Iraivan Blue Sattai Review: “லாஜிக்கே இல்ல... உயிரோட இருக்க ஆசையா..?” இறைவன் ப்ளூ சட்டை விமர்சனம்
சென்னை: ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
ஜெயம் ரவி ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தை அஹமத் இயக்கியுள்ளார்.

சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் இறைவன் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்துள்ள விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
இறைவன் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் இறைவன். மனிதன், என்றென்றும் புன்னகை போன்ற படங்கள் மூலம் பிரபலமான அஹமத், இறைவன் படத்தை இயக்கியுள்ளார். அதேபோல் யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் வெளியான இறைவன் ட்ரெய்லர், படம் மீது அதிக ஏதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், தற்போது இறைவன் வெளியாகி பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில், இந்தப் படம் குறித்து விமர்சனம் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், உயிரோட இருக்க ஆசைப்பட்டால் இறைவன் படம் பார்க்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். அதாவது, ஹீரோ ஜெயம் ரவியும் அவரது நண்பரும் போலீஸ் ஆபிஸராக வேலை பார்த்து வருகின்றனர். அவங்க ஏரியாவில் அடிக்கடி இளம் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கு காரணமான சீரியல் கில்லரை பிடிக்கச் செல்லும் போது, ஜெயம் ரவியின் நண்பர் உயிரிழந்து விடுகிறாராம்.

அதனால், ஹீரோ ஜெயம் ரவி தனது போலீஸ் வேலையை விட்டுவிட்டு, நண்பரின் குடும்பத்தோடு செட்டில் ஆகிவிடுகிறாராம். திரும்பவும் அதேபோல் சீரியல் கொலைகள் அரங்கேற, சைக்கோ கொலைகாரனை பிடிக்க ஹீரோ ஜெயம் ரவி புறப்படுகிறார். அதன்பின்னர் என்ன ஆனது என்பது தான் கதை எனக் கூறியுள்ள ப்ளூ சட்டை மாறன், இந்தப் படத்தை எடுக்க இயக்குநரோ அவரது டீமோ பத்து பைசா அளவுக்கு கூட மூளைக்கு வேலை கொடுக்கவில்லை என்றுள்ளார்.
நிறைய சீரியல் கில்லர் பட டிவிடி, ஹாலிவுட் படங்களின் டிவிடியை பார்த்துவிட்டு, இறைவன் படத்தை இயக்கியுள்ளதாக கலாய்த்துள்ளார். பல படங்களில் இருந்து ஒவ்வொரு சீனை எடுத்து இந்தப் படம் எடுத்துள்ளதாகவும் ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். படம் முழுவதும் வில்லன் கொலைகள் செய்துகொண்டே இருப்பதாகவும், ஆனால் அதனை பார்த்து பயமும் வரவில்லை, கொலை செய்யப்படுபவர்களை பார்த்து பரிதாபமும் வரவில்லை என்றுள்ளார்.
அதேபோல், கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்க ஹீரோ சொல்லும் காரணத்தையும் பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை. உண்மையான போலீஸ் ஆபிஸர்களுக்கு இவ்வளவு பிரச்சினைகள் இருக்காது, ஆனால் சினிமா ஹீரோக்களுக்கு மட்டும் எப்படி எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். எந்த லாஜிக்கும் இல்லாமல் இப்படியொரு படம் எடுக்க எப்படி முடிந்தது எனவும் கேட்டுள்ளார். மேலும் முதல் பாதியை விட இரண்டாம் பாதி படுமோசம் எனவும் சாடியுள்ளார்.
சென்சாரில் ஏ சர்டிபிகேட் வாங்கிய ஒரு படம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இறைவன் உதாரணம் எனக் கூறியுள்ளார். அதேபோல், ஏ சர்டிபிகேட் படத்தை 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் பார்க்கக் கூடாது, அதற்கு மேலுள்ளவர்கள் உயிரோட இருக்க ஆசைப்பட்டால் இறைவன் படத்தை பார்க்க வேண்டாம் என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











