Guntur Kaaram Review: குண்டூர் காரம் விமர்சனம்.. சங்கராந்தி ரேஸில் சறுக்கிய மகேஷ் பாபு.. காரம் கம்மி
நடிகர்கள்: மகேஷ் பாபு, ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ரம்யா கிருஷ்ணன்
இசை: தமன்
இயக்கம்: திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்
ரேட்டிங்:
சென்னை: இந்த மகர சங்கராந்திக்கு தெலுங்கில் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் மற்றும் ஹனுமான் உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன. கீதகோவிந்தம் படம் போல ஒரு படம் பண்ணலாம் என பரசுராமிடம் சென்ற மகேஷ் பாபுவுக்கு சர்காரு வாரி பாட்டா தான் கிடைத்தது. அடுத்து அலா வைகுந்தபுரமுலோ படம் போல ஒரு பெரிய ஹிட் படம் கொடுப்பார் என திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸை நம்பிய நிலையில், அவரும் மகேஷ் பாபுவை பெரிதும் ஏமாற்றி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
அத்தாரண்டிகி தாரேதி, அலா வைகுந்தபுரமுலோ படங்களை போல இதுவும் ஃபேமிலி என்டர்டெயினர் படம் தான். ஆனால், திரைக்கதையில் பல இடங்களில் பார்த்து பார்த்து புளித்துப்போன கதை எந்தவொரு சுவாரஸ்யமும் இல்லாமல் நகரும் போது ரசிகர்களை டென்ஷன் ஆக்குகிறது. தமிழில் விஜய்க்கு சரியாக படங்கள் அமையாதது போலவே மகேஷ் பாபுவும் தெலுங்கில் தடுமாறி வருகிறார்.

குண்டூர் காரம் கதை: சட்ட அமைச்சராக இருக்கும் வைர வசுந்தரா (ரம்யா கிருஷ்ணன்) தனது கணவர் ஜெயராம் மற்றும் மகன் மகேஷ் பாபுவை தனது அப்பா பிரகாஷ் ராஜ் சூழ்ச்சியால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். ரமணா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மகேஷ் பாபு மீண்டும் தனது அம்மாவின் வாழ்க்கைக்குள் செல்லும் போது பல ரகசியங்களை தெரிந்து கொள்வதும் மீண்டும் தனது குடும்பத்தை சேர்க்க போராடுவதும் தான் இந்த படத்தின் கதை.

மகேஷ் பாபு மாஸ்: தியேட்டருக்கு யாரை பார்க்க ரசிகர்கள் செல்கின்றனரோ அதில் கொஞ்சம் கூட குறை வைக்காமல் மகேஷ் பாபு இந்த சாதாரண கதையில் தனது மொத்த உழைப்பையும் கொட்டி நடித்து அசத்துகிறார். ஆனால், டைட்டிலுக்கு ஏற்ற காரம் இல்லதது தான் படத்தின் மிகப்பெரிய குறையாக மாறி நிற்கிறது.
பிளஸ்: தமனின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் சிறப்பு. தேவையில்லாமல் பல பாடல்கள் ஸ்ரீலீலாவின் நடனத் திறமைக்கான காம்பெடிஷன் ஷோவாக மாறி நிற்பது கடுப்பை கிளப்பினாலும் மசாலா படத்தில் அதுதான் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது. இன்னொரு ஹீரோயினாக மீனாட்சி சவுத்ரி கொடுத்த கதாபாத்திரத்தை குறைவு இல்லாமல் நடித்து விட்டு செல்கிறார். ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ஜெயராம் நடிப்பு பற்றி சொல்லத் தேவையில்லை. வழக்கம் போலவே நிறைவான நடிப்பை தந்துள்ளனர்.

மைனஸ்: திரிவிக்ரம் தான் கதை மற்றும் திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார். ஃபேமிலி டிராமா படங்களில் சிக்ஸர் அடிக்கக் கூடியவர் இந்த முறை படப்பிடிப்பின் போது நடந்த ஏகப்பட்ட பிரச்சனை காரணமாக சறுக்கி விட்டாரா என தெரியவில்லை. சிங்கிள் சிங்கிளாகவே ஸ்கோர் செய்துள்ளார். மகேஷ் பாபு ரசிகர்கள் எப்படி இருந்தாலும் படத்தை தியேட்டரில் பார்த்து விடுவார்கள். ஒட்டுமொத்த ரசிகர்களையும் குண்டூர் காரம் கவருமா? என்றால் அது சந்தேகம் தான். அடுத்து ராஜமெளலி படம் தான் மகேஷ் பாபுவை காப்பாற்ற வேண்டும். சலார் படத்தின் வசூலை குண்டூர் காரம் தாண்டுவது கஷ்டம் தான் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











