Hari Hara Veera Mallu Review: ஹரி ஹர வீர மல்லு விமர்சனம்.. கோஹீனூர் வைரத்தை மீட்டெடுத்தாரா பவன் கல்யாண்?
ஹைதராபாத்: கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் பவன் கல்யாண், நிதி அகர்வால் நடிக்க ஆரம்பித்த ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் சுமார் 5 ஆண்டுகள் கால தாமதத்திற்கு பிறகு பல தடைகளை கடந்து இயக்குநர் மாற்றப்பட்டு, ஜோதி கிருஷ்ணா கடைசியாக இந்த படத்தை முடித்துக் கொடுக்க இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.
ஏ.எம். ரத்னம் மற்றும் தயாகர் ராவ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி தியோல், சத்யராஜ், சுனில், அனுசுயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இசையில் பாடல்களும் பிஜிஎம்மும் படத்துக்கு மிகப்பெரிய உயிரோட்டத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

250 கோடி முதல் 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இந்த படத்தில் என்ன என்ன நிறைகள் உள்ளன, என்ன என்ன குறைகள் உள்ளன என்பது குறித்த முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
ஹரி ஹர வீர மல்லு கதை: 1600களில் இந்த படத்தின் கதை நடக்கிறது. ராபின்ஹுட் போல நவாப் ஆட்களிடம் இருந்து திருடும் பொருட்களை ஏழை மக்களுக்கு கொடுத்து மக்கள் தலைவனாக வாழ்ந்து வருகிறார் வீர மல்லு (பவன் கல்யாண்). நவாபுக்கு செல்ல வேண்டிய வைரங்களையும் அவர் கொள்ளையடித்து வருகிறார். பஞ்சமியை (நிதி அகர்வால்) பார்த்ததும் அவள் மீது காதலில் விழுகிறார். அதுவே அவருக்கு ஆபத்தாகவும் முடிகிறது. வைரங்களை திருடும் போது, வஞ்சகத்தால் நவாப்பிடம் மாட்டிக் கொள்கிறார். ஆனால், இவரது திருடும் திறமையை கண்டு பூரித்துப்போன நவாப், இவனை வைத்து இங்கே இருந்து டெல்லிக்கு திருடப்பட்ட நம்முடைய கோஹினூர் வைரத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என அவுரங்கசிப்பிடம் (பாபி தியோல்) இருந்து கோஹீனுர் வைரத்தை திருட அனுப்பி வைக்கப்படுகிறார். அவுரங்கசிப்பிடம் இருந்து கோஹீனூர் வைரத்தை மீட்டுக் கொண்டு வந்தாரா? அவுரங்கசிப்புக்கும் ஹரி ஹர வீர மல்லுவுக்கும் உள்ள முன் பகை என்ன? அவருடைய தனி மிஷன் என்ன? என்பது தான் இந்த படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: பவன் கல்யாண் பல வருடங்களுக்குப் பிறகு ஒட்டுமொத்த படத்தையும் தனது தோளில் தாங்கி நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளிலும், 2ம் பாதியில் வரும் சனாதன தர்மம் தொடர்பான எமோஷன் காட்சிகளிலும் தனது நடிப்பால் அப்ளாஸ் அள்ளுகிறார். நிதி அகர்வாலுடன் காதல் செய்வது, மக்களுக்கு உதவுவது என வழக்கமான ஹீரோயிசத்தையும் பொளந்துக் கட்டி நடித்துள்ளார். கிளாமர் பொங்க நிதி அகர்வால் குறைவான காட்சிகளில் வந்தாலும், திரையை தேவ லோகத்து ரம்பை போல ஆளுகிறார்.
அவுரங்கசிப் கதாபாத்திரம் குறித்து இந்த ஆண்டு வெளியான சாவ்வா படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் அவுரங்கசிப் கதாபாத்திரம் வருகிறது. இந்துக்களுக்கு எதிராக அவர் போட்ட ஜிஸ்யா வரி குறித்தும் இந்த படம் பேசிய விதம் இந்துக்களை நிச்சயம் கவரும். பாபி தியோல் அவுரங்கசிப்பாக அலட்டல் இல்லாமல், அற்புதமாக நடித்து தனது வில்லத்தனைத்தை காட்டியிருக்கிறார்.
பிளஸ்: ஆர்ஆர்ஆர் படத்துக்காக ஆஸ்கர் வென்ற கீரவாணி இந்த படத்துக்கு பாடல்களையும் பின்னணி இசையையும் தரமாக கொடுத்துள்ளது பெரிய பிளஸ். ஆரம்பத்தில் இருந்தே படத்தை பவன் கல்யாண் தனது ஹீரோயிசத்தால் தாங்குகிறார். படத்துக்கு தேவையான பட்ஜெட்டை ஏ.எம். ரத்னம் தாராளமாக ஒதுக்கி ஸ்கோர் செய்துள்ளார். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் எல்லாம் அட்டகாசம்.
மைனஸ்: முதல் பாதி படம் விறுவிறுப்பாக சென்ற நிலையில், 2ம் பாதியில் தேவையற்ற சில இழுழையான காட்சிகள் திணிக்கப்பட்டதை போன்ற உணர்வுகளை கொடுக்கின்றன. மேலும், பெரிய பட்ஜெட் என்று சொல்லப்படும் இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள், சமீபத்தில் வெளியான தெலுங்கு படங்களின் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் அளவுக்கு இல்லாதது மிகப்பெரிய மைனஸ் ஆக உள்ளது. மொத்தத்தில் இந்த படம் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட். சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களை பார்க்க விரும்பும் மக்களுக்கும் ஒருமுறை தியேட்டரில் பார்க்கக் கூடிய படம் என்று டதாராளமாக சொல்லலாம்.


Click it and Unblock the Notifications











