»   »  இனிமே நாங்கதான் - விமர்சனம்

இனிமே நாங்கதான் - விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil


நடிப்பு - விச்சு, வரது, வைத்தி, கோவிந்து.
இசை - இளையராஜா
எழுத்து, இயக்கம் - வெங்கி பாபு.
தயாரிப்பு - ஸ்ரீதேவி.

Click here for more images

வித்தியாசமான ஒரு புதிய முயற்சியில் வெளியாகியிருக்கும் அனிமேஷன் படம் இனிமே நாங்கதான். அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் வெங்கி பாபு.

அனிமேஷன், கிராபிக்ஸ் போன்ற வார்த்தைகளுக்கு கோலிவுட்டில் ஒரே அர்த்தம்தான் இருக்கிறது. அதாவது மாயாஜால மந்திரவாத கதைகள், சாமி படங்களில் காட்டப்படும் விதம் விதமான சர்க்கஸ் வித்தைகள் என்ற அளவில்தான் நமது கோலிவுட்டார், அனிமேஷனையும், கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வருகிறார்கள்.

வெள்ளைக்காரன் கண்டுபிடித்த இந்த அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருப்படியான படங்கள் எதுவும் இதுவரை வந்ததாக தெரியவில்லை. ஆனால் அதே கோலிவுட்டில், இப்படிப்பட்ட சமாச்சாரங்கள் இல்லாமல், படு இயல்பாக ஒரு அனிமேஷன் படம் வந்துள்ளது. அதுதான் இனிமே நாங்கதான்.

சர்வதேச தரத்தில் இந்தப் படம் அமைந்துள்ளதுதான் இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம். ஹாலிவுட் அனிமேஷன் படங்களுக்கே சவால் விடும் வகையில் படு பிரமிப்பாக இயக்கியுள்ளார் வெங்கி பாபு.

படத்தில் நான்கு கதாபாத்திரங்கள் வருகின்றன. விச்சு, வரது, வைத்தி மற்றும் கோவிந்து. 93 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் மூலம் அருமையான செய்தியையும் கொடுத்துள்ளார் வெங்கி பாபு.

படத்துக்குப் பெரிய பலமே, மாஸ்ட்ரோ இளையராஜாவின் அருமையான பின்னணி இசையும், அசத்தலான பாடல்களும்தான்.

விச்சு, வரது, வைத்தி, கோவிந்து ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். இசைக் கலைஞர்கள். உள்ளூரில் சிறு சிறு கச்சேரிகளை நடத்திப் பிழைப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் கிடைக்கும் சொற்ப வருமானம் அவர்களுக்குத் திருப்தி தரவில்லை. கடின உழைப்பில்லாமல் குறுகிய காலத்தில் பணக்காரர்களாக வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

ஒரு பாட்டியிடம் போய் ஆலோசனை கேட்கிறார்கள். அவர் ஒரு சுவாமிஜியைச் சொல்லி அவரைப் போய்ப் பார்க்குமாறு கூறுகிறார்.

அந்த சுவாமிஜி மலையில் வசிக்கிறார். அவரிடம் நான்கு பேரும் போகிறார்கள். அவர்களுக்கு உதவ சுவாமிஜி முன் வருகிறார். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை போடுகிறார்.

மலைக் குகையில் விழுந்து விட்ட ஒரு புனிதமான ருத்ராட்சைக் கொட்டையை எடுத்து வந்து தர வேண்டும். அப்படித் தந்தால் பணக்காரர்களாக உதவி செய்வதாக கூறுகிறார்.

இதையடுத்து அந்தக் குகைக்கு நான்கு பேரும் போகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை படு ஜாலியாக சொல்லியுள்ளார் வெங்கிபாபு.

இந்த அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் பாண்டு, வாசு விக்ரம், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் மாறன் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். அதிலும், வாசு விக்ரம் மற்றும் பாண்டுவின் குரல்கள் படு பாந்தமாக பொருந்தியுள்ளன.

ஆனால் படத்தில் இடிப்பது, நான்கு கதாபாத்திரங்களையும் பிராமணர்கள் போல சித்திரித்திருப்பதுதான். அதைத் தவிர்த்திருக்கலாம். அசட்டுத்தனமான, காமெடியான கேரக்டர் என்றாலே பிராமணர்கள்தானா

இளையராஜா பிரமிக்க வைத்திருக்கிறார். அனிமேஷன் படம்தானே என்று நில்லாமல் அழகாக பாடல்களையும் போட்டு அருமையான டியூன்களில் அதை ரசிக்கும்படிக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக உன்னைக் கேள், ஒரு முறை கேட்டால் ஆகிய பாடல்கள் அருமையாக வந்திருக்கின்றன.

குத்ப் பாட்டு, குத்து வெட்டு, அடிதடி, காமம், கவர்ச்சி என உழன்று கொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் இப்படி ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுத்தற்காக வெங்கி பாபுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வித்தியாசமான முயற்சி, அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும்.

Read more about: inime naangathaan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil