twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காவியத் தலைவன் விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    3.0/5

    எஸ் ஷங்கர்

    நடிப்பு: சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர், தம்பி ராமையா, சிங்கம்புலி, அனைகா சோதி

    ஒளிப்பதிவு: நீரவ் ஷா

    கலை: சந்தானம்

    எடிட்டிங்: பிரவீண்

    பிஆர்ஓ: நிகில்

    கதை வசனம்: ஜெயமோகன்

    இயக்கம் : ஜி வசந்த பாலன்

    சினிமாவில் இலக்கியம் படைக்க முயலும் வசந்த பாலனும், இலக்கியவாதி ஜெயமோகனும் இந்த காவியத் தலைவனைப் படைக்க கைகோர்த்திருக்கிறார்கள். அங்காடித் தெருவில் மக்களைக் கவர்ந்த இந்தக் கூட்டணி, காவியத் தலைவனில் அதே வெற்றியைப் பெற்றிருக்கிறதா... பார்க்கலாம்!

    ஒரு நாடகக் குழுவில் காளியப்பா (சித்தார்த்), கோமதி நாயகம் (பிருத்விராஜ்) இரு நாயகர்கள்... காளியின் வளர்ச்சி, முக்கியத்துவம் பார்த்து கோமதிக்கும் பெரும் பொறாமை.. அது பெரும் பகையாக மாறுகிறது.. அந்தப் பகையின் முடிவு என்ன? இந்த ஒன்லைனோடு நிறுத்திக் கொள்வது நலம். அதை மீறினால் படத்தின் முழுக் கதையையும் வரிக்கு வரி சொல்ல வேண்டி வரும். சொன்னாலும் அத்தனை சுவாரஸ்யமாக இருக்குமா தெரியாது!

    Kaaviya Thalaivan Review

    முழுக்க முழுக்க கற்பனைக் கதையாக ஒன்றை எடுத்தால், அதை நம்ப வைக்க எந்த சிரமமும் தேவையில்லை. காட்சிகள் சுவாரஸ்யமாக அமைந்தால் போதும். ஆனால் சங்கரதாஸ் சுவாமிகள், எஸ் ஜி கிட்டப்பா, கேபி சுந்தராம்பாள் போன்ற நிஜ நாயகர்களையும், சுதந்திரப் போராட்டம் என்ற சமீபத்திய வரலாற்றையும் ஒட்டி ஒரு படம் எடுக்கும்போது, ரொம்பவே பிரத்யேக கவனம் தேவை. வசந்த பாலன் இங்குதான் சறுக்கியிருக்கிறார், காவியத் தலைவனில்.

    சுதந்திரப் போராட்டத்தின் முதல் தீ பற்றிய இடமே தமிழகத்தின் வேலூர் என்ற அடிப்படை உண்மையைக் கூடத் தெரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட உணர்வே இல்லை என்று வசனம் வேறு வைத்திருக்கிறார் இந்தப் படத்தில்.

    பிரதான நாயகன் காளியப்பாவுக்கு திடீரென சுதந்திரப் போராட்ட உணர்வு பொங்குவதுதான் ஆச்சர்யம் (குறைந்தபட்சம் இதற்கு ஒரு முன்குறிப்பாவது வைத்திருக்கலாம்). அதைவிட ஆச்சர்யம், ஒரு பிராந்தியத்தின் மன்னருக்கு நிகரான ஒருவரின் மகளை அவர் சர்வசாதாரணமாக, அதுவும் அரண்மனைக்கே போய் காதலிப்பதும் சல்லாபிப்பதும்!

    படத்தில் ராஜபார்ட்டாக வரும் பொன்வண்ணன், காளியாக வரும் சித்தார்த், கோமதியாக வரும் பிருத்வி ராஜ், வடிவாக வரும் வேதிகா... இவர்கள் அடிக்கடி ஏதாவது ஒரு காட்சியில் பிரமாதமாக நடித்துவிட்டதாக ஒருவரையொருவர் புகழ்ந்து கொண்டோ, அல்லது பொறாமை கொண்டோ பேசுகிறார்கள். பார்வையாளர்களுக்கு அப்படி ஒரு உணர்வே இல்லை என்ற உண்மை புரியாமலே!

    சுதந்திரப் போராட்ட காலத்தில் அல்லது முப்பதுகளின் இறுதியில், எந்த நாடகக் குழுவையும் போலீஸ் துரத்தித் துரத்தி சுட்டுக் கொன்றதாக பதிவுகளே இல்லை. நாடகக் கலைஞர்களுக்கு சுதந்திர வேட்கை இருந்தாலும், அது இந்தப் படத்தில் காட்டப்பட்ட அளவு மிகையாக இருந்ததில்லை என்கிறது வரலாறு!

    எண்பது - தொன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைக் காட்டும்போது, அதன் நம்பகத் தன்மையை நிரூபிக்க, அக்காலத்து மொழிப் பழக்க வழக்கத்தை -முழுவதும் இல்லாவிட்டாலும்- ஓரிரு இடங்களிலாவது பதிவு செய்திருக்கலாம். ஐம்பதுகளில் வந்த படங்களில் கூட 'ப்ராண நாதா', 'சகியே' என்று வசனங்கள் பேசிக் கொண்டிருக்க, இந்த முப்பதுகள் நாடகத்திலோ சாதாரண பேச்சுத் தமிழையே பயன்படுத்தியிருக்கிறார் வசந்த பாலன்.

    இந்த மாதிரிப் படங்களுக்கு முக்கிய பலம் வசனம். காவியத் தலைவனுக்கு அந்த பலம் இம்மி கூட கிடைக்கவில்லை.

    இசை... கதை வலுவாக இல்லாமல் போனாலும், இப்படியொரு பலமான களம் அமைந்ததை ஏஆர் ரஹ்மான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாரா என்றால்... இல்லை என்பதே உண்மை. வேதிகா அறிமுகமாகும் அந்த குறும்பாடலும், யாருமில்லா தனியரங்கில் பாடலும் தவிர வேறெதுவும் மனதின் ஓரத்தைக் கூடத் தொடவில்லை. பின்னணி இசையில் தெரியும் நவீனத்துவம் கதை நிகழும் காலகட்டத்தை மறக்கடித்துவிடுகிறது.

    கலை இயக்குநருக்கு ஏக வேலை இந்தப் படத்தில். மேடைகள், திரைச் சீலைகள், ஓவியங்கள் அத்தனையும் புத்தம் புதிதாக ஜொலிக்கின்றன. ஆனால் அன்றைய பாய்ஸ் கம்பெனி நாடகக்காரர்களுக்கு வாய்க்காத வசதியல்லவா இது!

    நடிப்பில் நாசருக்குத்தான் முதலிடம். அலட்டிக் கொள்ளாமல், தேவைப்படும் இடத்தில் மட்டும் ஆவேசம் காட்டி, தன் தவறு உணர்ந்து ஒடுங்கி வீழும் காட்சிகளில் அசத்துகிறார் மனிதர்.

    பிருத்விராஜுக்குதான் படத்தில் அதிக காட்சிகள். அவரும் மலையாள வாடையில் தமிழைப் பேசி கவரப் பார்க்கிறார். பேசும் முறையில் அந்த வாடை இருந்தாலும், சுத்தமாகவே பேசியிருக்கிறார். அந்த சிரத்தைக்கு பாராட்டுகள். இறுதிக் காட்சியில் மட்டும் மனதைத் தொடுகிறது அவர் நடிப்பு.

    காளியப்ப பாகவதர் சித்தார்த்துக்கு இது ஓவர் டோஸ். சூரபத்மனாக வரும் அந்தக் காட்சியும், குருவுக்கே சாபம் விடும் இன்னொரு காட்சியும் அவரது சிரத்தையான நடிப்புக்கு சாட்சி. ஆனால் 'தீயா வேலை செய்யும் இந்த குமாரை' ஒரு காவியத் தலைவனாக ஏற்க முடியாமல் போனதற்கான காரணங்கள் நிறைய!

    வேதிகா... சிவதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவின் செட் ப்ராபர்ட்டி மாதிரிதான் வருகிறார். ஒரு காட்சியில் தன் நடிப்பு எப்படி இருக்கிறது என சித்தார்த்தை அவர் கேட்பார். 'நீ அழகா இருந்தே.. அவ்வளவுதான்' என்று கூறி நடிப்பை சகட்டு மேனிக்கு திட்டுவார். அடுத்த சில காட்சிகளுக்குப் பிறகு, ஒரு சுதேசி நாடகத்தில் வேதிகா தேசியக் கொடி பிடித்தபடி கும்பலோடு வந்து கோஷமிட்டுப் போவார். அடுத்த காட்சியில் மீண்டும் 'தன் நடிப்பு எப்படி' என்பார். இந்த முறை, 'அழகா, அற்புதமா நடிச்சே' என்பார் சித்தார்த். அந்த 'அழகா அற்புதமா நடிச்ச' காட்சியைக் காண சித்தார்த்துக்குக் கொடுத்து வைத்த அளவுக்கு, ரசிகர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை!!

    ஒரே மாதிரி நடிப்பது தம்பி ராமையாவுக்கு வேண்டுமானால் திகட்டாமல் இருக்கலாம்... ரசிகர்களையும் கொஞ்சம் மனசுல நினைச்சிக்கிட்டு ரூட்டை மாத்தலாமே ராமையா!

    குறைந்தபட்சம் சிங்கம்புலியையாவது முழுமையாக காமெடி செய்ய விட்டிருக்கலாம். பொன்வண்ணன் வெளியேறும் காட்சி அப்படியே நாசரின் அவதாரத்தை நினைவூட்டுகிறது.

    Kaaviya Thalaivan Photos

    இன்னொரு நாயகியாக வரும் அனைகா, ஏதோ ஸ்கூல் பிள்ளை மாதிரிதான் தெரிகிறார். அந்தப் பிள்ளைக்கே ஒரு 'பிள்ளை கொடுக்கும்' சித்தார்த் மீது எப்படி பரிதாபம் வரும்?

    மேடைக் காட்சிகளிலும், யாருமில்லா தனியரங்கில் பாடல் காட்சியிலும் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு கிறங்கடிக்கிறது. ஆனால் அந்த சுதந்திரப் போராட்ட காட்சிகளில் நூறு சதவீத நாடகத்தனத்தை துல்லியமாகக் காட்டிவிடுகிறது.

    நல்ல சினிமா, ஆபாசமில்லாத சினிமா என்ற வசந்த பாலனின் பிடிவாதம் நல்லதுதான். அதுவும் சினிமாவின் ஆதியான நாடகக் கலையின் வரலாற்றை, இரு நாயகர்களின் வழி நின்று சொல்லும் இந்த முயற்சி கூடப் பாராட்டத்தக்கதே. ஒரு வரலாற்று பதிவு மாதிரி. ஆனால் பிழைகளற்ற, நம்பகத்தன்மை மற்றும் சுவாரஸ்யமான காட்சி நகர்வுகளில்தான் அந்த சினிமாவின் வெற்றி இருக்கிறது. அப்படியொரு வெற்றிக்கான வாய்ப்பு மடியில் வந்து விழுந்தும் அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையே. இன்னொரு முறை இப்படியொரு வாய்ப்புதான் கிட்டுமா?

    அரவானில் உணராத இந்த உண்மைகளை, காவியத் தலைவனிலாவது உணர்வாரா வசந்த பாலன்!

    English summary
    Vasantha Balan's Kaaviya Thalaivan is a movie on old Tamil drama schools and the life of stage artistes and fails to attract the viewers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X