Kadhalikka Neramillai Review: காதலிக்க நேரமில்லை விமர்சனம்.. ரவி மோகனுக்கு ‘ஜெயம்’ கிடைத்ததா?
நடிகர்கள்: ரவி, நித்யா மேனன், டிஜே பானு
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
இயக்கம்: கிருத்திகா உதயநிதி
ரேட்டிங்: 3
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன் (ஜெயம் ரவி), நித்யா மேனன், டிஜே பானு, வினய், யோகி பாபு, லால், லட்சுமி ராமகிருஷ்ணன், மனோ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் தான் காதலிக்க நேரமில்லை.
இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், பாலய்யா நடிப்பில் 1964ம் ஆண்டு வெளியான காதலிக்க நேரமில்லை படத்தை இப்போது டிவியில் போட்டாலும் பலரும் சிரித்துக் கொண்டே பார்ப்பார்கள். அந்தளவுக்கு எவர்க்ரீன் ஹிட்டான படத்தின் டைட்டிலை கிருத்திகா உதயநிதி இந்த படத்துக்கு வைத்துள்ள நிலையில், ரவி மற்றும் நித்யா மேனன் எந்தளவுக்கு அந்த படத்தை ரசிக்கும் படி செய்துள்ளனர் என்பது தான் பெரிய கேள்வியாகவே இருக்கும்.

வணக்கம் சென்னை, காளி படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி கடைசியாக பேப்பர் ராக்கெட் எனும் வெப்சீரிஸை இயக்கியிருந்தார். இந்நிலையில், அவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த காதலிக்க நேரமில்லை படத்தில் காதலிக்க நேரமிருந்ததா? படம் பார்க்கும் அளவுக்கு ரசிகர்களுக்கு பொறுமை இருக்குமா? என்பது குறித்த முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
காதலிக்க நேரமில்லை கதை: சித்தார்த் (ரவி) தனது நண்பர்களான வினய் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து தங்களது விந்தணுவை சேமித்து வைக்க முடிவு செய்கின்றனர். அப்போது ரவியின் விந்தணு தவறுதலாக டோனர் லிஸ்ட்டில் சேர்க்கப்பட, 4 வருஷம் காதல் செய்து ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துக் கொள்ளும் ஜான் கொக்கனால் ஏமாற்றப்படும் ஸ்ரேயா (நித்யா மேனன்) ஆண்களை வெறுத்து குழந்தையை பெற்றுக் கொள்ள கணவன் தேவையில்லை என்றும் ஃபெர்டிலிட்டி சென்டரில் முன் பின் தெரியாத டோனர் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கிறார். அதன் பின்னர் என்ன ஆகும் என்பது கணிக்க முடிந்தது தான். அதே போலவே நடக்கிறது. ஆனால், இந்த விஷயம் ரவிக்கும் நித்யா மேனனுக்கும் தெரிய வருகிறதா? இல்லையா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் இந்த காதலிக்க நேரமில்லை படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: ரவியின் காதலியான டிஜே பானு ரவிக்கு குழந்தைகள் என்றாலே பிடிக்காது என்றும் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்வதை தெரிந்துக் கொண்டு அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், நிச்சயதார்த்தத்துக்கு வராமல் அவருக்கு டாட்டா காட்டிவிட்டு செல்கிறார். ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துக் கொள்ளும் நித்யா மேனன் தனது கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க அவருக்கு தெரியாமல் வீட்டுக்கு வர அங்கே அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நித்யா மேனன் தோழியுடன் ஜான் கொக்கன் உல்லாசமாக இருக்க அதை பார்த்துவிட்டு அவரை வெறுத்து ஒதுங்குகிறார்.
ஃபெர்ட்டிலிட்டி சென்டர் மூலமாக குழந்தைப் பெற்றுக்கொள்ள தனது குழந்தைக்கு யார் அப்பா என்பதை அறிந்துக் கொள்ள கொடுக்கப்பட்ட அட்ரெஸுக்கு செல்லும் நித்யா மேனனுக்கு பெயர் மற்றும் முகவரி என இரண்டுமே போலி என்பது தெரிய வருகிறது. ஆனால், தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல ரவியை சந்திக்க நேரிடுகிறது.
ரவிக்கு குழந்தை என்றாலே பிடிக்காது என்பதை அறிந்து அவரையும் விட்டு விலகி 8 வருடங்கள் தனது மகனுடன் வசித்து வரும் நித்யா மேனன் மீண்டும் ரவியை சந்திக்கும் சூழல் ஏற்பட இருவருக்கும் இடையே பிசினஸ் மோதல் வந்து இடையே இடையூறாக நிற்பது சுவாரஸ்யம். ஜெயம் ரவியின் நண்பராக வினய் ஓரினச்சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, அவருக்கு கடைசியில் நடக்கும் திருமணம் எல்லாமே ஏதோ ஆங்கில படத்தை பார்க்கும் உணர்வை புகுத்துகிறது.
பிளஸ்: ஏ.ஆர். ரஹ்மானின் இசை தான் இந்த படத்திற்கு முழு பலம் என்று சொல்லலாம். "என்னை இழு இழு இழுக்குதடி" மற்றும் "லாவண்டர் பெண்ணே" பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஜிகர்தண்டா, மிஷன் சாப்டர் ஒன், டீன்ஸ் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கேவ்மிக் யூ ஆரியின் ஒளிப்பதிவு இந்த படத்துக்கு செம ரிச் லுக்கை கொடுத்துள்ளது. புரொடக்ஷன் வேல்யூவும் கண்முன்னே தெளிவாக தெரிகிறது. ஜெயம் ரவியை சமீபத்தில் இந்த படத்தில் தான் ரொம்ப அழகாக காட்டியுள்ளனர் என்றே சொல்லலாம். யோகி பாபு அவ்வப்போது வந்து சில காமெடிகள் செய்து சிரிக்க வைக்கிறார். நித்யா மேனனின் மகனாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரத்தின் நடிப்பு 2ம் பாதியில் ரசிகர்களை போரடிக்க விடாமல் கொண்டு செல்ல ரொம்பவே உதவியிருக்கிறது.

மைனஸ்: அனுஷ்கா நடிப்பில் வெளியான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் கதை போலவே இந்த கதையும் இருப்பதால் புதிதாக ஒன்றுமே இல்லையே என்று தான் தோன்றுகிறது. ஆரம்பத்தில் பேசப்படும் புதுமையான கருத்துக்கள் எல்லாம் வயசு கோளாறு காரணமாக பேசப்படுவது தான் என்றும் ஒரு கட்டத்தில் ஆண் துணை தேவை என்பதை நோக்கி இயக்குநர் கதையை கொண்டு சென்றிருப்பது ஏன் என்கிற கேள்வியும் முதலில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்கிற கேள்விகளையும் எழுப்பத்தான் செய்கிறது.
குழந்தை பெற்றுக் கொள்ள ரவி மறுப்பதால் அவரை விட்டு பிரிந்து செல்லும் டிஜே பானு 8 ஆண்டுகளாக யாரையும் திருமணம் செய்துக் கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பது ஏன் என்கிற கேள்வியும் எழுகிறது. ஓரினச் சேர்க்கையாளராக வரும் வினய்யின் திருமணம் கடைசியில் நடப்பது ஏன்? அடிக்கடி சில கேரக்டர்கள் காணாமல் போய் மீண்டும் கடைசியில் வருவது என ஏகப்பட்ட பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஜான் கொக்கன், ரவி என ஆண்கள் மட்டும் மற்ற பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வது போன்ற காட்சிகள் எல்லாம் என்ன குறியீடு என்றும் புரியவில்லை. இப்படி குறைகள் பல இருந்தாலும் படம் பார்க்கும் போது போர் அடிக்காமல் செல்வதற்கு காரணம் மேக்கிங் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை தான். கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க ஒரு நல்ல ஃபீல் குட் மூவி தான் இந்த காதலிக்க நேரமில்லை.


Click it and Unblock the Notifications











