Drishyam 3 Review: திரிஷ்யம் 3 விமர்சனம்.. மோகன்லாலின் மூன்றாவது இன்னிங்ஸ் செஞ்சுரியா? டக் அவுட்டா?
சென்னை: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடித்து உருவாகி மோகன்லாலின் 66 வது பிறந்த நாளான மே 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகி உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக உருவானது. இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாகம் உருவாகிறது என்ற தகவல் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது மட்டும் இல்லாமல் பல எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை மூன்றாவது பாகம் நிறைவேற்றியதா இல்லையா என்பது குறித்து இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
மூன்றாவது பாகத்தின் கதையைப் பொறுத்தவரையில், முதல் இரண்டு பாகங்களிலும் மகனே கொல்லப்பட்டிருந்தாலும், மன்னிப்போம் மறப்போம் என்ற சுபாவத்தில் இருந்த சித்திக்கின் கதாபாத்திரம் இதில் நேர் எதிராக வடிவமைக்கப்பட்டுள்ளது. காவல்துறையும் நீதிமன்றமும் வருண் கொலை வழக்கை கைவிட்ட நிலையில், ஜார்ஜ் குட்டி, சினிமா மீது இருக்கும் தனது ஆசையை தீர்த்துக் கொள்ள ஒரு கதாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுக்கிறார். தனது மூத்த மகள் அஞ்சுவுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார். வரன்கள் அமையும் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் அவை கைவிட்டுப் போகிறது.

இதற்கு எல்லாம் என்ன காரணம், ஏது காரணம் என்று ஜார்ஜ் குட்டி தேடிக் கண்டுபிடிக்கும் போது தான், தன்னைச் சுற்றி இன்னும் சதி வலைகள் பின்னப்பட்டு கொண்டு இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார். இது மட்டும் இல்லாமல், தனது மகளின் திருமணத்தையும் நிறுத்த நடைபெறும் சதியை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற வகையில் காய் நகர்த்துகிறார். இறுதியாக அதில் வென்றது யார் என்பதுதான் மீதிக்கதை.
திரைக்கதை எப்படி?: திரைக்கதையைப் பொறுத்தவரையில் என்னதான் தண்டனையில் இருந்து தப்பிவிட்டாலும், குற்றம் புரிந்த சாமானியனை உறுத்தும் உள்ளுணர்வு, ஜார்ஜ் குட்டியை தூங்க விடாமல் செய்வது மட்டும் இல்லாமல் விழிப்புடனும் இருக்கச் செய்கிறது. படத்தின் முதல் பாதி, இரண்டாம் பாதி என மொத்த படமும் மிகவும் நிதானமாகவே திரைக்கதை நகர்கிறது.

ஹாட்ரிக் சிக்ஸர்கள்: சரியாக கிளைமாக்ஸுக்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்னதாக தான் விறுவிறுப்பான திரைக்கதையும் சுவாரஸ்யமான கதாபாத்திர எக்ஸ்டண்ட்களும் இருக்கிறது. தனது குடும்பத்தைக் காப்பாற்ற ஜார்ஜ் குட்டி என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பது திரிஷ்யம் ரசிகர்களுக்கு தெரிந்ததுதான் என்றாலும், முந்தைய இரண்டு பாகங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதுடன், திருப்தி அடைய வைப்பதிலும் என இயக்குநர் ஜீத்து ஜோசப் ஹாட்ரிக் சிக்சர்கள் விளாசிவிட்டார்.
பாராட்டு: கடைசி 30 நிமிடங்கள் மட்டும் இப்படி இல்லாமல், முந்தைய இரண்டு மணி நேர ஃபிளாட்டிலேயே நகர்ந்திருந்தால், ப்ரிக்குவல் பாகங்களை எடுத்து கல்லா கட்டும் படங்களின் வரிசையில் திரிஷ்யமும் இணைந்திருக்கும். ஆனால் படக்குழு அப்படியான தவறைச் செய்யாததற்கு பாராட்டுகள். படத்தின் கிளைமாக்ஸை ஜார்ஜ் குட்டி தயாரிக்கும் படத்திற்கும் தொடர்பு உள்ளது போன்ற காட்சி வைத்து எல்லாம் ரசனை.

மொத்ததில் படம் எப்படி?: நிதானமான கதை, பொருத்தமான திரைக்கதை, திருப்திகரமான கிளைமாக்ஸ் என திரிஷ்யம் 3 மோகன்லாலுக்கு பிறந்த நாள் பரிசு தான். ஒவ்வொரு காட்சிக்கும், ஒவ்வொரு டயலாக்குக்கும் திரைக்கதையில் பார்த்து பார்த்து மெனக்கெட்டு உள்ளார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. சதீஷ் குரூப்பின் ஒளிப்பதிவு, அனில் ஜான்சனின் பின்னணி இசை என இரண்டுமே நன்றாகவே ஒர்க்-அவுட் ஆகி உள்ளது. திரிஷ்யம் படங்களின் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் படமாக இருக்கும். நான்காவது பாகத்திற்கு லீட் கொடுத்து முடித்துள்ளார்கள். மொத்தத்தில் படம் மூன்றாவது இன்னிங்ஸிலும் செஞ்சுரி அடித்துள்ளது.


Click it and Unblock the Notifications