Dragon Review: டிராகன் விமர்சனம்.. கதறவிட்ட அஷ்வத்.. பிரதீப் ரங்கநாதனுக்கு 2வது பிளாக்பஸ்டர்!
நடிகர்கள்: பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர்
இசை: லியோன் ஜேம்ஸ்
இயக்கம்: அஷ்வத் மாரிமுத்து
சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கே.எஸ். ரவிக்குமார், கெளதம் மேனன், விஜே சித்து மற்றும் அஸ்ரத் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள டிராகன் படம் இன்று வெளியானது.
படத்தின் டிரெய்லரை பார்த்ததுமே பலரும் இது டான் படத்தின் காப்பியா என கேள்வி எழுப்பினர். மொட்டை மாடி பார்ட்டியில் பிரதீப் ரங்கநாதனும் இது டான் 2 தான் என்பதை இயக்குநர் மறைத்துவிட்டார் என்றார். உண்மையாகவே படம் டான் படத்தின் காப்பியா? அல்லது இந்த டிராகன் படம் என்ன சொல்கிறது என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

பிரதீப் ரங்கநாதன் இளைஞர்களை கெடுப்பதாக ஒரு இளம் பெண் பேசிய வீடியோ தீயாக பரவிய நிலையில், இந்த டிராகன் படத்தில் இளைஞர்களை கெடுக்கும் விதமாக படத்தை இயக்குநர் எடுத்துள்ளாரா? அல்லது இன்றைய இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளாரா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..
டிராகன் கதை: இன்ஜினியரிங் கல்லூரியில் 48 அரியர் வைத்துவிட்டு பிரின்ஸிபல் மிஷ்கினிடம் இந்த படிப்பே வேண்டாம் என ஐடி கார்டை தூக்கிப் போட்டு விட்டு செல்லும் ஹீரோ வேலைக்கு சென்று சம்பாதிப்பது போல வீட்டில் பெற்றோர்களை ஏமாற்றிவிட்டு ஊதாரியாக நண்பர்கள் வீட்டில் பிக் பாஸ் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை செய்கிறார். கல்லூரியில் படிக்கும் போது ரவுடியாக இருக்கும் பசங்கள பெண்களுக்கு பிடிக்கும் என்றும் அதே காரணத்திற்காக அனுபமா பரமேஸ்வரன் டிராகன் எனும் டி. ராகவனை காதலித்து வருகிறார். ஆனால், காலேஜ் வாழ்க்கை முடிந்த பின்னர் தான் வேலை வெட்டி செய்யாதவனை திருமணம் செய்துக் கொள்ள முடியாது என புரிய வந்து அவனை பிரேக்கப் செய்து பிரிகிறார்.

அதன் பின்னர், ஹீரோ திருந்துகிறாரா என்று பார்த்தால் அதுதான் இல்லை. போலியாக டிகிரி சர்ட்டிபிகேட் வாங்கி, பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். கெளதம் மேனன் மேனேஜராக இருக்கும் கம்பெனியில் வேலைக்குச் சேரும் அவருக்கு பெரிய தொழிலதிபரான கே.எஸ். ரவிக்குமாரின் மகளான கயாடு லோஹரை திருமணம் செய்ய நிச்சயம் ஆகிறது. ஆனால், அதன் பின்னர் நடக்கும் ட்விஸ்ட்டு காரணமாக டிராகனின் வாழ்க்கை ரிட்டர்ன் ஆஃப் தி காலேஜ் ஆக மாற இரண்டாம் பாதியும் கிளைமேக்ஸ் காட்சிகளும் இளைஞர்களுக்கான பாடமாக அமைவது தான் இந்த டிராகன் படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடிகராக ரொம்பவே மெருகேறியுள்ளார். முதல் சீனில் இருந்து கடைசி காட்சி வரை நடிப்பால் மிரட்டுகிறார். காமெடி காட்சிகளும், டைமிங்கும் ரசிகர்களை தியேட்டரில் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. ஹீரோ மட்டும் சிரிக்காமல் மற்றவர்கள் அனைவரையும் சிரிக்க வைக்கும்படியான படமாக இந்த டிராகன் படம் உள்ளது. அதிலும், "மாட்டிக்கினாரு ஒருத்தரு அவரை காப்பத்தணும் கர்த்தரு" பாடல் காட்சிகள் எல்லாம் வேறலெவல் ஃபன்.
அனுபமா பரமேஸ்வரன் காதலியாகவும் வேறு ஒருவரை திருமணம் செய்துக் கொள்ள பிரதீப் ரங்கநாதனை பிரேக்கப் செய்யும் இடங்களிலும் நடிப்பால் அப்ளாஸ் அள்ளுகிறார். அவருடைய போர்ஷன் அங்கேயே முடியாமல் இரண்டாம் பாதியில் எதிர்பாராத கம்பேக்காக அமைவது தான் படத்தின் பிளஸ். பிரேமம், டான் என அனைத்து படங்களையும் வச்சு செய்துள்ளார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. ஏமாற்றினால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. படித்தால் தான் முன்னேற முடியும். குறுக்கு வழி என்றுமே சறுக்கி விட்டு விடும் என்பதை மிஷ்கினை வைத்து சொல்லியிருக்கும் மெசேஜ் இளைஞர்களுக்கு தேவையான பாடமாக அமைந்துள்ளது.
பிளஸ்: பிரதீப் ரங்கநாதன் - மிஷ்கின் கெமிஸ்ட்ரி தான் படத்திற்கு பெரிய பலம். அனுபமா பரமேஸ்வரன், கெளதம் மேனன், கயாடு லோஹர், பிரதீப் ரங்கநாதனின் அப்பாவாக நடித்துள்ள ஜார்ஜ் மரியம் என நடிகர்கள் அனைவரையும் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து வீணடிக்காமல் நல்லா பயன்படுத்தியிருப்பது சிறப்பு. அவருக்கு பக்க பலமாக இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸின் பாடல்களும் பின்னணி இசையும் இளைஞர்களை ஆட்டம் போட வைக்கின்றன. ஆக்ஷன் வேண்டுமா ஆக்ஷன் இருக்கு, பாட்டு வேண்டுமா பாட்டு இருக்கு, காமெடி வேண்டுமா காமெடி இருக்கு, கருத்து வேண்டுமா கருத்து இருக்கு என பக்கா பேக்கேஜ் படமாக கொடுத்திருக்கிறார் அஷ்வத் மாரிமுத்து.

மைனஸ்: 48 அரியர் வைத்துக் கொண்டு குறுக்கு வழியில் ஃபேக் டிகிரி வாங்கி வேலைக்குச் சேரும் ஹீரோ எப்படி ஐடி கம்பெனியில் அத்தனை கோடிங்கும் செய்து பெஸ்ட் எம்ப்ளாய் ஆகிறான் என்பது தான் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அந்த இடத்தில் இயக்குநர் ஓவராகவே சினிமா லிபர்ட்டியை எடுத்துக் கொண்டார். அதே போல கிளைமேக்ஸில் கொஞ்சம் சுத்தவிட்டு கருத்து சொல்லும் இடம் சற்றே சொதப்பல் தான். ஆனால், ஒட்டுமொத்தமாக படமாக இந்த டிராகன் என்டர்டெயின்மென்ட் பண்ணிக் கொண்டே இளைஞர்களுக்கு படிப்பு எந்தளவுக்கு முக்கியம் என்கிற பாடத்தை நடத்துவதால் கண்டிப்பாக பிரதீப் ரங்கநாதனுக்கு அடுத்த பிளாக்பஸ்டர் படமாக மாறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அடிக்கடி வரும் கேமியோ சர்ப்ரைஸ்களை விட கிளைமேக்ஸ் கேமியோ தரமான சம்பவம்.


Click it and Unblock the Notifications











