Jawan Review: மெர்சல் காட்டிய ஷாருக்கான்.. அட்லீ செய்த ஆல் டைம் சம்பவம்.. ஜவான் விமர்சனம் இதோ!
நடிகர்கள்: ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி
இசை: அனிருத்:
இயக்கம்: அட்லீ
சென்னை: இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, சானியா மல்கோத்ரா, சர்ப்ரைஸ் கேமியோவாக சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜவான் திரைப்படம் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாகவே டாக் ஆஃப் தி டவுன் ஆக ஜவான் திரைப்படம் மாஸ் காட்டி வந்த நிலையில் இன்று வெளியான ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அட்லீ அறிமுகமாகியுள்ளார். கூடவே அவரது டார்லிங்கான நயன்தாராவும் பாலிவுட்டில் அறிமுகமாகும் ஆகியுள்ளார்.
இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான அட்லீ தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய நிலையில், தற்போது பாலிவுட்டில் கிடைத்த வாய்ப்பை பக்காவாக பயன்படுத்திக் கொண்டாரா இல்லையா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

ஜவான் கதை: விக்ரம் ரத்தோர் மற்றும் ஆசாத் என இரு கெட்டப்புகளில் நடிகர் ஷாருக்கான் ஜவான் படம் முழுக்க நிறைந்து தனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய டபுள் தமாக்கா ட்ரீட்டை கொடுத்திருக்கிறார். ஜெயிலராக உள்ள மகன் ஆசாத் சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்க தனக்கான ஒரு தனிப்படையை அமைத்துக்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கிறார்.
மகன் ஷாருக்கானுக்கு சரியான நேரத்தில் அப்பா விக்ரம் ரத்தோர் ஷாருக்கான் உதவும் காட்சிகளும் தீபிகா படுகோன் உடன் அமைந்த பிளாஷ்பேக் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன.
நர்மதா என்னும் போலீஸ் அதிகாரி ரோலில் நடிகை நயன்தாரா பாலிவுட்டுக்கு சரியான என்ட்ரியை கொடுத்துள்ளார். அவருக்கும் ஷாருக்கானும் இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்கின்றன.

ஆயுத டீலராக வயதான கெட்டப்பில் வரும் விஜய் சேதுபதி முதல் பாதியில் சிலக் காட்சிகளிலேயே வந்தாலும் இரண்டாம் பாதியில் அவரது வில்லத்தனத்தை காட்டி மிரட்டியுள்ளார். விவசாயிகள் தற்கொலை, நாட்டில் நடக்கும் லஞ்சம் உள்ளிட்ட பெரிய பிரச்சனைகளை ஷங்கர் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் பட பாணியில் எடுத்து ஷாருக்கானுக்கு ஆக்ஷன் மசாலா படமாக கிண்டி கொடுத்திருக்கிறார் அட்லீ.
பிளஸ்: ஒரு ஷாருக்கான் இருந்தாலே படத்தை ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் பார்ப்பார்கள் இதில் அப்பா மகன் என இடத்தில் சாருக் கான் இதுவரை எந்த படத்திற்கும் எடுக்காத ஏகப்பட்ட மேக்கப் ரிஸ்க்குகளையும் எடுத்து ஒவ்வொரு பிரேமிலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார். அப்பா ரத்தோர் எதிரிகளின் முகத்தில் குத்து விடும் காட்சிகள் எல்லாமே தியேட்டரில் விசில் தாறுமாறாக பறக்கிறது.

ஆரம்பத்தில் வரும் அந்த மெட்ரோ ஹைஜாக் சீன் மற்றும் ஷாருக்கானின் பிரம்மாண்டமான ஓப்பனிங் இன்ட்ரோ என படம் துவக்கத்திலேயே ரசிகர்களை கட்டிப்போட்டு விடுகிறது. லியோவில் மிரட்டப் போகிறார் சஞ்சய் தத் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஜவான் படத்திலேயே சர்ப்ரைஸ் கேமியோவாக வந்து செம ட்விஸ்ட் கொடுத்துள்ளார். போலீஸ் அதிகாரியாக நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதியின் நடிப்பு, ஷாருக்கானின் டீமில் உள்ள ஐந்து பெண்கள், ஒவ்வொரு காட்சியையும் தூக்கி நிறுத்தும் அனிருத்தின் பின்னணி இசை என அனைத்துமே படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது.
மைனஸ்: பின்னணி இசை ஈர்த்த அளவுக்கு பாடல்கள் பெரும்பாலும் இந்த படத்துக்கு கை கொடுக்கவில்லை. ஷாருக்கானும் நயன்தாராவும் நடனமாடும் ஐயோடா பாடல் மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதலை தருகிறது. மற்ற பாடல்கள் கதையோட்டத்திற்கு வேகத் தடையாகவே அமைந்துள்ளது. படத்தின் கதை ஏற்கனவே பல தமிழ் சினிமாக்களில் பார்க்கப்பட்ட பழக்கப்பட்ட கதையாக உள்ளது சற்றே பின்னடைவை ஏற்படுத்துகிறது. ஆனால் பாலிவுட் ரசிகர்களுக்கு இந்த படத்தின் கதை நிச்சயம் பிடிக்கும் என்றே தெரிகிறது.
மொத்தத்தில் ஜவான் - பிளாக்பஸ்டர் ஜாக்பாட்!


Click it and Unblock the Notifications











