என்ன தவம் செய்தேனோ - படம் எப்படி இருக்கு - ஒன்இந்தியா விமர்சனம்!
கவுரவக்கொலைகள் கூடாது என்ற கருத்தை சொல்லியிருக்கிறது என்ன தவம் செய்தேனோ திரைப்படம்.
Recommended Video

நடிகர்கள் - கஜினி, விஷ்ணுப்ரியா, ஆர்.என்.ஆர்.மனோகர், டெல்லி கனேஷ், மயில்சாமி, ஹாரத்தி, பிரியாமேனன், பவர்ஸ்டார் சீனிவாசன், சிங்கம்புலி, பான்பராக் ரவி மற்றும் பலர். தயாரிப்பு - இணைந்த கைகள் ப்ரொடக்ஷன்ஸ் எஸ்.செந்தில்குமார், இயக்கம் - முரபாசெலன், இசை - தேவ்குரு

கதை சுருக்கம்: பண பலமும், அதிகார பலமும் கொண்ட ஊர் முக்கியஸ்தர் ஆர்.என்.ஆர்.மனோகர். சாதி, கவுரவம் என பழங்காலத்து பஞ்சாங்கமாக வாழ்கிறார். இவரது திமிர் பிடித்த மகள் விஷ்ணுப்ரியா. பள்ளியில் படிக்கும் விஷ்ணுப்ரியா அப்பா செல்லம். தந்தையை போலவே அடாவடியாக இருக்கிறார். அதே ஊரில் தள்ளு வண்டியில் ஐஸ்விற்கும் இளைஞர் கஜினி.
இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஆர்.என்.ஆர்.மனோகரால் பாதிக்கப்பட்ட ஒரு கும்பல், அவரை பழிவாங்குவதற்காக, விஷ்ணுப்ரியாவை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கின்றனர். அப்போது அங்கே வரும் ஹீரோ கஜினி, அந்த கும்பலிடம் இருந்து விஷ்ணுப்ரியாவை காப்பாற்றுகிறார். இதையடுத்து கஜினி மீது விஷ்ணுப்ரியாவுக்கு காதல் மலர்கிறது.
ஆனால் ஆர்.என்.ஆர்.மனோகருக்கு பயந்து, அவரது மகளின் காதலை ஏற்க மறுக்கிறார் ஹீரோ. விடாப்பிடியாக, தனது அடாவடியால் கஜினியை சம்பதிக்க வைக்கும் விஷ்ணுப்ரியா, அவரை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டு ஓடுகிறார்.
ஹீரோ கஜினியை ஒருதலையாக காதலிக்கும் பிரியாமேனனை கொலை செய்து தனது மகள் இறந்துவிட்டதாக நாடகமாடும் ஆர்.என்.ஆர்.மனோகர், தனது கவுரவத்தை காப்பாற்றுவதற்காக பெற்ற மகளையே கொலை செய்ய துடிக்கிறார்.
மகளையும், அவரது காதலனையும் தந்தை கொன்றாரா? இல்லை மனம் மாறினாரா, காதல் ஜோடியின் வாழ்க்கை என்னானது என்பதே மீதிக்கதை.

முதல் படத்திலேயே கவுரவக் கொலை என்ற வலுவான களத்தை கையாண்டிருக்கிறார் இயக்குனர் முரபாசெலன். வழக்கமான திரைக்கதையின் மூலம் அதை சொல்ல முயன்றிருக்கிறார். படத்தில் சில டிவிஸ்டுகள் இருக்கின்றன. ஆனால் வழக்கமான சினிமாவாக இருப்பதால், எளிதில் யூகித்துவிட முடிகிறது.
புதுமுகங்கள் கஜினியும், விஷ்ணுப்ரியாவும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள். சிங்கம்புலியும், மயில்சாமியும் சரிசமமாக காமெடி செய்திருக்கிறார்கள். ஹாரத்திக்கு இரண்டு மூன்று காட்சிகள் தான்.
பணக்காரப் பெண், ஏழை இளைஞன் காதல் கதை, தமிழ் சினிமாவின் ஆதிகாலத்தில் இருந்து தொடர்ந்து வரும் பழைய சம்பரதாய சடங்கு என்பதால் படம் பார்க்கும் போது சிறிறு சளிப்பு ஏற்படுகிறது. மற்றபடி, சின்ன பட்ஜெட்டில், நல்ல கருத்தை சொல்ல நினைத்தற்காக, இந்த தவத்திறக்கு வரம் கொடுக்கலாம்.


Click it and Unblock the Notifications











