பாலாவின் வணங்கான் எப்படி இருக்கு?.. அடக்கி வாசித்த ப்ளூ சட்டை மாறன்.. விமர்சனம் இதோ
சென்னை: பாலா இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்த வணங்கான் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து பாலா இயக்கிய படம் திரையரங்குகளில் வெளியாவதால் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் படம் பார்க்க சென்றார்கள். படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. இந்நிலையில் பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் வணங்கான் படம் பற்றிய தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.
இயக்குநர் பாலா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர். சேதுவில் அறிமுகமான அவர் 25 வருடங்களை சினிமாவில் நிறைவு செய்திருக்கிறார். ஆனால் இதுவரை 10க்கும் குறைவான திரைப்படங்களே அவர் இயக்கியிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் இருக்கும். இன்றுவரை அவரது பல படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இடையில் சில பிரச்னைகளால் அவர் சின்ன சறுக்கலை சந்தித்தார். குடும்ப வாழ்க்கையிலும் சரி, ஃப்ரொபஷ்னல் வாழ்க்கையிலும் சரி பாலா கொஞ்சம் தடுமாறித்தான் போனார்.

வணங்கான்: சூழல் இப்படி இருக்க சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை ஆரம்பித்தார் பாலா. ஆனால் இரண்டு பேரும் அந்தப் படத்தில் சேர்ந்து பணியாற்ற முடியவில்லை. இதனையடுத்து அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை தொடர்ந்தார். இதில் அருண் விஜய்யுடன் ரோஷினி பிரகாஷ், ரிதா, மிஷ்கின், சமுத்திரகனி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கின்றனர். பாடல்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க; சாம் சி.எஸ். பின்னணி இசையை அமைத்திருக்கிறார்.
நேற்று ரிலீஸ்: இந்தப் படமானது நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது. கேடிஎம் பிரச்னையால் தமிழ்நாட்டில் படமானது கொஞ்சம் தாமதமாகத்தான் ரிலீஸானது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர். அதிலும் வழக்கமான பாலா படமாகத்தான் இது இருக்கிறது; க்ளைமேக்ஸில் வழக்கம்போல் ஒரு மரணத்தை வைத்துவிடுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. அதேசமயம் படம் மொக்கையெல்லாம் இல்லை; சில காட்சிகள் உண்மையில் அதிரவைக்கின்றன என்றும்; அருண் விஜய்க்கு இந்தப் படம் கரியர் பெஸ்ட் என்றும் கூறிவருகிறார்கள்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் வணங்கான் படம் பற்றிய விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் முன் வைத்திருக்கிறார். அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் விமர்சனத்தில், "வணங்கான் படம் ஆரம்பித்து கதைக்குள்ளேயே ரொம்ப லேட்டாகத்தான் செல்கிறார்கள். எவ்வளவு லேட் என்றால் இடைவேளை காட்சிக்கு பத்து நிமிடங்களுக்கு முன்புதான். அதுவரை ஹீரோவை ஹீரோயின் காதல் செய்வது போன்ற பல காட்சிகள் இருக்கின்றன. அதேசமயம் இரண்டாம் பாதி க்ரிப்பாக செல்கிறது.
எப்படி இருக்கு: இரண்டாம் பாதியில் அடுத்து என்ன அடுத்து என்ன என்ற சுவாரஸ்யம் இருக்கிறது. சமுத்திரகனி ரோல் நன்றாக இருக்கிறது. அருண் விஜய்க்கு இது நல்ல படம். மிக பிரமாதமாக நடித்திருக்கிறார். அதேபோல் அவருக்கு தங்கையாக நடித்தவரும் சூப்பராக நடித்திருக்கிறார். அதேசமயம் படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன. அதுவும் சிறைக்குள்ளேயே வந்து கைதியை மற்றவர்கள் சந்திப்பது போன்ற காட்சியை எல்லாம் பாலாவின் படத்தில் எதிர்பார்க்கவே இல்லை.
சண்டை காட்சிகள் நன்றாக இருக்கின்றன. வழக்கமான பாலா பட சண்டை காட்சிகள்தான் என்றாலும் நன்றாக எடுத்திருக்கிறார்கள். முதல் பாதியில் சில காட்சிகளுக்கு பதிலாக கதைக்கு சம்பந்தப்பட்ட காட்சிகளை வைத்திருந்தால் இந்தப் படத்தை சூப்பர் படம் என்றே சொல்லலாம். இந்தப் படம் ஓகே ரகமான படம்தான்"" என்றார்.


Click it and Unblock the Notifications











