ஹபீபி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?.. இவரே பாராட்டிருக்காரே பாஸ்!
சென்னை: மீரா கதிரவன் இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஹபீபி. மாளவிகா மனோஜ், ஈஷா, கஸ்தூரி ராஜா என பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் பற்றி இயக்குநர்கள் வெற்றிமாறன், ராம் ஆகியோர் ஏகத்துக்கும் புகழ்ந்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தப் படம் குறித்து பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
விழித்திரு, அவள் பெயர் தமிழரசி உள்ளிட்ட ஃபீல் குட் படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் மீரா கதிரவன். அவரது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ஹபீபி. இஸ்லாமிய வாழ்வியலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. ரசிகர்களுக்கு படம் ரொம்பவே பிடித்திருப்பது முதல் காட்சி முடிவில் தெரிந்தது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் வீடியோ: அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "இந்தப் படத்தின் மீது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், நம்பிக்கை இல்லாமல்தான் போய் பார்த்தோம். ஆனால் படம் ஆரம்பித்து பத்து, பதினைந்து நிமிடங்களுக்குள்ளேயே நம்மை கதைக்குள் அழைத்து சென்று விடுகிறார்கள். அந்த அளவுக்கு இந்தக் கதையை உயிரோட்டமாக சொல்லியிருந்தார்கள். படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை இடையில் ஃபோனை எடுக்கவே தோன்றவில்லை. அந்த அளவுக்கு சுவாரஸ்யமாக சொல்லியிருந்தார்கள். இதை ஒரு காதல் கதை என்று மட்டும் சொல்ல முடியாது.
காதல் படமெல்லாம் இல்லை: காதல் மட்டுமே செய்துகொண்டிருந்தால் சோற்றுக்கு என்ன செய்வது. தொழில் ரீதியான பிரச்னையை படத்தில் சொல்லியிருக்கிறார்கள். எனவே தொழில் சார்ந்த குடும்ப பிரச்னைதான் படமா என்று கேட்டால் அதுவும் இல்லை. இது இரண்டையும் சரி சமமாக சொல்லியிருக்கிறார்கள். அதுதான் இந்தப் படத்தின் வெற்றி. இதில் ஏதோ ஒன்றை தூக்கி, இறக்கியிருந்தால் இது ஒரு டிவி ட்ராமா போல் ஆகியிருக்கும். இது இரண்டையுமே க்ரிப்பாக கொண்டு போயிருக்கிறார்கள். டெக்னிக்கலாகவும் ஸ்ட்ராங்தான். அதனால்தான் ஒரு சினிமாவாக இன்ட்ரெஸ்ட்டிங்கோடு வந்திருக்கிறது.
அனைத்துமே அருமை: இஸ்லாமிய குடும்பத்தில் நடக்கும் சடங்குகளை எல்லாம் மறைமுகமாக கேமரா வைத்து எடுத்தது மாதிரி அவ்வளவு உண்மையாக, இயல்பாக இருக்கிறது. நேரில் பார்த்த மாதிரியே இருந்தது. எடிட்டிங்கும், பின்னணி இசையும் பிரமாதமாக அமைந்திருந்தது. படத்தில் நடிகர், நடிகைகளின் தேர்வு அபாரம். அவர்களும் அருமையாக நடித்திருந்தார்கள். ஐந்து வயது மகனுக்கு சுன்னத் செய்வதிலிருந்து அவனுக்கு முடி நரைக்கும்வரையிலான காலகட்ட கதை. படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சித்தி, சித்தப்பா எல்லோரும் இருப்பார்கள். அவர்களது ட்ராஸ்ஃபர்மேஷன் அருமையாக இருந்தது.
திரைக்கதை சுவாரஸ்யம்: சித்தி கேரக்டரில் நடித்திருந்தவர் சூப்பராக நடித்திருக்கிறார்.முக்கியமான கேரக்டரில் கஸ்தூரி ராஜா நடித்திருந்தார். ஆரம்பத்தில் உறுத்தலாக இருந்தாலும் பிறகு ரசிக்க வைத்துவிட்டார். இது கற்பனை கதை கிடையாது. நம் வீட்டிலோ, பக்கத்து வீட்டிலோ நடக்கும் கதை. இதில் எதை மட்டும் சொன்னால் போதும் என தீர்மானத்தோடு சொன்னது, அதை தத்ரூபமாக எடுத்தது, காதல் சீன்கள், குடும்ப பிரச்னைகள் எல்லாம் நம்மை கனெக்ட் செய்து கொண்டு போனது. ஸ்க்ரீன் பிளேவிலும் சுவாரஸ்யம் இருந்தது.
குடும்பத்தோடு பார்க்கலாம்: சுவாரஸ்யமான சீன்கள் படம் முழுக்க இருந்தன. க்ளைமேக்ஸ் மட்டும் வேறு வழியில்லாமல் வம்படியாக முடித்தது மாதிரி இருந்தது. அப்படித்தான் செய்ய முடியும். வேறு வழியில்லை. இஸ்லாமியர்களை வழக்கமாக, 'கறி கடை பாயாக காண்பிப்பார்கள். இல்லையென்றால் ரத்த களறியாக தீவிரவாதியாக காண்பிப்பார்கள். ஆனால் இதில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தோடு 40 வருடங்கள் வாழ்ந்த மாதிரியான அனுபவம் கிடைக்கும். வித்தியாசமான படங்களை தேடி தேடி பார்க்கக்கூடியவராக இருந்தால் இது முக்கியமான படமாக இருக்கும். தாராளமாக குடும்பத்தோடு பார்க்கலாம்" என்றார்.


Click it and Unblock the Notifications
