கடைசியில் அதனிடமே சரணாகதி ஆகியிருக்க தேவையில்லை. அதையும் பித்தலாட்டமாகவே காட்டியிருக்கலாம். இரண்டாம் பாதியை போலவே முதல் பாதியிலும் இன்னும் கொஞ்சம் காமெடி நெடியை அதிகரித்திருக்கலாம். டபுள் மீனிங் காமெடி பெரியவங்களுக்கு ஓ.கே., ஆனா சின்ன பசங்களுக்கு அது சரிதானா என்பதையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    எப்படி இருந்தாலும், தில்லுக்கு துட்டு காமெடி வேட்டு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கவலை மறந்து சிரிக்க, தியேட்டருக்கு போய்ப் பார்க்கலாம். நிச்சயம் இந்தப் பேய் உங்களைக் கனவிலும் வந்து சிரிக்க வைக்கும்.

    English summary
    Actor Santhanam - director Rambhala's Dhillukku dhuddu 2 is a complete family entertainer film with lots of comedy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X