Kaathal The Core Review: தன் பாலின ஈர்ப்பை பேசும் மம்மூட்டி, ஜோதிகா படம்.. காதல் தி கோர் விமர்சனம்!
சென்னை: இயக்குநர் ஜோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் இந்த வாரம் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ள காதல் தி கோர் திரைப்படத்திற்கு மூத்த பத்திரிகையாளர் சுகதேவ் அளித்துள்ள விமர்சனத்தை இங்கே காணலாம்..
பெரும் சலசலப்புடன் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்த The Great Indian Kitchen மலையாளப் படத்தின் இயக்குநர் ஜோ பேபியின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் Kaathal – The Core.

படத்தை தயாரித்திருப்பது மம்முட்டி கம்பெனி. நாயகனும் அவரே. நாயகி, ஜோதிகா.
கோவாவில் இப்போது நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 25 படங்களில் இதுவும் ஒன்று.
“கூடாப் பொருளை” பேசுவதாகக் குறிப்பிட்டு, கத்தார், குவைத், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இந்தப் படத்தை திரையிடுவதற்கான தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்டிருக்கிறது.
வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற மம்முட்டி, பஞ்சாயத்து இடைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து களம் இறங்குகிறார். அப்போது பார்த்து, “டைவர்ஸ்” மனு தாக்கல் செய்கிறார், அவரது மனைவியான ஜோதிகா. மம்முட்டியின் பாலியல் விருப்பம் வேறாக (தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்) இருப்பதாகவும் அதனால் தனது பாலியல் உரிமை இருபது ஆண்டு கால வாழ்க்கையில் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறி மணவிலக்கு கோருகிறார். இந்தக் குற்றச்சாட்டை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாத மம்முட்டி எப்படி இந்தச் சிக்கலை எதிர்கொள்கிறார்… தேர்தலில் வெற்றிபெற்றாரா… ஜோதிகாவின் மணவிலக்கு என்பது அவருக்கான உரிமை மட்டுமா…. என்பது போன்ற பல இழைகள் வழியாக படம் பயணிக்கிறது.
“இது ஒரு புரட்சிகரமான படம்” என்று படத்தின் தயாரிப்பாளர் மம்முட்டி கூறியிருக்கிறார். மிகையல்ல. தன் பாலின ஈர்ப்பு கொண்ட 80 சதவிகித ஆண்களும் பெண்களும் தங்களது விருப்பத்திற்கு மாறாக, பெற்றோர் அல்லது சமூக நிர்பந்தத்தில் குடும்ப வாழ்க்கையில் ஒட்டியிருக்கிறார்கள் என்ற முக்கியமான தகவலை படத்தின் ஒரு காட்சி பகிர்கிறது.
வெளிப்படையாக சமூகம் பேசத் தயங்கும் ஒரு பிரச்சினையை நெருக்கமான நேர்த்தியுடன் படமாக்கியிருக்கிறார், இயக்குநர் ஜோ பேபி. குடும்ப அமைப்பில், பட்டும்படாமலும் பேசப்பட்டு வரும் இந்தப் பிரச்சினை பற்றிய விரிந்த உரையாடலுக்கான திறப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மம்முட்டி ஓர் இடதுசாரிக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுவதாகக் காட்டுகிறார், இயக்குநர். உள்ளூர் நிலவரம் சார்ந்து இடதுசாரிகளுக்கிடையே எப்படி “நிலைப்பாடு” வேறுபடுகிறது என்ற அரசியலையும் இயக்குநர் நெம்பியிருக்கிறார்.
மம்முட்டியும் ஜோதிகாவும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் என்று சொல்லத் தேவையில்லை. பிறரும். படத்தின் திரைக்கதையை ஆதர்ஷ் சுகுமாரன், பால்சன் சகாரியா எழுதியிருக்கிறார்கள். படம் முடிந்த பிறகு எழுதியது யார் என்று பார்க்கத் தூண்டுகிறது. இங்கும் “ரைட்டர்ஸ்” எழுதுகிறார்கள். விளம்பரப் பேட்டிகளில் அன்றி, படத்தின் வழியாக உணரும் வாய்ப்பை தருவதில்லை.
72 வயதில் இப்படியான பாத்திரத்தில் நடித்து, படத்தையும் தயாரித்திருக்கிறார் மம்முட்டி என்பது இன்னொரு முக்கியமான செய்தி. வணக்கத்துக்குரிய பெருங் கலைஞன், மம்முட்டி. வாழ்த்துகள், ஜோ பேபி அணி.
*
பி.கு: தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் இதுபோன்று புதுப் பொருள் பேசும் படங்களைத் தயாரிக்கும் பொருள் வல்லமை படைத்தவர்கள். தரம்நாடும் ரசிகர்களின் மனதில் எழும் கேள்வி: செய்வீர்களா?" என தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











