twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெய்ஹிந்த் 2 - விமர்சனம்

    By Shankar
    |

    -எஸ் ஷங்கர்

    Rating:
    3.0/5

    நடிகர்கள்: அர்ஜூன், சுர்வீன் சாவ்லா, ராகுல்தேவ், சிம்ரன் கபூர், பிரமானந்தம்

    ஒளிப்பதிவு: வேணுகோபால்

    இசை: அர்ஜூன் ஜெனியா

    தயாரிப்பு / இயக்கம்: அர்ஜூன்

    கல்விக் கொள்ளையர்களை ஒழிக்க வேண்டும், கல்வியை தனியாரிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதை கருவாகக் கொண்டு அர்ஜூன் உருவாக்கியுள்ள படம் ஜெய்ஹிந்த் 2.

    நோக்கம் மிகச் சரியானது என்றாலும், அதைச் சொன்ன விதம் மக்களைச் சென்றடையும் வகையில் அமைந்திருந்ததா? பார்க்கலாம்!

    Jaihind 2 Review

    போலீசில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் கமாண்டோ பயிற்சி முடித்து, லஞ்சம் கொடுத்து வேலை பெற மனமின்றி, தனியாக கராத்தே பயிற்சிப் பள்ளி நடத்தி வருபவர் அர்ஜூன். அவரது காதலி சுர்வீன் சாவ்லா. அர்ஜூன் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த ஒரு ஏழைத் தொழிலாளியின் மகளுக்கு பெரிய தனியார் பள்ளியில் அட்மிஷன் கிடைக்கிறது. ஆனால் பள்ளி கேட்கும் கட்டணத்தையும் நன்கொடையையும் கொடுக்க முடியாமல், குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கின்றனர்.

    இதைக் கண்டு கொதித்து எழும் அர்ஜூன், தனியார் பள்ளிகளுக்கு எதிராக மீடியா துணையுடன் போர் தொடுக்கிறார். இது தனியார் பள்ளி முதலாளிகளைக் கோபப்படுத்த, அர்ஜூனை ஒழித்துக் கட்ட முயற்சிப்பதும், அந்த சூழ்ச்சிகளிலிருந்து அர்ஜூன் எப்படித் தப்பிக்கிறார் என்பது மீதி.

    இன்றைய சமூகத்தில் தலைவிரித்தாடும் ஒரு முக்கியமான பிரச்சினையை எடுத்துக் கொண்டதற்காக அர்ஜூனுக்கு ஒரு சபாஷ். ஆனால் இதை படத்தின் தரத்துக்கான பாராட்டாகப் பெற அவர் தவறிவிட்டதுதான் சோகம்.

    Jaihind 2 Review

    வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் தனியார் பள்ளி முதலாளிகளின் வாரிசுகளைக் கடத்தி, இந்த கல்விக் கொள்ளையர்களைப் பணிய வைப்பதாக வரும் காட்சிகள் இன்னும் நம்பகத்தன்மையுடன் அமைத்திருக்கலாம். சில காட்சிகள் முதல்வனை நினைவூட்டுகின்றன.

    மக்கள் அனைவருக்கும் ஒரே தரமான கல்வி கிடைக்க வேண்டும். பாகுபாடு எதற்கு என்பதை வலியுறுத்த அர்ஜூன் வைத்துள்ள சில காட்சிகளும் வசனங்களும் உண்மையிலேயே சவுக்கடியாக உள்ளன.

    அதே போல சண்டைக் காட்சிகளில் பொறி பறக்கிறது. ஆங்கிலப் படங்களுக்கு நிகரான காட்சியமைப்பு, இந்த வயதிலும் அபார உழைப்பு என அர்ஜூன் அசத்தியிருக்கிறார். நாயகன் அர்ஜூன் பல இடங்களில் இயக்குநர் அர்ஜூனை மிஞ்சுகிறார். ஒரு சிறப்பான திரைக்கதை அமைந்தால் பாக்ஸ் ஆபீஸில் அர்ஜூன் மீண்டும் கலக்குவார்.

    சுர்வீன் சாவ்லாவுக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. சிம்ரன் கபூரை கவர்ச்சிக்காக சேர்த்திருப்பது தெரிகிறது.

    பிரம்மானந்தத்தை சிறப்பாகப் பயன்படுத்தத் தவறியிருக்கிறார் இயக்குநர். மயில்சாமியும் எடுபடவில்லை. ஜெய்ஹிந்த் முதல் பாகத்தின் சிறப்பே அந்த காமெடிதான். அது இந்தப் படத்தில் சுத்தமாக இல்லை. அதீத நீளம் ஆயாசம் தருகிறது.

    வேணுகோபாலின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. லண்டனில் படமாக்கப்பட்டுள்ள மாணவர்கள் மீட்புக் காட்சிக்கு ஸ்பெஷல் பாராட்டு.

    அர்ஜூன் ஜெனியாவின் இசை, பாடல்கள் இரண்டுமே எடுபடாதது படத்தின் இன்னொரு மைனஸ். ஆனால் பாடல் காட்சிகளுக்கான லொகேஷன்கள் அருமை.

    படத்தில் குறைகளும் நிறைகளும் சரிவிகிதத்தில் இருந்தாலும், சொல்லப்பட்ட நல்ல கருத்துக்காக ஒருமுறை பார்க்கலாம்!

    English summary
    Actor - Director Arjun's Jaihind 2 is coming with good message but the presentation and length of the movie is turned against the same.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X