Bloody Beggar Review: ப்ளடி பெக்கர் விமர்சனம்.. கவினுக்கு இந்த தீபாவளி சரவெடியா? புஸ்வானமா?
சென்னை: இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரிப்பில், கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ப்ளடி பெக்கர். இப்படத்தினை நெல்சன் திலீப்குமாரின் உதவி இயக்குநர் சிவபாலன் இயக்கியுள்ளார். படம் இன்று அதாவது அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆகியுள்ளது. படம் ரிலீஸ்க்கு முன்னரே, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது. மேலும் படத்தின் ட்ரைலர் முழுக்க முழுக்க ஜனரஞ்சகமாக இருந்ததும் ரசிகர்களுக்கு இந்தப்படத்தின் மீது, தனி எதிர்பார்ப்பு ஏற்பட முக்கிய காரணம் எனலாம். இந்நிலையில் இந்தப் படம் எப்படி உள்ளது? படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ததா இல்லையா? கவனின் தனது முதல் தீபாவளி ரிலீஸில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பது குறித்துக் காணலாம்.
நடிகர் கவின், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரக்கூடிய அதேநேரத்தில் பலரது கவனத்தினை ஈர்த்த நடிகராக வலம் வருகின்றார். இவரது கடைசி இரண்டுப் படங்களான டாடா மற்றும் ஸ்டார் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இரண்டு படங்களிலும் சென்டிமென்ட் காட்சிகள் சிறப்பாக ஒர்க்-அவுட் ஆனதால், கவினுக்கு அடுத்தடுத்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. மேலும் அந்த இரண்டு படங்களும் கதையாகவும் பாராட்டுகளைப் பெற்றதால், கவின் சிறப்பான கதைகளைத் தேர்வு செய்து நடிக்கின்றார் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு ஏற்படுத்திவிட்டார்.

இந்நிலையில் இவர் நடித்துள்ள ப்ளடி பெக்கர் படமும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். அதேநேரத்தில் படத்தினை டார்க்- காமெடியில் நகர்த்த முயற்சி செய்துள்ளனர். அது எந்த அளவிற்கு ஒர்க்-அவுட் ஆனதா இல்லையா? படத்தில் என்னதான் சொல்ல நினைத்ததை படக்குழு சரியாக சொன்னதா இல்லையா எனப்பார்க்கலாம்.
கதை: ஏமாற்றி பிச்சை எடுக்கும் பிச்சைகாரராக உள்ள கவின், ஒரு பெரிய பங்களாவிற்குள் சென்று விடுகின்றார். பங்களாவிற்குள் செல்லும் கவின் உள்ளே மாட்டிக் கொள்கின்றார். அங்கு ஏற்கனவே சொத்துக்கு ஆசைப்பட்டு கொல்லப்பட்ட ரெடின் கிங்ஸ்லி உடலை துண்டுதுண்டாக வெட்டுவதைப் பார்த்து விடுகின்றார். ஆனால் கவினின் கண்ணுக்கு ஏற்கனவே கொலை செய்யப்பட்ட ரெடின் கிங்ஸ்லியின் ஆவி தெரிகின்றது. சொத்துக்கு ஆசைப்பட்டவர்கள், ரெடின் கிங்ஸிக்கு பதிலாக, கவினை நடிக்கச் சொல்லுகின்றார்கள். ஆனால் கவினையும் கொலை செய்யத் திட்டமிடுகின்றார்கள். இதில் இருந்து கவினைக் காப்பாற்ற ரெடின் கிங்ஸ்லியும் பங்களா குடும்பத்தில் இருந்து ஒரு பெண்ணும் முயற்சி செய்கின்றார்கள். கவின் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் கதை.

கவின்: படத்தின் திரைக்கதையைப் பொறுத்தவரையில் முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவாகவே நகர்கின்றது. ஆனால் கவினின் நடிப்பினாலே முதல் பாதி நிரம்பி இருக்கின்றது என்பதைவிடவும், கவினின் நடிப்பினால்தான் முதல்பாதியை கடக்கவே முடிகின்றது. படம் முழுக்க டார்க் - காமெடியில் ரசிகர்களை திருப்திபடுத்த படக்குழு முயற்சி செய்துள்ளது. ஆனால் அது பல இடங்களில் ஒர்க்-அவுட் ஆகவில்லை. டார்க் காமெடி ஒர்க்-அவுட் ஆகாதது படத்தினை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. படம் முழுக்க புகைப்படங்களில் இருக்கும் ராதாரவி, கடைசி 10 நிமிடங்களுக்கு வருகின்றார். ஆனால் ராதாரவி வருவதற்கு முன்னரே படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

ஹேப்பி என்டிங்: ஆனால் படத்தினை ஹேப்பி என்டிங்காக முடிக்கவேண்டும் என சேர்க்கப்பட்டுள்ள ராதாரவி காட்சிகள் நன்றாகவே இருந்தாலும், அது தேவையில்லாத காட்சிகளாகத்தான் தோன்றுகின்றது. படத்தினை ராதாரவி காட்சிகள் இல்லாமலே முடிந்திருந்தால் படம் இப்போது ஏற்படுத்திய தாக்கத்தைவிடவும் அதிக தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கும்.
எப்படி இருக்கு?: அறிமுக இயக்குநராக சிவபாலன் முத்துக்குமார் சிஸ்சர் அடிக்க முயற்சி செய்து பவுண்டரி அடித்துள்ளார். இசை அமைப்பாளர் ஜென் மார்டின் இசை படத்திற்கு பெரிய பலம்கொடுக்கவில்லை என்றாலும், பாராட்டுக்குரியததுதான். உடல்மொழி, வசன உச்சரிப்பில் கலக்கியுள்ள கவின் தனது நடிப்பில் செஞ்சுரி அடிக்க முடியவில்லை என்றாலும், டாடா, ஸ்டார்க்குப் பிறகு ப்ளடி பெக்கர் படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளார். குடும்பத்துடன் பார்க்க சிறப்பான படம்.



Click it and Unblock the Notifications