DNA Review: டிஎன்ஏ விமர்சனம்.. அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பு எப்படி?.. கிளைமேக்ஸ் வொர்த்தா? இல்லையா?
சென்னை: இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், சேத்தன், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜூன் 20ம் தேதி 'டிஎன்ஏ' (DNA) திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த ஆண்டு கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடித்த 'நிறங்கள் மூன்று' திரைப்படத்தின் கதை வித்தியாசமாக இருந்தாலும், அந்த படம் அதர்வாவுக்கு கம்பேக் படமாக அமையவில்லை.
ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் இதயம் முரளி படம் தான் முதலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலாவுடன் இணைந்து பராசக்தி படத்திலும் பட்டையை கிளப்பி வரும் அதர்வாவுக்கு அதற்கு முன்னதாகவே தரமான படமாக இந்த டிஎன்ஏ படம் நாளை வெளியாக காத்திருக்கிறது.

பிரஸ் ஷோவில் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் படத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்த படத்தில் உள்ள பிளஸ் மற்றும் மைனஸ் என்ன? என்பது குறித்தும் படம் கடத்தும் தாக்கம் என்ன? என்பது குறித்தும் இந்த விமர்சனத்தில் விரிவாக பார்க்கலாம் வாங்க..
டி என் ஏ கதை: ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய இந்த படத்தை நெல்சன் வெங்கடேஷ் இயக்கியுள்ளார். ஆனந்த் கதாபாத்திரத்தில் அதர்வாவும் திவ்யா கதாபாத்திரத்தில் நிமிஷா சஜயனும் நடித்துள்ளார்கள் என்பதை விட வாழ்ந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். கதையின் ஆரம்பத்தில் முதல் காதல் தோல்வியால் போதை பழக்கத்துக்கு அடிமையாகி கிடக்கும் அதர்வா முரளி மறுவாழ்வு மையத்திற்கு சென்று திருந்திய மனிதனாக வெளியே வருகிறார். இன்னொரு பக்கம், ஸ்பெஷல் சைல்ட் போன்ற குணாதிசயம் கொண்ட நிமிஷா சஜயனுக்கு அதன் காரணமாகவே திருமணம் நடைபெறாமல் வரும் வரன்கள் வேண்டாம் என விலகிச் செல்கின்றனர்.
ஒரு கட்டத்தில், ஆனந்துக்கும் திவ்யாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்துக்குப் பிறகு குழந்தை பிறக்க, மருத்துவமனையில் இது என்னோட குழந்தையே இல்லை என நிமிஷா சஜயன் குண்டை தூக்கிப் போட, அதன் பின்னர் கதையில் நடப்பது தான் செம ட்விஸ்ட். கடைசி வரையில், பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல், கிளைமேக்ஸ் வரை செம த்ரில்லர் படமாக மாறி ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறது. மனைவி சொன்னதை அதர்வா நம்பினாரா? குழந்தை உண்மையாகவே மாறிவிட்டதா? கடைசியில் என்ன ஆனது? என்பது தான் இந்த டிஎன்ஏ படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: பாணா காத்தாடி படத்தின் மூலம் 2010ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவான நடிகர் அதர்வா கடந்த 15 ஆண்டுகளாக பல நல்ல படங்களில் நடித்து தொடர்ந்து தனக்கான இடத்துக்காக போராடி வருகிறார். கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான 100 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர், அவருக்கு பெரிதாக வெற்றி கிடைக்காத நிலையில், டிஎன்ஏ திரைப்படம் அந்த குறையை தீர்த்து வைக்கும் என்றே தெரிகிறது. காதல் விரக்தியில் ஆரம்பத்தில் அதர்வாவின் நடிப்பு அர்ஜுன் ரெட்டி படத்தை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு உள்ளது. திருமணத்துக்குப் பிறகு கணவனாகவும், குழந்தை பிறந்த பின்னர், பொறுப்பான அப்பாவாகவும் அதர்வாவின் டிரான்ஸ்ஃபர்மேஷன் நடிப்பு தான் ரசிகர்களை கடைசி வரை கட்டிப் போடுகிறது. ஆக்ஷன் காட்சிகளிலும், எமோஷனல் காட்சிகளிலும் எங்கேயும் குறை சொல்ல முடியாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஒரு பக்கம் அதர்வாவின் நடிப்பு அசத்தல் என்றால், இன்னொரு பக்கம் நிமிஷா சஜயன் தான் படத்தின் மிகப்பெரிய தூணாக உள்ளார். குழந்தைக்காக போராடும் தாயாக அவர் எமோஷனல் காட்சிகளில் நடித்திருப்பதை பார்த்தால், நிச்சயம் ரசிகர்கள் கண் கலங்கி விடுவார்கள். சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் அவரது நடிப்பு பாராட்டப்படும். விருதுகளும் தேடி வரும். அதுவும் அந்த கோயில் போர்ஷனில் எல்லாம் நடிப்பு ராட்சசியாகவே மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

பிளஸ்: நல்ல கதை மற்றும் திரைக்கதையை எழுதி, மருத்துவ துறையில் நடைபெறும் ஒரு முக்கிய ஸ்கேமை கையில் எடுத்துக் கொண்டு இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு தரமான படத்தைக் கொடுக்க வேண்டும் என காட்சிக்கு காட்சி அவர் போட்டிருக்கும் உழைப்பு நன்றாகவே தெரிகிறது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம். ரிட்டயர் ஆகப்போகும் போலீஸ் அதிகாரியான பாலாஜி சக்திவேல் அதர்வாவுக்கு ஏன் உதவ வேண்டும் என்பதை காட்சி வழியாக விளக்கிய இடத்தில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பலம் சேர்க்கிறார். சாபு ஜோசப்பின் எடிட்டிங்கும் படத்திற்கு வலு சேர்க்கிறது.
மைனஸ்: ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருப்பதாக தோன்றுவது சிறு குறையாக தெரியும். கிளைமேக்ஸில் குழந்தையை வைத்துக் கொண்டு அதர்வா சண்டையிடுவது மற்றும் ஆரம்பத்தில் கதைக்குள் செல்ல எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் ஒரு சில பாடல்கள் சிறு குறைகளாக தோன்றும் ஆனால், படத்தின் முதல் பாதியை விட 2ம் பாதி திரைக்கதை மற்றும் அந்த கிளைமேக்ஸ் காட்சிகள் நிச்சயம் அதையெல்லாம் மறக்கச் செய்துவிடும். நிச்சயமாக திரையரங்குகளுக்கு சென்று குடும்பத்துடன் இந்த டிஎன்ஏ படத்தை பார்க்கலாம்.
தமிழ் ஃபிலிமிபீட் யூடியூப் சேனலில் அதர்வாவின் டிஎன்ஏ படத்துக்கு சினிமா விமர்சகர் ரஞ்சித் கண்ணன் அளித்துள்ள விமர்சனத்தை இந்த வீடியோ லிங்க்கில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











