Happy Raj Public Review: தியேட்டருக்கு வந்து ஹாப்பியா பார்த்துட்டு போலாம்.. ஹாப்பி ராஜ் மக்கள் விமர்சனம்!
சென்னை: மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள ஹாப்பி ராஜ் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில், படத்தை பார்த்த மக்கள் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் தொடர்ந்து சுமாரான படங்களை கொடுத்து ரசிகர்களை கடுப்பேற்றிய நிலையில், இந்த படத்தை அதே போல நினைத்து யாரும் மிஸ் பண்ணிடாதீங்க, கண்டிப்பா தியேட்டருக்கு வந்து பாருங்க, உங்களுக்கு பிடிக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கடந்த வாரம் கென் கருணாஸின் யூத் படம் எந்தளவுக்கு ரசிகர்களை கவர்ந்ததோ அதை விட பல மடங்கு இந்த படம் உங்களை கவரும் என்றும் கண்டிப்பாக ஏமாற்றாது என்றும் இந்த படத்தின் மெயின் ஹீரோவே ஜார்ஜ் மரியன் தான் என்றும் ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர்.
அப்பா - மகன் சென்டிமென்ட்: சிறு வயதில் அப்பாவின் தோற்றத்தை எல்லாம் குழந்தைகள் பெரிதாக கண்டுக் கொள்ள மாட்டார்கள். அவர்களை தான் தங்களின் முதல் ஹீரோவாக பார்ப்பார்கள். ஆனால், குழந்தைகள் வளர வளர அப்பாவை காமெடி பீஸாகவும், வில்லனாகவும் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், எவ்வளவு வயதானாலும் தங்கள் குழந்தைகளை தகப்பன்கள் குழந்தையாகவே பார்ப்பார்கள் என்றும் குழந்தைகளும் அப்பாவை உருவ அமைப்பு, அழகு எல்லாம் வைத்து பார்க்கக் கூடாது என்றும் மற்றவர்கள் கிண்டல் செய்கிறார்கள் என அசிங்கப்படக் கூடாது என்கிற ஆழமான கருத்தை இந்த படம் சொல்லியிருப்பதாக ரசிகர் ஒருவர் படத்தை பாராட்டியுள்ளார்.

ஹாப்பியா பார்க்கலாம்: ஜி.வி. பிரகாஷ் குமார் ரீலோடிங் தான் இந்த படத்தில், முதல் பாதி முழுக்கவே ஜென்ஸி கிட்ஸை கவரும் விதத்தில் ஹாப்பியாக படத்தை ஜாலி மூடில் கொண்டு சென்றுள்ளனர். 2ம் பாதியில் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் விதமாக எமோஷனல் காட்சிகளையும் கிராமத்து அழகையும் காட்டி படத்தை அருமையாக கொடுத்துள்ளனர். கண்டிப்பாக தியேட்டருக்கு குடும்பத்தோடு வந்து ஹாப்பியா இந்த படத்தை பார்க்கலாம் என இன்னொரு ரசிகர் கூறியுள்ளார்.
ஜார்ஜ் மரியன் தான் ஹீரோ: கைதி, மஞ்சுமெல் பாய்ஸ், டிராகன் என தொடர்ந்து ஜார்ஜ் மரியனுக்கு நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்து வரும் நிலையில், அந்த படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் விதமாக ஹாப்பி ராஜ் படம் அமைந்துள்ளது என்றும் இந்த படத்தில் அவர் தான் ரியல் ஹீரோ என்றும் ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கூறி வருகின்றனர். இன்று மாலை மற்றும் இரவு நேர காட்சிகளின் டிக்கெட் புக்கிங் மக்கள் விமர்சனத்துக்குப் பிறகு அதிகரித்து வருகிறது. சனி மற்றும் ஞாயிறு வசூல் அதிகரித்தால் ஹாப்பி ராஜ் படமும் அடுத்த வெற்றிப் படமாக மாறிவிடும்.


Click it and Unblock the Notifications











