Fun Roast Review: தலைவர் படம் என்றும் பாராமல்.. பாட்ஷாவை இப்படி கொதறி வெக்கிறாங்களே.. இதெல்லாம் இடிக்குதா?

சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி, பாக்ஸ் ஆபீஸை மிரட்டி, இன்றுவரை ஒரு கல்ட் கிளாசிக்காக ரசிகர்களால் கொண்டாடப்படும் படம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பாட்ஷா'. இன்றைய தலைமுறை இளசுகளிடம் போய், "டேய்... பாட்ஷா மாதிரி ஒரு படம் இனிமே வரவே முடியாதுடா... சுரேஷ் கிருஷ்ணா ஸ்கிரீன்பிளேல மிரட்டியிருப்பாரு... தேவாவின் மியூசிக் தியேட்டரையே அதிரவைத்திருக்கும்" என்று சிலாகித்துப் பேசினால், "என்னப்பா... ஒரே டயலாக்கை 100 தடவை பேசுற கதையை எல்லாம் வந்து சொல்லிக்கிட்டு இருக்கீங்க?" என்று அசால்ட்டாகக் கேள்வி எழுப்புகிறார்கள்.

உடனே பதிலுக்கு, "அந்தப் படத்தோட மாஸ், அந்த இன்டர்வெல் பிளாக், ரஜினியோட ஸ்டைல் எல்லாம் உனக்குத் தெரியுமா? அந்த காலத்துல அது என்ன தாக்கத்தை ஏற்படுத்துச்சு தெரியுமா?" என்று வாதாடினால், "உங்களுக்கு பிடிச்சிருந்தா தலையில வச்சு கொண்டாடுங்க... ஆனா லாஜிக்கே இல்லாத படத்தை எங்களால ஏத்துக்க முடியாது" என்று முகத்திலடித்தாற்போல் பதில் வருகிறது. இது பாட்ஷா படத்திற்கு மட்டுமல்ல, இதற்கு முன்னர் கொண்டாடிய பல படங்களுக்கும் அதே ரியாக்‌ஷன் தான்.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்து, 1995-ம் ஆண்டு வெளியான 'பாட்ஷா' படத்தை, கடந்த வாரத்தில் மீண்டும் பார்க்க நேர்ந்தது. அப்போது எங்க வீட்டு ஜென்-சியையும் என்னோடு சேர்த்து உட்கார வைத்து, இந்த படத்தை நீ முழுவதும் பார்க்குற, என்ன குறைனு சொல்லுற என்று சண்டைக்குச் செல்லாத குறையாக படத்தைப் போட்டுவிட்டேன். படம் பார்க்கும் இடையிடையே, "இந்த சீன்ல தலைவரோட என்ட்ரி பார்த்தியா? தேவா பிஜிஎம் பட்டையைக் கிளப்புதுல... 'நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி'னு ரஜினி சொல்லும்போது தியேட்டரே ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது என்று எங்கள் ஊர் தீவிர ரஜினி ரசிகரான மகாலிங்கம் மாமா சொன்ன பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே இருந்தேன்".

Fun Roast Review  Gen Z Trolls Rajinikanth s Baashha  Questions Logic Behind the Cult Classic
Photo Credit:

மொத்த படத்தையும் பார்த்த பின்னர் படம் குறித்து இருவருமே பேச ஆரம்பித்தோம். தலைவரின் மாஸான படத்தை சவுண்ட் பார் சிஸ்டத்தில் நல்ல ஆடியோ குவாலிட்டியுடன் பார்த்திருக்கிறோம், எனவே படம் குறித்து பாராட்டுக்கள் தான் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்த்தது என்னோட தப்புத்தான் என்று இருந்தது,

தாடியை எடுத்தா முகமே மாறிடுமா?: "ஆமா.. இந்த படத்துல ரஜினிக்கு மட்டும் வயசே ஆகாதா? டைம் டிராவல் ஏதாவது பண்ணுவாரா? பிளாஷ்பேக்ல பாம்பேவுல மாணிக்கம் பாட்ஷாவா இருக்கும்போது தாடி வச்சுக்கிட்டு, ரொம்ப சீனியர் மாதிரி இருக்காரு. ஆனா அங்கிருந்து மெட்ராஸுக்கு தப்பிச்சு வந்து பல வருஷம் கழிச்சு ஆட்டோ ஓட்டுறப்போ, அவரோட தம்பி, தங்கச்சி எல்லாரும் வளர்ந்து பெரியவங்களாகிடுறாங்க. மார்க் ஆண்டனியோட பசங்களும் வளர்ந்துடுறாங்க. ஆனா, நம்ம தலைவர் மட்டும் பிளாஷ்பேக்கை விட கரண்ட் டைம்ல இன்னும் யூத்தா இருக்காரே? ஆன்டி-ஏஜிங் கிரீம் ஏதாவது யூஸ் பண்ணுவாரா?

Fun Roast Review  Gen Z Trolls Rajinikanth s Baashha  Questions Logic Behind the Cult Classic
Photo Credit:

அதைவிட கொடுமை என்னன்னா, பாம்பேவை நடுங்க வைத்த ஒரு பெரிய டானை, மெட்ராஸ்ல இருக்க ஒரு காலேஜ் சேர்மன் பார்த்தும் அடையாளம் கண்டுபிடிக்க முடியல. ஏன்னா, பாம்பேல பாட்ஷாவா இருந்தப்போ தாடி இருந்துச்சாம்... இங்க மாணிக்கமா வந்ததும் தாடியை எடுத்துட்டாராம். என்னப்பா... தாடியை எடுத்தா முகமே மாறிடுமா? இப்போ ஆதார், ஃபேஸ் அன்லாக் காலத்துல இதெல்லாம் நடந்தா யாராவது நம்புவாங்களா? இதையே பெரிய கெட்டப் சேஞ்ச்னு நீங்க கொண்டாடுறீங்களா?" என்று கேட்டதும் எனக்கே தூக்கி வாரிப்போட்டது.

பிரியா யாருடைய மகள்?: "அதுமட்டுமில்ல... ஹீரோயின் நக்மா நடிச்ச பிரியா கதாபாத்திரம் யாருடைய பொண்ணுனே படத்துல தெளிவா சொல்லவே இல்ல. ஒரு சீன்ல தேவராஜ்தான் அவங்களோட அப்பாங்குற மாதிரி இருக்கு. ஆனா தேவராஜ் மார்க் ஆண்டனியோட விசுவாசி. இன்னொரு பக்கம் ஆண்டனியோட பொண்ணு மாதிரியும் ஒரு ஃபீல் கொடுக்குறாங்க. பிரியா யாருடைய மகள்னு நீங்கள் சொல்லுங்க என்று கேள்வியை என்னிடமே கேட்டதும் கொஞ்சம் டரியல் ஆகிவிட்டது.

Fun Roast Review  Gen Z Trolls Rajinikanth s Baashha  Questions Logic Behind the Cult Classic
Photo Credit:

இதையெல்லாம் விடுங்க... ஒரு பொண்ணு மார்க் கம்மியா வாங்கிட்டாங்கனு, ஆட்டோ டிரைவர் போய் காலேஜ் சேர்மனை மிரட்டுவாராம். அவரும் உடனே சீட் கொடுத்துடுவாராம். என்னப்பா... காலேஜ் அட்மிஷன் கூட இப்படி நடக்குமா?" என்று அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கினார்.

மார்க் ஆண்டனி தான் ரியல் மாஸ்: "நீங்க வேணும்னா மாணிக்கத்தை மாஸ்னு கொண்டாடுங்க. அவருக்கான சில சீன்கள் மாஸாதான் இருக்கு, ஆனால் கதாபாத்திரமா சொதப்பல். ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தப் படத்துலயே ஸ்டைலிஷான, கம்ப்ளீட் கேரக்டர்னா அது மார்க் ஆண்டனி தான். அவர் எங்கேயும் அவரோட வில்லத்தனத்துல இருந்து மாறவே இல்லை. மார் ஆண்டனி இல்லையினா நீங்க கொண்டாடுற பாட்ஷா சாதாரண கதாபாத்திரம் தான்.

அதே மாதிரி தேவா சாரோட பிஜிஎம் இன்னைக்கும் வேற லெவல். ஆனா அந்த பாம்பே பிளாஷ்பேக்ல வர்ற ஃபைட் சீன்ஸ் எல்லாம் இப்போ பார்க்கும்போது ரொம்ப ஓவரா இருக்கு. கார் மேல ஏறி கையை அசைச்சா ஊரே திரளுமாமா?" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். "ஸ்டார் ரேட்டிங் எவ்வளவு கொடுப்பீங்க மிஸ்டர் ஜென்-சி?" என்று கேட்டதற்கு, ஒரு ஷாக் ரேட்டிங் கொடுத்தார் என்பதை மட்டும் சொல்லுகிறேன்.

Fun Roast Review  Gen Z Trolls Rajinikanth s Baashha  Questions Logic Behind the Cult Classic
Photo Credit:

தமிழ் சினிமா அடையாளம்: ஆண்டுக் கணக்கில் தியேட்டரிலும், அதன் பிறகு டெலிவிஷனிலும் எண்ணற்ற முறை ஒளிபரப்பாகி, தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாக மாறிய 'பாட்ஷா' படத்தையே அசால்ட்டாக ட்ரோல் செய்துவிட்டுப் போகும் இந்த ஜென்-சி கிட்களை திருப்திப்படுத்த, இப்போதைய திரையுலகம் இன்னும் அதிக லாஜிக், இன்னும் அதிக டீட்டெய்லிங், இன்னும் அதிக ரியலிசத்துடன் படங்களை எடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பது மட்டும் நன்றாகப் புரிகிறது.

இது ஒரு புறம் இருந்தாலும், இன்றைய தலைமுறையினருக்கு 90களின் மாஸ் ஹீரோயிசம், நீளமான பில்ட்அப் காட்சிகள், லாஜிக்கை விட ரசிகர்களின் விசில் சத்தத்தை முன்னிறுத்திய மேக்கிங் ஆகியவை பெரிதாக கனெக்ட் ஆகாமல் போகலாம் என்பதும் இந்த உரையாடலின் மூலம் தெளிவாகப் புரிந்தது. ஆனால், காலத்தைக் கடந்தும் கொண்டாடப்படும் சில படங்கள் ஏன் கல்ட் கிளாசிக்குகளாக மாறுகின்றன என்பதை புரிந்துகொள்ள, அந்தப் படம் வெளியான காலத்தின் ரசிகர் மனநிலையையும் சேர்த்தே பார்க்க வேண்டும் என்பதையும் எங்க மிஸ்டர் ஜென்-சி விமர்சனம் மீண்டும் உணர்த்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X