Gatta Kusthi 2 Review: ’கட்டா குஸ்தி 2’ விமர்சனம்.. புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் நடந்த குஸ்தி எப்படி?
சென்னை: மனைவியின் கோபத்தை கட்டுப்படுத்தும் மருந்து எல்லாம் உலகத்திலேயே கண்டுபிடிக்கவில்லை என்பது தொடங்கி இன்னும் உன்னோட ஆம்பள ஈகோ போகலல என பேசும் வசனம் என பல இடங்களில் அப்ளாஸ் அள்ளுகிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.
விஷ்ணு விஷாலின் பேட்டிக்குப் பிறகு சில விஜய் ரசிகர்கள் படத்துக்கு எதிரான கருத்துக்களை கூறி சோலியை முடிக்க காத்திருந்த நிலையில், தியேட்டரில் அவர்களே எழுந்து டான்ஸ் ஆடும் அளவுக்கு சூப்பரான கில்லி பாடலை வைத்து விஷ்ணு விஷால் தியேட்டர்களை கான்செர்ட்டாக மீண்டும் மாற்ற முடிவு செய்த புத்திசாலித்தனம் தெளிவாக கைகொடுத்துள்ளது.

ஐஸ்வர்யா லட்சுமி முதல் பாகத்தில் ஸ்கோர் செய்த அளவுக்கு 2வது பாகத்தில் ஸ்கோர் செய்தாரா? கடைசியாக புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் இடையே நடக்கும் குஸ்தியில் யார் வெற்றிப் பெற்றார்கள். தொடர்ந்து 2 பெரிய தோல்விகளுக்குப் பிறகு விஷ்ணு விஷாலுக்கு அவர் எதிர்பார்த்த கம்பேக் வெற்றியை இந்த கட்டா குஸ்தி 2 கொடுத்ததா? இல்லையா? என்பது குறித்த விமர்சனத்தை இங்கே பார்ப்போம் வாங்க..
கட்டா குஸ்தி 2 கதை: 2022ம் ஆண்டு வெளியான கட்டா குஸ்தி படத்தை பெருவாரியான ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். பின்னழகு தொடும் வரையிலான கூந்தல் இருக்கும் அடக்க ஒடுக்கமான பெண் வேண்டும் என வீரா (விஷ்ணு விஷால்) முதல் பாகத்தில் தேடிச் செல்ல கீர்த்தியை (ஐஸ்வர்யா லக்ஷ்மி) பார்த்ததும் பிடித்துப் போய் திருமணம் செய்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் வீராவுக்கு பிரச்னை வர தனது உண்மையான மல்யுத்த வீராங்கனை முகத்தை கோயில் சண்டையில் ஐஸ்வர்யா லட்சுமி காட்டும் இடத்தில் இருந்து படம் பிளாஸ்ட் ஆகி முதல் பாகம் வெற்றிப் பெற்றது.
2வது பாகத்திலும் அதே கதாபாத்திரங்கள் தொடர்கின்றன. கிளைமேக்ஸில் வாக்கு கொடுத்தது போல தனது மனைவியை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க வைக்க வீட்டு வேலைகளையும் தனது மகளையும் பார்த்துக் கொண்டு ஹவுஸ் ஹஸ்பண்டாக வீரா மஜா பண்ணுகிறார். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பக்கத்து வீட்டுப் பெண்களுக்கு உதவிகள் செய்வது, அவர்களின் கணவன்மார்கள் கோபப்படுவது என படம் கலாட்டாவாக ஆரம்பிக்கிறது.
கீர்த்தியின் வளர்ச்சியை விரும்பாத கோச், வீராவை வைத்தே கேம் ஆட கீர்த்தியின் மல்யுத்த விளையாட்டு எதிர்காலமே பாதிக்கும் சூழல் உருவாக இருவரும் பிரியும் சூழல் உருவாகிறது. அப்பா மீது பாசமாக இருக்கும் மகள் அம்மாவிடம் செல்ல மறுத்து அப்பாவிடமே திரும்பி வருகிறார். அம்மாவும் அப்பாவும் சேர வேண்டும் என முயற்சிக்கிறார்.
விவாகரத்து வழக்கு நீதிமன்றத்துக்குச் செல்ல அங்கே இருந்து புருஷன் - பொண்டாட்டிக்கு இடையே மேட்ச் வைத்து தீர்ப்பை முடிவுக்கு கொண்டு வரலாம் என கதை நகர கிளைமேக்ஸ் என்ன ஆனது என்பது தான் இந்த கட்டா குஸ்தி 2 படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: இயக்குநர் செல்லா அய்யாவு கட்டா குஸ்தி படத்தை போலவே இந்த படத்தையும் ஜாலியாகவும் கமர்ஷியலாகவும் எடுத்துள்ளார். விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி கெமிஸ்ட்ரி நல்லாவே வொர்க்கவுட் ஆகியுள்ளது. அதைவிட மீனு டீச்சராக வரும் மோக்ஷாவுடன் கெமிஸ்ட்ரி கன்னா பின்னாவென வொர்க்கவுட் ஆகிறது.
விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி கதையை விட கருணாஸ் - லிஸ்ஸி ஆண்டனி இடையே வரும் அரசியல் கதை 2வது பாகத்தில் பலரையும் ரசிக்க வைக்கிறது. ஆணாதிக்க சிந்தனைகளை உடைக்கும் அளவுக்கு இந்த படத்திலும் கருணாஸை வைத்து கச்சிதமான திரைக்கதையை உருவாக்கி டைரக்டர் ஸ்கோர் செய்து கிளாப்ஸ் அள்ளுகிறார்.
தலைவன் தலைவி படத்தை போல நீதிமன்ற காட்சிகளும், விவாகரத்து தொடர்பான காட்சிகளும் கணவன் - மனைவிக்கு நடுவே 3வது நபர் தலையிடக் கூடாது என்கிற விஷயங்கள் மேம்போக்காகவே கடந்து செல்கின்றன.
வீரா - கீர்த்தியின் மகளாக நடித்துள்ள ஜாரா பல இடங்களில் படத்தை தனது க்யூட்டான நடிப்பால் தூக்கி நிறுத்துகிறார். உன்னை பிரிந்து உன் கணவனும் மகளும் சோகத்தில் இருப்பார்கள் என கஜராஜ் சொல்லிவிட்டு குடும்பத்தையே கூட்டி வரும் போது வீட்டில் மீனு டீச்சரை இடுப்பில் தூக்கி வைத்து விஷால் ஆடும் காட்சி தியேட்டர் பிளாஸ்ட் என்று சொல்லலாம்.
மெயின் வில்லனாக காட்டப்படும் கோச்சாக நடித்துள்ள தாரக் பொன்னப்பா பெத்தி படத்தில் பார்த்த அதே வேலையை பார்த்துள்ளார். ஆனால், வில்லன் தொடர்பான காட்சிகள் ரொம்பவே பலவீனமாக கொண்டு செல்லப்பட்டது ஏமாற்றம் தான்.

பிளஸ்: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ் மற்றும் ஜாரா பாப்பா படத்திற்கு பெரும் பலமாக உள்ளனர். சில காமெடி காட்சிகள் கச்சிதமாக ஒர்க்கவுட் ஆகியுள்ளன. விஜய்யின் கில்லி பட பாடல் காட்சி 2 இடங்களில் வருவதும் அவை படமாக்கப்பட்ட விதமும் படத்திற்கு கண்டிப்பாக நிறைய ஆடியன்ஸை வரவழைக்கும். படத்தின் தொடக்கத்தில் இடம்பெற்ற சம்பவக்காரி, 2ம் பாதியில் வரும் மகள் குறித்த பாடல்கள் மூலம் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சம்பவம் செய்துள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி குஸ்தி வீராங்கனையாக வரும் இடங்களிலும் கிளைமேக்ஸிலும் தூள் கிளப்புகிறார். பெண் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே தற்காப்பு பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும் என சொல்லும் இடங்கள், என் பொண்டாட்டி கை நாட்டு என சொல்ல ரத்னம் (கருணாஸ்) மனைவியாக நடித்த லிஸ்ஸி ஆண்டனி ஆங்கிலம், இந்தி என பேசி அசத்தும் காட்சிகள் படத்திற்கு பெரிய பலமாக மாறியுள்ளன.
மைனஸ்: கட்டா குஸ்தி படத்தில் ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொடுக்கப்பட்ட அளவுக்கு முக்கியத்துவம் 2ம் பாகத்தில் அவரை சுற்றி கதை நகர்ந்தாலும் பல நேரங்களில் அவர் காணாமல் போவது போன்ற உணர்வையே தருகிறது. விஷ்ணு விஷாலை சுற்றியே படம் நகர்வது போன்ற உணர்வும் ஏற்படுகிறது. மேலும், ரம்யா கிருஷ்ணனின் கேமியோ காட்சி வரும் வரை என்கேஜிங்காக சென்றுக் கொண்டிருந்த படம் திடீரென வலிய திணிக்கப்பட்ட குஸ்தி காட்சிகள் என அவசர அவசரமாக படத்தை முடிக்கும் நோக்கில் நகர்வது மைனஸ் ஆக மாறுகிறது. சில பல குறைகள் இருந்தாலும் மொத்தமாக பார்க்கும் போது ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தை விஷ்ணு விஷால் கொடுத்து வசூல் வேட்டை நடத்தப் போகிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications