Furiosa Review: தாறுமாறு.. மேட்மேக்ஸ் ரசிகர்களே ஓடிவாங்க.. ஃபியூரியோஸா ட்விட்டர் விமர்சனம் இதோ!
லாஸ் ஏஞ்சல்ஸ்: இயக்குநர் ஜார்ஜ் மில்லர் தனது வாழ்க்கை மொத்தமே மேட் மேக்ஸ் படங்களுக்காகவே அர்ப்பணித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். 1979ம் ஆண்டு மேட் மேக்ஸ் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் தான் ஜார்ஜ் மில்லர். அதன் பின்னர் 1981ம் ஆம் ஆண்டு மேட் மேக்ஸ் 2 படத்தை இயக்கி இருந்தார்.
1985ம் ஆண்டு மேட் மேக்ஸ்: பியோண்ட் தி தண்டர் ஸ்டார்ம் படத்தை இயக்கினார். அதன் பின்னர் ஒரு சில படங்களை இயக்கிய ஜார்ஜ் மில்லர் மீண்டும் 2015ம் ஆண்டு மேட் மேக்ஸ் ஃபியூரி ரோடு படத்தை இயக்கி ஏகப்பட்ட ஆஸ்கர் விருதுகளை அள்ளினார்.

இந்நிலையில், 2024ம் ஆண்டு மீண்டும் ஃபியூரியோஸா: மேட் மேக்ஸ் சாகா படத்தை இயக்கியுள்ளார். இன்று உலகம் முழுவதும் வெளியான அந்த படத்திற்கு ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டின் சிறந்த ஆக்ஷன் படம்: அதிகமாக சிஜி காட்சிகளை பயன்படுத்தாமல் பாலை நிலங்களில் ஒரிஜினலாக ஸ்டன்ட் காட்சிகளை அமைத்து படமாக்குவதில் தான் இயக்குநர் ஜார்ஜ் மில்லர் பலே கில்லாடி. மேட் மேக்ஸ் ஃபியூரி ரோடு படத்தை தொடர்ந்து தற்போது ஹீரோயின் ஃபியூரியோஸாவின் தனிப்பட்ட வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி உள்ள இந்த ஃபியூரியோஸா திரைப்படம் இந்த ஆண்டின் மிகச்சிறந்த ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என ஹாலிவுட் ரசிகர்கள் விமர்சனங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

ஃபியூரியோஸா ஹீரோயினா இது?: ஃபியூரியோஸா படத்தில் உடம்பெல்லாம் மண்ணை பூசிக் கொண்டது போல அழுக்கு சட்டையில் டார்க் மேக்கப்பில் நடித்திருந்த ஹாலிவுட் நடிகை அன்யா டெய்லர் ஜாய் படத்தின் ப்ரீமியர் ஷோவுக்கு அணிந்து வந்த உடையை பார்த்து ரசிகர்கள் ஆடிப் போய் விட்டனர். இந்த பாப்பாவா அப்படி ஆக்ஷனில் தெறிக்கவிட்டு இருக்கு என ரசிகர்கள் சில்லறைகளை சிதற விட்டு வருகின்றனர்.

வில்லனாக தோர்: அவெஞ்சர்ஸ் படங்களில் தோர் கடவுளாக நடித்து மாஸ் காட்டிய கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் இந்த படத்தில் பயங்கர வில்லனாக நடித்து மாஸ் காட்டியுள்ளார். அவர் வரும் காட்சிகள் எல்லாமே தியேட்டரில் பட்டாசாக உள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படமும் பல ஆஸ்கர் விருதுகளை அள்ளும் என்றும் அதன் இசை 2015ம் ஆண்டு வெளியான ஃபியூரி ரோடு படத்தில் இடம்பெற்றதை விட சிறப்பாக உள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஐஎம்டிபி ரேட்டிங்: ஃபியூரியோஸா படத்தை ஐமேக்ஸ் தியேட்டரில் மிஸ் பண்ணாமல் பார்த்துடுங்க என படம் பார்த்த பல ஹாலிவுட் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஐஎம்டிபி ரேட்டிங் 8.1 என 10க்கு உள்ள நிலையில், ஆக்ஷன் பிரியர்களுக்கான தரமான சம்பவமாக இந்த படம் இருக்கும் என தெரிகிறது. ஃபியூரியோஸாவின் சிறு வயதில் நடந்த சம்பவங்களும் தனது வீட்டையும் குடும்பத்தையும் அழித்தவனை பழிவாங்க போராடும் போராட்டமும் தான் கதை என்றாலும் விஷுவல் ட்ரீட்டில் ஆக்ஷன் காட்சிகளில் கண்களை ஸ்க்ரீனை விட்டு நகர்த்த முடியாத அளவுக்கு வெறித்தனமான மேக்கிங்கை செய்துள்ளது தான் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாட காரணம் என்கின்றனர். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே ஹாலிவுட் படங்களுக்கான மவுசு குறைந்து விட்ட நிலையில், ஃபியூரியோஸா இங்கே வசூலை அள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











