“டாக்டர்“ கொஞ்சம் ஏமாற்றம்… பட்டுக்கோட்டை பிரபாகர் விமர்சனம் !
சென்னை : டாக்டர் திரைப்படம் குறித்து பட்டுக்கோட்டை பிரபாகரன் தனது பேஸ்புக்கில் ஒரு விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு, தீபா, அர்ச்சனா, அர்ச்சனாவில் மகள் சாரா உள்ளிட்ட இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கடந்த 9 ஆம் தேதி வெளியான டாக்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
டாக்டர்
கோலமாவு கோகிலா படத்தின் வெற்றிக்குப் பிறகு பீஸ்ட் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் டாக்டர். தனது படங்களில் எப்போதும் கலகலவென்று பேசி நடிக்கும் சிவகார்த்திகேயன் முதல் முறையாகப் அதிகம் பேசாமல் அமைதியாக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் பெரும் வசூலை வாரிக்குவித்துள்ளது.
பட்டுக்கோட்டை பிரபாகர்
இந்நிலையில் டாக்டர் திரைப்படம் குறித்து எழுத்தாளரும், வசனகர்த்தாவுமான பட்டுக்கோட்டை பிரபாகர் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: டார்க் காமெடி படம் என்பதால் முதல் காரியமாக தர்க்க ரீதியான கேள்விகள் எழுப்பும் மூளையை தியேட்டருக்கு வெளியிலேயே ஒப்படைத்துவிட வேண்டும். எதையும் அசாதாரணமாக அணுகும் நியாயஸ்தராக மிலிட்டரி டாக்டர். தன்னை நிராகரிக்கும் பெண்ணின் வீட்டில் நிகழும் ஒரு பிரச்சினையைத் தீர்க்க களமிறங்கி வெல்கிறார்.
ரோபோ மாதிரி
சிவகார்த்திகேயன் தவிர மற்ற எல்லாப் பாத்திரங்களும் அங்க சேட்டை மற்றும் ஒன் லைனர்களால் காமெடி செய்கிறார்கள். ஆனால், ஹீரோ கிட்டத்தட்ட ரோபோ மாதிரி தலையைக்கூட அசைக்காமல் வசனம் பேசும் மேனரிசம் எடுபடவில்லை. அவர் இயல்பாகவே இருந்திருந்தால் அவரும் காமெடி வசனங்கள் பேசியிருந்தால் கூடுதல் பலமாகத்தான் இருந்திருக்கும்.
படம் முடிந்த பிறகு
ஏற்கெனவே பிரபலமான செல்லம்மா பாடலை படம் முடிந்தபிறகு வைத்திருப்பதால் சிலர் போய்விட, சிலர் நின்றபடி பார்க்கிறார்கள். முன்வரிசைகளில் பல இடங்களில் விழுந்து விழுந்து சிரிக்க..பின் வரிசைகளில் கப்சிப்பென்று மெளன விரதம் இருக்கும் முரண் புதுசு. (நான் இடைப்பட்ட வரிசையில்..)
கொஞ்சம் ஏமாற்றம்
எல்லோரும் சிரிப்புப்படம் என்று சொல்லிச் சிரிக்கத் தயாராகிப் போனால் என் வரையில் கொஞ்சம் ஏமாற்றம்தான். அல்லது எதற்கெல்லாம் சிரிக்க வேண்டும் என்பதில் என்னிடம் ஏதோ ரசனைக் கோளாறு இருக்கிறதோ? இவ்வாறு பட்டுக்கோட்டை பிரபாகர் தனது ஃபேஸ்புக் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications