Falimy Review: ஃபாலிமி விமர்சனம்.. தாத்தாவுக்காக காசிக்குப் போகும் குடும்பம்.. கடைசியில என்ன ஆச்சு?
நடிகர்கள்: பசில் ஜோசப், ஜெகதீஷ், மஞ்சு பிள்ளை
இசை: விஷ்ணு விஜய்
இயக்கம்: நிதிஷ் சகாதேவ்
ஓடிடி: டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்
ரேட்டிங்:
திருவனந்தபுரம்: மலையாள இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் இயக்குநர் பசில் ஜோசப் நடிப்பில் வெளியான காமெடி டிராமா படம் தான் ஃபாலிமி (Falimy). Family எனும் டைட்டிலில் குளறுபடியை வைத்து அதை விட குளறுபடியான ஒரு காமெடி குடும்பத்துடன் ஹீரோ அவனது தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற கேரளாவில் இருந்து காசிக்கு சென்று வருவது தான் கதை. ஆனால், ஆரம்பம் முதல் கடைசி வரை ஃபுல் ஃபன் கியாரண்டி.
டொவினோ தாமஸை வைத்து மின்னல் முரளி படத்தை இயக்கிய இயக்குநர் பசில் ஜோசப் விபின் தாஸ் இயக்கத்தில் ஹீரோவாக நடித்த ஜெய ஜெய ஜெய ஜெயஹே படம் காமெடியாகவும் கருத்து ரீதியாகவும் வெளியாகி கலக்கியது. கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் பிரிவு, ஆணுக்கு பெண் அடங்கிப் போகத் தேவையில்லை என பசில் ஜோசப்பை வைத்து பக்காவான படத்தை கொடுத்திருந்தனர். இந்நிலையில், நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் பசில் ஜோசப் நடித்து நவம்பர் 17ம் தேதி வெளியான ஃபாலிமி திரைப்படம் சமீபத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஓடிடியில் வெளியான நிலையில், அதன் விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

ஃபாலிமி கதை என்ன?: கடைசி காலத்தில் காசிக்கு செல்லத் துடிக்கும் தாத்தாவை தொடர்ந்து குடும்பத்தினர் தடுத்து வருகின்றனர். ஹீரோ ஒரு கட்டத்தில் தனக்கு திருமணம் ஆனதும் காசிக்கு அழைத்துச் செல்கிறேன் என வாக்கு கொடுக்கிறார். ஆனால், நிச்சயதார்த்த நேரத்திலேயே திருமணம் தடை படுகிறது. குடும்பத்துடன் காசிக்கு செல்ல முயற்சிக்க பாதி வழியில் தாத்தாவை ரயிலில் விட்டு விட்டு குடும்பமே இறங்கி விடுகிறது. தாத்தா திரும்ப கிடைத்தாரா? குடும்பத்துடன் காசிக்கு சென்றார்களா? தாத்தா எங்கே சென்றார்? ஹீரோவுக்கு திருமணம் ஆனதா? என ஏகப்பட்ட கேள்விகளுடன் படம் பயங்கர காமெடியாக நகர்கிறது.
காமெடிக்கு பஞ்சமில்லை: பசில் ஜோசப் டப்பிங் கலைஞராக உள்ளார். அவரது தாத்தா யாருக்கும் தெரியாமல் கடைசி காலத்தில் காசிக்கு சென்று விட வேண்டும் என நினைத்து முதல் காட்சியிலேயே திருட்டுத்தனமாக ரயிலில் ஏற நினைக்கும் போது நாயகனின் தம்பி தாத்தாவை தடுத்து நிறுத்தி ஆட்டோவில் அழைத்துக் கொண்டு அம்மாவிடம் காசு வாங்கிக் கொண்டு, டப்பிங் ஸ்டூடியோவில் இருக்கும் அண்ணனிடம் காசு வாங்கிக் கொண்டு, கடைசியாக ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டுக்குச் செல்லும் போது ஆட்டோவுக்கு கொடுக்க வேண்டும் என தாத்தாவிடமே காசை கறப்பது என படம் ஆரம்பிக்கும் போது தொடங்கும் காமெடி கடைசி வரை எந்தவொரு பஞ்சமும் இல்லாமல் ரசிகர்களை பார்க்கவும் சிரிக்கவும் வைத்து விடுகிறது. அதிலும் அர்த்த ராத்திரியில் ஹீரோவின் அப்பா ரயிலை விட்டு இறங்க, அவரை ரயிலுக்குள் இழுக்கிறேன் என அவங்க அம்மா கை கொடுக்க, அவங்க ஏர்ல பறந்து வந்து கீழே விழுவுற சீனெல்லாம் சிரித்து மாளாது.

பிளஸ்: இந்த படத்துக்கு முக்கிய பலமே இயக்குநரின் திரைக்கதை மற்றும் மேக்கிங் தான். அதிலும், அந்த குடும்பத்தினருக்கான நடிகர்களை தேர்வு செய்தது செம பிளஸ். டிராவல் படம் என்பதால் படம் எங்கேயும் தேங்கி நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. பிரம்மாண்டமான மாஸ் மசாலா படங்களுக்கு மத்தியில் உறவுகளுடன் உணர்வுகளுடன் யதார்த்தமாக நகரும் திரைக்கதை ரசிகர்களை எந்தவொரு தொய்வும் இல்லாமல் பார்க்க வைக்கிறது. இதுபோன்ற கதைகளை வெறுமனே எடுத்தால் சீரியல் உணர்வு வந்து விடும். ஆனால், அதனோடு பிணையப்பட்டுள்ள சரியான நகைச்சுவை கலவை தான் இந்த படத்திற்கு பெரிய பிளஸ்.
மைனஸ்: கதை ரீதியாக பெரிய அழுத்தம் இல்லாதது ஒரு சிறிய குறையாகத் தெரியலாம். மேலும், தாத்தா மிஸ் ஆனதுமே அவர் எங்கே சென்றிருப்பார் என்பதை ரசிகர்கள் எளிதில் கணிக்க முடிகிறது படத்திற்கு மைனஸ் ஆக மாறியுள்ளது. ஆனால், இந்த படமே லைட் வெயிட் காமெடி டிராமா என்பதால் அதையெல்லாம் மறந்து விட்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ் டப்பிங்கில் பார்த்து ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications











