கங்குவா ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. காட்டு மொக்க இல்ல.. காடு காடா போய் மொக்கை படம் எடுத்துருக்காங்க
சென்னை: சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் நேற்று பான் இந்தியா அளவில் வெளியானது. கிட்டத்தட்ட 10,000க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் இந்தப் படம் திரையிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே தங்களது நெகட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகிறார்கள். இந்தச் சூழலில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கங்குவா படத்தின் விமர்சன வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
சூர்யாவின் நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. அதற்கு பிறகு சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார் அவர். சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் சூர்யாவின் ரசிகர்கள் கொஞ்சம் யோசிக்கவே செய்தனர். இருந்தாலும் சிவா அந்த அளவுக்கு ஒன்றும் மோசமான டைரக்டர் இல்லை என்று தங்களுக்கு தாங்களே சொல்லி மனதை தேற்றிக்கொண்டனர்.

ஹை பட்ஜெட்: படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க; தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். திஷா பதானி, பாபி தியோல், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, நட்டி, போஸ் வெங்கட், கோவை சரளா என நட்சத்திர பட்டாளமே கங்குவாவில் களமிறங்கியிருந்தது. மேலும் இந்தப் படம்தான் சூர்யாவின் கரியரிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படம் என்பதும்; 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஒட்டுமொத்த கோலிவுட்டையும் ஆச்சரியப்படுத்தியது.
படம் நேற்று ரிலீஸ்: ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு படமானது நேற்று பான் இந்தியா அளவில் வெளியானது. ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு படம் பார்க்க சென்றார்கள். ஆனால் அவர்களை படம் துளிக்கூட திருப்திப்படுத்தவில்லை. பீரியட் ஜானர், தற்காலத்தில் நடக்கும் கதை என இரண்டு விதமாக கதையை கொண்டுபோன சிவா; மேக்கிங்கிலும், திரைக்கதையிலும் துளிக்கூட அக்கறை காட்டவில்லை. சூர்யாவின் கரியரில் மோசமான படம் என்ற பெயரையும் கங்குவா பெற்றுவிட்டது என்று நெகட்டிவ் விமர்சனங்களையே கொடுத்துவருகின்றனர்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கங்குவா படத்தின் விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார். அவர் தனது விமர்சனத்தில், “சிவாவும் சூர்யாவும் இணைந்து ஒரு படம் எடுக்கப்போகிறார்கள் என்ற அறிவிப்பு வந்ததுமே எங்களுக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. ஏனெனில் சிறுத்தை சிவா மீது அவ்வளவுதான் நம்பிக்கை இருந்தது. அவர் எடுத்த படங்கள் அப்படி. அதேபோல் சூர்யாவும் கடந்த பத்து வருடங்களில் ஜெய்பீம் படம் மட்டும்தான் உருப்படியாக கொடுத்திருக்கிறார். மற்றபடி அவர் கொடுத்த படங்கள் எல்லாம் மோசம்தான்.
காட்டு மொக்கை: எனவே இந்த இரண்டு பேரும் என்ன படம் செய்துவிடப்போகிறார்கள் மொக்கையாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் படத்துக்கு சென்றோம். ஆனால் படம் ஆரம்பித்த பிறகு கொஞ்ச நேரத்தில்தான் தெரிந்தது இது மொக்கை இல்லை காட்டு மொக்கை என்று. அதற்கு முக்கியமான காரணம் ஆரம்பத்தில் காண்பிக்கப்பட்ட கோவா போர்ஷன். அதில் எதுவுமே இல்லை. ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் சொன்ன கதை, யோகிபாபுவும் கிங்ஸிலியும் சேர்ந்து செய்த காமெடியெல்லாம் சகிக்கில.
தேவிஸ்ரீ பிரசாத்: இது போய்க்கொண்டிருக்கும்போதே ப்ளாஷ்பேக் போர்ஷன் போய்விட்டார்கள். அதில் கங்குவா போர்ஷன் வருகிறது. சரி இதிலாவது யார் நேரடி வில்லன், வில்லனுக்கும் ஹீரோவுக்கும் என்ன பிரச்னை என்று சொல்வார்கள் என பார்த்தால் இரண்டு க்ரூப்பும் கத்திக்கொண்டே இருக்கிறார்கள். இந்தப் படத்தில் எல்லோரும் தூங்காமல் இருந்ததற்கு முக்கிய காரணம் தேவிஸ்ரீ பிரசாத்தான். ஏனென்றால் பாத்திர கடைக்குள் புகுந்து எல்லா பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு வந்து தட்டிவிட்டார் போல. ஒரே இரைச்சலாகத்தான் இருந்தது. அதையும் மீறி சிலர் தூங்கிக்கொண்டிருந்தார்கள் என்றால் அவர்கள் எத்தனை கங்குவாவை கடந்து வந்திருக்க வேண்டும்.
காடு காடா போய் மொக்கை: படத்தில் ஒரு சின்ன பையன் வருகிறான். அவன் சின்ன பையனா இல்லை சின்ன பொண்ணா என்றே தெரியவில்லை. அந்த கேரக்டர் கோபித்துக்கொண்டு போய்விடுகிறது. அதை ஹீரோ சமாதானப்படுத்திக்கொண்டே இருக்கிறார். எப்போதான் கதைக்குள்ள வருவார்கள் என்று பார்த்தால் இதுதான் கதை என்று சொல்கிறார்கள். அந்த சின்ன பையனை கொண்டு சென்று ஆராய்ச்சி கூடத்தில் என்ன செய்தார்கள் என்பதற்கு பதில் இல்லை, அந்தப் பையன் ரஷ்யாவிலிருந்து நேராக கோவாவில் இருக்கும் ஹீரோவிடம் எப்படி வந்தான் என்பதற்கு பதில் இல்லை. இதற்கெல்லாம் இரண்டாம் பாகத்தில் பதில் இருக்கும் என்கிறார்கள். தயவு செய்து இரண்டாம் பாகத்தை எடுக்காதீர்கள். இதில் வேறு ஒரு கேமியோ ரோல் வருகிறது. பொதுவாக காட்டு மொக்கை என்பார்கள். ஆனால் இவர்கள் காடு, காடா போய் மொக்கை படம் எடுத்திருக்கிறார்கள்” என்றார்.


Click it and Unblock the Notifications











