Double Tuckerr Review: டபுள் டக்கர் விமர்சனம்.. கபாலி முதல் காந்தாரா வரை.. தேவதை பொம்மைகளின் சேட்டை!
நடிகர்கள்: தீரஜ், ஸ்ம்ருதி வெங்கட்
இசை: பரத்வாஜ்
நேரம்: 2 மணி நேரம்
இயக்கம்: மீரா மஹதி
சென்னை: அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கத்தில் தீரஜ், ஸ்ம்ருதி வெங்கட், யாஷிகா ஆனந்த், கோவை சரளா, மன்சூர் அலி கான், ஷாரா, எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், சுனில் ரெட்டி என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தாலும் டபுள் டக்கர் படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்ப்பது அந்த கடவுளின் காவலர்களான ரைட் மற்றும் லெஃப்ட் பொம்மைகள் தான்.
ராஜா சின்ன ரோஜா படத்தில் ரஜினிகாந்த் உடன் அனிமேஷன் பொம்மைகள் நடனமாடும் காட்சிகளை சிறு வயதில் கண்டு ரசித்திருப்போம். ரஜினிகாந்த் நடித்த அதிசய பிறவி படத்தில் எமதர்மன், சித்ரகுப்தா செய்யும் லூட்டி மற்றும் லக்கி மேன் படத்தில் இடம்பெறும் அதே போன்ற எமதர்மன், சித்ரகுப்தா கான்செப்ட்டில் பல படங்களை பார்த்து இருப்போம்.

இந்த டபுள் டக்கர் படத்தில் எமதர்மன், சித்ரகுப்தாவுக்கு பதிலாக ரைட், லெஃப்ட் என 2 பொம்மைகள் வருகின்றன. அந்த பொம்மைகளுக்கு முனிஷ்காந்த் மற்றும் காளி வெங்கட் டான் படத்தின் காம்போ போல வாய்ஸ் கொடுத்திருப்பது படத்துக்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது. டபுள் டக்கர் படம் எங்கே எல்லாம் தூள் கிளப்பியது என்றும் எங்கே எல்லாம் தடுமாறியது என்பது குறித்து விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
டபுள் டக்கர் கதை: சிறு வயதில் ஏற்படும் விபத்து காரணமாக அரவிந்த் (தீரஜ்) முகத்தில் தழும்பு ஏற்படுகிறது. அப்படியிருக்கும் நபரை பலரும் வெறுத்து ஒதுக்குகின்றனர். அவரை பாரு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ம்ருதி வெங்கட் காதலிக்க தொடங்கும் நேரத்தில் ரைட் மற்றும் லெஃப்ட் வந்து அரவிந்தின் உயிரை தவறுதலாக பறித்து விடுகின்றனர். மீண்டும் அந்த உடலில் உயிரை சேர்த்து விடலாம் என பார்த்தால், பாடி மிஸ்ஸிங். ஆவியாக இருக்கும் ஹீரோவுக்கு அவரை போலவே உருவ ஒற்றுமை கொண்ட ராஜா எனும் நபரின் உடல் தற்காலிகமாக கிடைக்கிறது. இந்த உடல் ஹேண்ட்ஸமாக இருந்தாலும், எனக்கு என் உடல் தான் வேணும் என அடம்பிடிக்கும் ஹீரோவுடன் சேர்ந்துக் கொண்டு அவரது உடலை தேடிக் கண்டு பிடிக்கும் பணியில் அந்த லெஃப்ட் ரைட் இறங்குகிறது. கடைசியில் என்ன ஆனது என்பது தான் படத்தின் கிளைமேக்ஸ்.

பிளஸ்: கார்ட்டூன் படங்களில் வருவது போன்ற அனிமேஷன் பொம்மைகள் மற்றும் அதற்கு குரல் கொடுத்திருக்கும் முனிஷ்காந்த் மற்றும் காளி வெங்கட் காம்போ செய்யும் ரகளை தான் படத்திற்கு பிளஸ். கபாலி ரஜினியாகவும், ஏஜென்ட் விக்ரம் கமலாகவும் ரோலக்ஸ் சூர்யாவாகவும், காந்தாரா தெய்வமாகவும் அந்த பொம்மைகள் உருவம் மாறி வந்து செய்யும் சேட்டைகள் சிரிக்க வைக்கின்றன. அந்த இரண்டு பொம்மைகளை தாண்டி எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், ஷாரா, கோவை சரளா என பலரும் காமெடியில் கலக்கியுள்ளனர்.
மைனஸ்: ஹீரோ தீரஜ், ஸ்ம்ருதி வெங்கட் முடிந்த அளவுக்கு ஸ்கோர் செய்ய பார்க்கின்றனர். ஆனால், இன்னமும் கூடுதலாக அவர்களின் பர்ஃபார்மன்ஸ் இருந்திருக்கலாம். காமெடியை தவிர்த்து கதை மற்றும் திரைக்கதையில் பல இடங்களில் லாஜிக் மிஸ் ஆகிறது. ஃபேண்டஸி படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது என்றாலும் தேவையற்ற பல கிளை கதைகளால் சொல்ல வந்த முக்கிய கருத்து பெரிதாக ஹைலைட் ஆகவில்லை. இந்த சம்மருக்கு குழந்தைகளுடன் ஜாலியாக பார்க்கும் படமாகவே வந்திருக்கிறது இந்த டபுள் டக்கர்.


Click it and Unblock the Notifications











