Irugapatru Review: காதல் கல்யாணத்திலும் பிரிவு வரும்.. சமாளிப்பது எப்படி? இறுகப்பற்று விமர்சனம் இதோ!
நடிகர்கள்: விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாநகரம் ஸ்ரீ, சானியா ஐயப்பன், வித்தார்த், அபர்ணதி
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
இயக்கம்: யுவராஜ் தயாளன்
சென்னை: இயக்குநர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாநகரம் ஸ்ரீ, சானியா ஐயப்பன், வித்தார்த் மற்றும் அபர்ணதி நடிப்பில் உருவாகி உள்ள இறுகப்பற்று ரசிகர்களை கவர்வதை தாண்டி திருமணமான ஜோடிகளுக்கு மீண்டும் காதலை புரிய வைக்க முயற்சிக்கிறது.
வடிவேலு மற்றும் சதாவை வைத்து 8 ஆண்டுகளுக்கு முன்னதாக தான் இயக்கிய எலி திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில், அந்த மயான அமைதி தன்னை கொன்று விட்டதாகவும் சினிமாவை விட்டே ரொம்ப தூரம் போயிட்டேன் என்றும் கூறிய யுவராஜ் தயாளனை கூப்பிட்டு இந்த படத்தை கொடுத்த தயாரிப்பாளருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

விக்ரம், ஜெயிலர், மார்க் ஆண்டனி, அடுத்து வரும் லியோ உள்ளிட்ட படங்களில் கத்தியும் துப்பாக்கியும், ரத்தமும் சத்தமும் அதிகரித்து காணப்படும் நிலையில், குடும்ப டிராமா படங்களையும் சிறப்பாக எடுக்க முடியும் என காட்டியுள்ள யுவராஜ் தயாளனின் இறுகப்பற்று படத்தில் அவர் எங்கே கோட்டை விட்டார் என்றும் படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ் குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..
இறுகப்பற்று கதை: சைக்காட்ரிஸ்ட்டான மித்ரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் திருமணத்துக்கு பிறகு காதல் இல்லை என்றும் மனைவியை பிடிக்கவில்லை என்றும் 2 ஜோடிகள் விவாகரத்து கேட்டு வர, தன்னுடைய வீட்டிலும் சைக்காட்ரிஸ்ட்டாகவே தனது மனைவி இருக்கிறாரே என்கிற எண்ணம் தோன்ற அதுவரை பிரச்சனை இல்லாமல் சென்று கொண்டிருந்த அந்த பைத்தியக்கார டாக்டருக்கே பைத்தியம் பிடித்தால் வைத்தியம் பார்ப்பது யார்? என்பது போன்ற ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார் யுவராஜ் தயாளன்.
விதார்த் - அபர்ணதி ஜோடி: ஐடியில் வேலை பார்க்கும் ரங்கேஷ் மற்றும் பவித்ரா தம்பதியினர் திருமணம் ஆன நிலையில், பவித்ராவுக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தை பேற்றுக்கு பிறகு அவரது உடல் எடை அதிகரித்து குண்டாகி விடுகிறார். மேலும், அவர் பேசும் போது வாய் துர்நாற்றம் அடிக்கிறது என்கிற புகார்களுக்காக மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார் ரங்கேஷ்.
ஸ்ரீ - சானியா ஐயப்பன் விவகாரம்: காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இளம் ஜோடிகளான அர்ஜுன் மற்றும் திவ்யா திருமணத்துக்கு பிறகு ஏற்படும் பிரஷர் காரணமாக தங்கள் காதலையே மறந்து விட்டு பிரிந்து விடும் முயற்சியில் மித்ராவை சந்திக்கின்றனர். இந்த இரு ஜோடிகளுக்கு சுமூக தீர்வை மித்ரா கண்டாரா? அல்லது தனது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிளவை சரி செய்தாரா? என்பதை உணர்ச்சி பொங்க சொல்லியிருக்கும் படம் தான் இறுகப்பற்று.

பிளஸ்: இயக்குநர் ஒரு கதையை வைத்து மொத்த படத்தையும் உருட்டினால் ஓடாது என்பதால், மூன்று திருமண வாழ்க்கையை எடுத்துக் கொண்ட விதம் சிறப்பு. அதே போல நடிகர்கள் தேர்வும் சும்மா நச்சுன்னு இருக்கு, கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். விக்ரம் பிரபுவின் நடிப்பு பிரமாதம். இசை, ஹை கிளாஸ் படம் பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்பம் என எல்லாமே பிளஸ் ஆக அமைந்துள்ளது. வசனங்களும், திரைக்கதையும் யதார்த்தமாக படம் பார்க்கும் ஜோடிகளை கனெக்ட் செய்வது பலம்.
மைனஸ்: நடிகர்கள் நன்றாக நடித்திருந்தாலும், பெரிய ஓபனிங் கொடுக்கும் அளவுக்கான நடிகர்கள் தேர்வு இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருந்தால் பல சுமாரான படங்கள் வசூல் வேட்டை நடத்தும் இடத்தில் சூப்பரான படங்கள் டல் அடித்து வரும் நிலையை தவிர்த்து இருக்கலாம். படத்தின் நீளம் மற்றும் சில இடங்களில் ரிப்பீட் ஆகும் விஷயங்கள் மைனஸ் ஆக உள்ளன.
பார்க்கலாமா? வேண்டாமா?: ஜாலியா ஜோடியா இந்த வாரம் ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்றால் இறுகப்பற்று படத்தை பார்க்கலாம். இந்த ஆண்டு வெளியான ஃபீல் குட் படங்களான டாடா, குட் நைட் படங்களின் வரிசையில் இறுகப்பற்றுக்கும் ஒரு இடம் உறுதி!


Click it and Unblock the Notifications











