Dunki Review: டங்கி விமர்சனம்.. 3 இடியட்ஸ், பிகேவை பின்னுக்குத் தள்ளியதா? இல்லை புலம்ப வைத்ததா?
நடிகர்கள்: ஷாருக்கான், டாப்ஸி
இசை: சித்தார்த் அமீத் பவ்சார்
இயக்கம்: ராஜ்குமார் ஹிரானி
மும்பை: முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு என ராஜ்குமார் ஹிரானி இயக்கினாலே அந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகவே பாலிவுட்டில் இருந்து வந்தது. ஷாருக்கானை போலவே இவரும் பெரிய கேப் எடுத்துக் கொண்டார். சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ்குமார் ஹிரானி படம் வெளியாவதே ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்.
அடுத்து, ஷாருக்கானை சொல்ல வேண்டாம் இந்த ஆண்டு பதான், ஜவான் என ஆக்ஷன் சரவெடியை கொடுத்த ஷாருக்கான் அகதிகளுக்கான படமாக காமெடி கலந்த டிராமா படத்தை ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்து கொடுத்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் டாப்ஸி, விக்கி கவுஷல், அனில் க்ரோவர், விக்ரம் கோச்சார் என ஷாருக்கானின் டங்கி டீமில் ஒரு பட்டாளமே உள்ளது. டங்கி திரைப்படம் கிறிஸ்துமஸ் தின பண்டிகையை முன்னிட்டு வெளியாகி உள்ள நிலையில், சலார் படத்துக்கு டஃப் போட்டியை கொடுக்குமா? இல்லையா? என்பது குறித்த முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க...
டங்கி கதை: உலகம் முழுவதும் மைக்ரேட் என சொல்லப்படும் இடம்பெயர் மக்களின் துயர் அதிகமாகவே உள்ளது. சில மக்கள் தங்களுக்கு பிடித்த இடத்தில் வாழ விரும்ப முயற்சித்து வருகின்றனர். ஆனால், அரசு அதற்கு எல்லாம் அனுமதி இல்லை என அடித்து விரட்டி பெரிய பெரிய சுவர் எல்லாம் எழுப்பி எல்லைகளை பிரித்து வைத்திருக்கிறது. பிகே படத்தில் ஏலியனை வைத்து இந்தியாவில் மதத்தின் பெயரால் நடக்கும் மூடநம்பிக்கைகள் குறித்து போல்டாக படம் எடுத்த ராஜ்குமார் ஹிரானி இந்த முறை ஷாருக்கான் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு பஞ்சாபில் பிறந்து வளர்ந்தாலும் லண்டனுக்கு குடிபுக வேண்டும் என்கிற ஆசையில் என்னவெல்லாம் கோமாளித்தனம் செய்கின்றனர். அவர்களின் லட்சியம் நிறைவேறியதா? இல்லை என்பதை காமெடி கலந்த கருத்துள்ள படமாக கொடுத்துள்ளார்.
திரைக்கதை எப்படி இருக்கு?: பிக் பென் என்கிற வார்த்தையை யாராவது சொன்னாலே லண்டன் நினைவுகளில் மிதக்கும் ஒரு குழு லண்டனுக்கு செல்ல சரியான ஆங்கில அறிவு வேண்டும் என நடத்தப்படும் தேர்வில் ஃபெயில் ஆகி விடுகின்றனர். அதன் பின்னர் அவர்கள் குறுக்கு வழியை ஹர்தி சிங் எனும் ஷாருக்கானின் உதவியுடன் எப்படி சாத்தியமாக்க போராடுகின்றனர். என்னவெல்லாம் பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்பதை தான் திரைக்கதையில் சுவாரஸ்யம் கலந்து கொடுத்திருக்கிறார். முந்தைய படங்களை போலவே அவரது காமெடி எழுத்துகளுக்கு ரசிகர்கள் தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

பிளஸ்: ராஜ்குமார் ஹிரானி வழக்கம் போல இந்த முறையும் பெரிய துப்பாக்கிகளின் உதவிகளை நாடவில்லை. ஷாருக்கானை வைத்துக் கொண்டு ஜவான், பதான் போல அனல் தெறிக்கும் ஆக்ஷனை செய்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து விடலாம். ஆனால், அவருக்குள் இருக்கும் நல்ல நடிகரையும் காமெடியனையும் வெளியே கொண்டு வந்து இப்படியும் ரசிகர்களை என்டர்டெயின் செய்யலாம் என காட்டி ஃபீல் குட் மூவியை கொடுத்திருக்கிறார். டாப்ஸியை சொல்லவே தேவையில்லை கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஷாருக்கான் உடன் இணைந்து அவர் அடிக்கும் டைமிங் காமெடி பக்காவாக வொர்க்கவுட் ஆகி உள்ளது. விக்கி கவுஷல் கொஞ்ச நேரமே வந்தாலும் மனுஷன் மனதில் நிற்கிறார். இசை, ஒளிப்பதிவு என அனைத்து கிராஃப்ட்களும் தூள் கிளப்புகின்றன.
மைனஸ்: முதல் பாதி விறுவிறுப்பாகவும் ரசிக்கும்படியும் சென்ற நிலையில், இரண்டாம் பாதி இன்னொரு டிராக்கில் செல்லாமல் அதே டிராக்கில் செல்வது மற்றும் கதை ஒரே இடத்தில் ஒரு கட்டத்தில் தேங்கி நிற்பது போன்றவை மைனஸ் ஆக மாறத்தான் செய்கிறது. 3 இடியட்ஸ், பிகே அளவுக்கு இந்த படம் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆனால், நிச்சயம் ரசிகர்களை என்டர்டெயின் செய்யும்.


Click it and Unblock the Notifications











