உண்மையிலேயே ரசிகர்களுக்கு ரணம்தானா?.. வைபவ் நடித்திருக்கும் ரணம் அறம் தவறேல் விமர்சனம்
நடிகர்கள்: வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா
இசை: அரோல் கரோலி
நேரம்: 2 மணி நேரம் ஒரு நிமிடம்
இயக்கம்: ஷெரிஃப்
சென்னை: ஷெரிஃப் என்பவர் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ரணம் அறம் தவறேல். படமானது கடந்த 23ஆம் தேதி வெளியானது. வைபவ்வுக்கு இந்தப் படம் கண்டிப்பாக ஹிட் படமாக அமைய வேண்டும் என்று அவர் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். படம் எப்படி இருக்கிறது என்பதை இதில் பார்க்கலாம்.
வெங்கட் பிரபு டீமில் ஒருவர் வைபவ். ஹீரோவாகவும் நடித்துவருகிறார். இருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் படம் அவருக்கு இதுவரை கிடைக்கவில்லை. தற்போது அவர் ஷெரிஃப் இயக்கத்தில் ரணம் அறம் தவறேல் படத்தில் நடித்திருக்கிறார். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் அவர். அவர் எதிர்பார்த்த ரிசல்ட் அவருக்கு கிடைத்து திருப்தியை கொடுத்ததா; ரசிகர்களுக்கு திருப்தியை கொடுத்ததா என்பதை பார்க்கலாம்.

என்ன கதை: சிதைந்த சடலங்களுக்கு முகம் வரைந்துகொடுக்கும் கலைஞர் (வைபவ்) தனது காதல் மனைவியை விபத்தில் இழந்து; அந்த விபத்தால் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அடிக்கடி தன்னையே மறக்கும் பிரச்னையில் அவதிப்படுகிறார். தனக்கு இருக்கும் திறமையை வைத்து மாதவரம் காவல் நிலையத்துக்கு க்ரைம் ஸ்டோரி எழுதித்தருபவராகவும் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க சென்னையின் மூன்று இடங்களில் பாதி எரிந்த நிலையில் இருக்கும் மனித உடல் பாகங்களை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போட்டுச்செல்ல; காவல் துறை அதிகாரி தான்யா ஹோப்புடன் களமிறங்கி அந்த நபரையும், கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடித்தாரா என்பதுதான் கதை.
சொதப்பல் திரைக்கதை: க்ரைம் த்ரில்லர் ஒன்றும் தமிழ் சினிமாவுக்கு புதிது இல்லை. ஆனால் திரைக்கதை புதிதாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்த ஜானரில் வரும் படம் தப்பிக்கும். ஆனால் ரணம் - ஆண்மை தவறேல் திரைப்படமோ தப்பிக்காமல் மாட்டிக்கொண்டது. படம் ஆரம்பித்து சில நிமிடங்கள் நிமிர்ந்து உட்கார வைத்தாலும் நேரம் செல்ல செல்ல வழக்கமான கமர்ஷியல் கிளிஷேக்களுக்குள் சிக்கிக்கொள்கிறது. சரி அந்த பாதையிலேயே பயணிக்கும் என்று பார்த்தால்; இது க்ரைம் த்ரில்லர் படமாச்சே என்று நியாபகம் வந்ததுபோல் மீண்டும் க்ரைம் ஜானருக்குள் படத்தை கொண்டுவருகிறார் இயக்குநர். இப்படி ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் போல் திரைக்கதையில் தடுமாறுகிறது ரணம்.
நடிகர்கள் எப்படி: மனைவியின் இழப்பு, தனக்கு இருக்கும் உடல் ரீதியான பிரச்னை, சடலங்களுக்கு முகம் வரைவது, கொலை வழக்குகளில் துப்பறிவது போன்ற அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் வைபவ். சிறந்த நடிப்பை வெளிப்படுத்த அவர் முயற்சித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தான்யா ஹோப் எதற்காக படத்தில் வருகிறார் என்றே தெரியவில்லை. காவல் துறை பெண் ஆய்வாளராக வரும் அவர்; அதற்கான மிடுக்கையோ, கம்பீரத்தையோ கொஞ்சம்கூட தன்னுடைய முகத்திலும், உடல் மொழியிலும் காட்டவே இல்லை. அனைத்துக்கும் ஒரே எக்ஸ்பிரஷன். சலிக்கிறது தான்யா. மாற்றிக்கொள்ளுங்கள். தனது மகளை எண்ணி ஏங்கும் இடத்தில் நந்திதா ஸ்வேதா மட்டும் மனதில் நிற்கிறார்.

என்ன பாஸ் லாஜிக்: காவல் துறைக்கு துப்பறிவதில் உதவும் வைபவ் முழுக்க முழுக்க காவல் துறை அதிகாரிபோல செயல்பட்டு அனைத்து வழக்குகளிலும் அவரே ஸ்கோர் செய்வதை பார்க்கும்போது இவர் மஃப்டியில் வந்திருக்கும் போலீஸோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது. அதேசமயம் முதல் பாதியில் கொஞ்ச சீன்களும், ஆங்காங்கே நிகழும் திருப்பங்களும் ஓரளவுக்கு ஓகே. எமோஷனல், சடலங்களுடன் உடலுறவு கொள்பவர்கள் (நெக்ரோபீலியா என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்) என பல முக்கியமான விஷயங்கள் திரைக்கதையில் இருந்தாலும் இயக்குநர் அதை முறையாக விஷுவலைஸ் செய்யாமல் சொதப்பிவிட்டார். படத்துக்கான பங்களிப்பை ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா மட்டும் ஓரளவு கொடுத்திருக்கிறார். மற்றபடி பெரிதாக ஒன்றும் இல்லை. படம் பார்த்த ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்தப் படம் ரணத்தைத்தான் கொடுத்திருக்கும்..


Click it and Unblock the Notifications











