ஒரு புல்லட்டால் வரும் பிரச்சினை... கணேசா மீண்டும் சந்திப்போம்! விமர்சனம்
ஒரு புல்லட்டால் ஏற்படும் பிரச்சினை தான் கணேசா மீண்டும் சந்திப்போம் திரைப்படத்தின் கதை.
சென்னை: ஒரு புல்லட் பைக்கால் ஏற்படும் பிரச்சினை, நாயகனை எந்த நிலைக்கு கொண்டு செல்கிறது என்பதை காமெடியாக சொல்கிறது கணேசா மீண்டும் சந்திப்போம் திரைப்படம்.
வெளியூரில் இருந்து சென்னைக்கு வருகிறார் நாயகன் பிரித்வி. அவர் தேடி வந்த காக்கா குமார் எனும் ரவுடி கைதாகி சிறைக்கு சென்றுவிடுகிறார். செய்வதறியாது தவிக்கும் பிரத்விக்கு, ஆட்டோ டிரைவர் கிரேன் மனோகரின் நட்பு கிடைக்கிறது. அவர் மூலம் தீப்பெட்டி கணேசனின் ரூமில் இணைகிறார்.

யாருக்கும் தெரியாமல் திருட்டு வேலைகள் செய்து பணம் சேர்க்கிறார் பிரித்வி. அவரை அவ்வப்போது போனில் தொடர்பு கொள்ளும் சிங்கம்புலி, விரைவாக பணத்தை ரெடி செய்து கொண்டு வரும்படி கூறுகிறார். இதற்கிடையே, பிரித்வியை வலை வீசி தேடுகிறார் வில்லன் கட்டாரி.

சென்னையில் திருட்டு வேலைகள் செய்யும் பிரித்விக்கு ஓவியாவின் நட்பு கிடைக்கிறது. அவரையும் ஏமாற்றி பணம் பறிக்கிறார். ஒருகட்டத்தில் தீப்பெட்டி கணேசன் தனது தங்கை திருமணத்திற்காக கடன் வாங்கி வைத்திருக்கம் ரூ.2 லட்சம் பணத்தை அபேஸ் செய்து கொண்டு புறப்படுகிறார் பிரித்வி. அவர் ஏன் இப்படி எல்லாம் செய்கிறார் என்ற பிளாஷ் பேக்குடன் தொடர்கிறது இரண்டாம் பாதி.

திருட்டுதனம் செய்து முழிப்பது, பதறுவது, காதலியை நினைத்து ஏங்குவது என தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளார் பிரித்வி. ஆக்ஷன் காட்சிகளிலும் நன்றாகவே சண்டை செய்துள்ளார்.
முதல் பாதியில் மட்டும் துணை நடிகை போல் வருகிறார் ஓவியா. 90 எம்எல் படத்தை போலவே இதிலும், தம்மடிப்பது, பீர் குடித்து மட்டையாவது என சகலமும் செய்கிறார். கூடிய விரையில் ஓவியாவை ஐட்டம் சாங் டான்சராக்கி விடுவார்கள் போல தெரிகிறது.

ஹீரோயின் தேவிகாவுக்கு படத்தில் பெரிதாக வேலை எதுவும் இல்லை. கிராமத்து பெண் போல் லட்சணமாக இருக்கிறார். வில்லன் கட்டாரியாக வரும் விஜயன், நன்றாகவே மிரட்டியிருக்கிறார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் கெத்து காட்டுகிறார்.
ஒரு சாதாரண விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதனை சஸ்பென்ஸ் படமாகவும், காமெடி படமாகவும் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ரதீஷ் இரேட். ஆனால் படம் திரில்லிங்காவும் இல்லாமல், காமெடியாகவும் இல்லாமல் சொதப்பலாகிவிட்டது. மோசமான காட்சியமைப்பும், திரைக்கதையும் படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

ஓவியா படத்தை போஸ்டரில் போட்டு ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வந்துவிடலாம் என நினைத்திருக்கிறார்கள். ஆனால் அவரது கதாபாத்திரமும் வலுவாக இல்லாததால், அந்த ஐடியாவும் ஒர்கவுட் ஆகவில்லை.

என்எல்ஜி சிபி இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் தான். பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விபிந்த் வி ராஜ். இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டிருந்தால், சாய் சுரேஷின் படத்தொகுப்பு பேசப்பட்டிருக்கும்.
முழு நீள காமெடி படமாக எடுத்திருந்தால், இந்த கணேசனை மீண்டும் சந்தித்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications











