Heads Of State Review: அமெரிக்க ஜனாதிபதியையும் இங்கிலாந்து பிரதமரையும் இதுக்கு மேல கலாய்க்க முடியாது!
லாஸ் ஏஞ்சல்ஸ்: நம்ம ஊரில் இன்னமும் ஹீரோ என்றால் ஒன்று போலீஸாக இருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ரவுடி அல்லது கேங்ஸ்டராக இருக்க வேண்டும் என்றே பலரும் நடித்து வருகின்றனர். ஒரு சில படங்கள் மட்டுமே ஹீரோக்களுக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை வழங்க அந்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்கின்றன.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த மாதம் வெளியான ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட் திரைப்படத்தில் இட்ரிஸ் எல்பாவுக்கு பிரிட்டிஷ் பிரைம் மினிஸ்டர் பதவியையும் WWE சாம்பியன் ஜான் சீனாவுக்கு அமெரிக்க அதிபர் பதவியும் கொடுத்து கூடவே பிரியங்கா சோப்ராவை ஆக்ஷன் ஹீரோயினாகவும் பிரிட்டிஷ் பிரதமரின் காதலியாகவும் வைத்து கதை எழுதிய இடத்திலேயே இயக்குநர் ஸ்கோர் செய்து விட்டார்.

காமெடியாக ஒரு ஆக்ஷன் அரசியல் படம் பார்க்க வேண்டுமென்றால் இந்த படத்தை ஓடிடியில் ரசிகர்கள் தாராளமாக ட்ரை பண்ணலாம். சரி, ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட் திரைப்படத்தின் நிறை, குறைகள் என்ன என்ன என்பது குறித்து விவரமாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட் கதை: உலகையே கட்டி ஆண்டு கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகம் இருந்தாலும் நேட்டோ அமைப்பு மாநாட்டுக்காக அவர்கள் இருவரும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பயணிக்கின்றனர். ஆக்ஷன் ஹீரோவாக இருந்து அமெரிக்க அதிபதியாக மாறிய வில் டெரிங்கர் கதாபாத்திரத்தில் ஜான் சீனா கலக்கியுள்ளார். அந்த காரணத்திற்காகவே அவரை பிரிட்டிஷ் பிரதமரான சாம் கிளார்க் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இட்ரிஸ் எல்பா கலாய்த்துக் கொண்டே இருக்கிறார்.
ஆரம்பத்தில் தக்காளி திருவிழா நடைபெறும் இடத்தில், ஒரு மோஸ்ட் வான்டட் வில்லனை பிடிக்க பிரியங்கா சோப்ராவும் அவரது டீமும் ஸ்னைப்பர் எல்லாம் வைத்துக் கொண்டு பக்கா பிளான் போட்டு காத்துக் கொண்டிருக்க படத்தின் மெயின் வில்லனாக வரும் பேடி கான்ஸ்டின் பிரியங்கா சோப்ராவின் பிளானை முறியடிப்பது மட்டுமின்றி அவரது மொத்த டீமையும் சுட்டு வீழ்த்துகிறார். ஸ்பெயின் தக்காளி திருவிழாவில் ரத்த ஆறு ஓடுகிறது. ஆரம்பத்திலேயே பிரியங்கா சோப்ராவையும் போட்டுத் தள்ளுகின்றனர்.
அடுத்து, அமெரிக்க அதிபரையும் பிரிட்டிஷ் பிரதமரையும் போட்டுத்தள்ள விமானத்தில் வில்லன் போடும் பிளானில் இருந்து இருவரும் எஸ்கேப் ஆக, தங்கள் இருவரையும் ஒரே விமானத்தில் செல்ல வைத்து தீர்த்துக் கட்ட முடிவெடுத்த கருப்பு ஆடு யாரு என்பதை கண்டுபிடிக்க, இருவரும் ஆக்ஷன் ஹீரோக்களாக மாறுவதும் அவர்கள் ஓரிடத்தில் சிக்கிக் கொள்ள திடீரென அங்கே பிரியங்கா சோப்ரா வந்து காப்பாற்றுவதும் அதன் பின்னர் என்ன ஆனது என்பது தான் இந்த படத்தின் கதை.

காமெடி + அரசியல் + ஆக்ஷன் கலாட்டா: வெள்ளை மாளிகை என நிறத்தை வைத்து பெயர் வைத்து இருப்பது குறித்தும் ஓவல் பில்டிங் என வடிவத்தை வைத்து பெயர் வைத்திருப்பதையும் பங்கமாக கலாய்க்கும் இடங்களில் எல்லாம் வசனகர்த்தாவின் அரசியல் நய்யாண்டி ஆழமாகவும் அழகாகவும் வெளிப்பட்டு இருக்கிறது.
ஆரம்பத்தில் பிரியங்கா சோப்ராவை வைத்து தக்காளி திருவிழாவில் நடைபெறும் ஆக்ஷன் பிளாக், விமானத்தில் நடக்கும் ஏவுகணை தாக்குதலில் இருந்து இட்ரிஸ் எல்பா மற்றும் ஜான் சீனா இருவரும் தப்பிப்பது. ஆரம்பத்தில் முட்டிக் கொண்ட இருவரும் ஒன்றாக இணைந்து தங்களையும் உலகத்தையும் காப்பாற்ற போராடுவது என ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து அதகளம் செய்துள்ளனர்.
பார்க்கலாமா? வேண்டாமா?: பிரியங்காவின் ஆடையில் மட்டுமே கொஞ்சம் தாராள கவர்ச்சியை காட்டியுள்ளனர். இட்ரிஸ் எல்பாவுடன் ஒரு முத்தக் காட்சி உள்ளது. அதைத் தாண்டி ஆக்ஷன் விரும்பிகளை திருப்திப்படுத்தும் வகையில் பிரம்மாண்ட ஸ்டன்ட் காட்சிகள், பிரியங்காவின் அதிரடி சண்டைக் காட்சிகள் என அனைத்து வயதினரையும் கவரும் படமாகவே உள்ளது. தமிழ் மொழியிலும் பக்காவாக டப் செய்யப்பட்டுள்ள நிலையில், தாராளமாக ஓடிடியில் இந்த படத்தை பார்க்கலாம். நம்பியார் காலத்து வில்லன் டெக்னிக் போல, கிளைமேக்ஸில் வைஸ் பிரெசிடன்ட் பார்த்த வேலை, மெயின் வில்லன் அனைத்து தலைவர்களும் இருக்கும் இடத்தில் அதிபர்களை கொல்ல முயல்வது எல்லாம் ரொம்ப ஓவர் ரகம் தான்.


Click it and Unblock the Notifications











