Kalamkaval Review: ’களம் காவல்’ விமர்சனம்.. 21 அப்பாவி பெண்கள்.. வேட்டையாடும் மம்மூட்டி.. படம் எப்படி?
சென்னை: இயக்குநர் ஜித்தின் கே. ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி தயாரித்து நடித்துள்ள 'களம் காவல்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பாலகிருஷ்ணா கடைசி நேரத்தில் 'அகண்டா 2' படத்தை ரிலீஸ் செய்யாமல் ஏமாற்றி விட்ட நிலையில், மம்மூட்டி தென்னிந்திய த்ரில்லர் ரசிகர்களுக்கு பக்கா ட்ரீட் கொடுத்துள்ளார்.
கடந்த மாதம் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'காந்தா' திரைப்படம் முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதி சுமாராகவும் போன நிலையில், படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. ஆனால், அப்பா அப்பாதான் என்பதை மம்மூட்டியின் 'களம் காவல்' திரைப்படம் கடைசி வரை ரசிகர்களை என்கேஜிங்காக வைத்து நிரூபித்துக் காட்டியுள்ளது.

மங்காத்தா படத்தில் அஜித் குமார் கடைசி வரை எப்படி கெட்டவனாகவே நடித்திருப்பாரோ அதே போல இந்த படத்தில் சைக்கோ கில்லராகவே மம்மூட்டி நடித்து மிரட்டியதை பார்க்கவே தாராளமாக தியேட்டருக்குப் போகலாம். 'களம் காவல்' படத்தின் கதை, பிளஸ், மைனஸ் என மொத்தத்தையும் அலசலாம் வாங்க..
'களம் காவல்' கதை: ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாகவும் விநாயகன் வில்லனாகவும் நடித்திருப்பார்கள். இங்கே அப்படியே தலை கீழாக மம்மூட்டி வில்லனாகவும் விநாயகன் கதையின் நாயகனாகவும் நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். முன்னதாக பிரமயுகம் படத்திலும் மம்மூட்டி பேயாகவே நடித்து தூள் கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதக் கலவரத்திற்கு காரணம் ஒரு பையனும் ஒரு பெண்ணும் காதலித்து ஓடிப்போயிட்டாங்க என்கிற வழக்கை விசாரிக்க வரும் காவல் அதிகாரி விநாயகனுக்கு அந்த பையனும் பெண்ணும் ஓடிப்போகவில்லை என்றும் அந்த பெண் வேறு ஒருவருடன் காணாமல் போனது தெரிய வர, அந்த வழக்கை தோண்டி துருவி விசாரிக்க, அடுத்தடுத்து தொடர்ந்து தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் மாறி மாறி வயதுக்கு வந்த பெண்கள், திருமணமாகி விவாகரத்தான பெண்கள், கணவனை இழந்த பெண்கள் என பல பெண்கள் காணாமல் போவதும், இறந்து கிடப்பதும் தெரிய வர யார் இப்படி கொடூரமாக பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொள்வது என தேடும் விநாயகன் சயனைடு பயன்படுத்திக் கொள்ளும் மம்மூட்டியை பிடித்தாரா? இல்லையா? என்பது தான் இந்த களம் காவல் படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: கதை சொன்னது போல விநாயகன் தேடுதல் நடத்தி இடைவேளை காட்சியில் மம்மூட்டி தான் வில்லன் என்பதை ரிவீல் செய்திருந்தால் கூட வழக்கமான படமாக இந்த படம் மாறியிருக்கும். ஆனால், படத்தின் ஓபனிங் காட்சியிலேயே ஒரு லாட்ஜில் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்து விட்டு, கொலை செய்தால் என்ன ஆகும் என்றும் உன்னை கொன்றால் எனக்கு என்ன கிடைக்கும் என்பதை வெளிப்படையாக ஜாலியாக அந்த பெண்ணுடன் பேசிக்கொண்டே மம்மூட்டி கொலை செய்யும் காட்சியுடன் தான் படமே ஆரம்பிக்கிறது.
மனுஷன் 74 வயதிலும் இந்தளவுக்கு ஃபிட்டாக சட்டையில்லாமல் இளம் பெண்களை காதலித்து ஏமாற்றும் நடுத்தர வயது ஆண் கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா என்பதே வியப்பாகத்தான் உள்ளது. ஆனால், அதையெல்லாம் மம்மூட்டி லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்து மாஸ் காட்டுகிறார்.
இன்னொரு பக்கம் விநாயகன் 'நாத்' எனும் பட்டப் பெயருடன் அதன் பொருள் ஆந்தை. எந்தவொரு வழக்கை கையில் எடுத்தாலும் அதன் வேர் வரை சென்று குற்றவாளியை பிடிக்காமல் விடமாட்டார் என்கிற குணம் கொண்டவர் என அவருக்கான பில்டப்புகளை காட்சிகளின் வழியாக கடத்தியது சிறப்பு.
21 நடிகைகள் நடித்திருந்தாலும், ரஜிஷா விஜயனை தவிர யாருக்கும் பெரிய வேலை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு லேசான அன்பும் கருணையும் முன்பின் பழக்கம் இல்லாத நபர் தந்தால் கூட அவர்கள் அந்த அன்புக்கு அடிமையாகி பலியாகி விடுவதை எல்லாம் கட்டாயம் பெண்கள் விழிப்புணர்வு கோணத்துடன் பார்க்க வேண்டும் என்பதற்காகவே மம்மூட்டி இப்படியொரு வில்லன் அவதாரம் எடுத்துள்ளார்.

பிளஸ்: இயக்குநர் ஜித்தின் கே. ஜோஸ் ஓபனாகவே வில்லனை அறிமுகம் செய்து படத்தில் மம்மூட்டியின் நடிப்பை நம்பி விளையாடியது வேறலெவல் தில் என்றே சொல்லலாம். அதிலும் அந்த இன்டர்வெல் பிளாக்கில் வரும் ட்விஸ்ட் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ். இசையமைப்பாளர் முஜீப் மஜித் மம்மூட்டியை காட்டும் போதெல்லாம் டெவில் பிஜிஎம் போட்டு அலற விட்டுள்ளது சிறப்பு. அதிலும், அந்த பழைய பாடல் கிளைமேக்ஸில் ஒலிக்கும் இடத்துக்கே 100 மார்க் போடலாம். சிகரெட் புகையை ஒரு கேரக்டராகவே மாற்றிய ஃபைசல் அலியின் ஒளிப்பதிவு அட்டகாசம். எடிட்டர் பிரவீன் பிரபாகர், மம்மூட்டி ஒவ்வொரு பெண்ணையும் காதலித்து ஏமாற்றும் காட்சிகளில் பண்ண சம்பவம் சிறப்பு. மலையாளத்தில் படம் இருந்தாலும் படம் முழுக்க மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் தான் பலரும் பேசுவதால், தமிழ் ரசிகர்களும் தாராளமாக பார்க்கலாம்.
மைனஸ்: படத்தின் கதை இதுதான் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்துவிடுவது மைனஸ் தான். மேலும், படம் எப்படி முடியும் என்பதையும் யூகிக்க கூடிய த்ரில்லராக இந்த படத்தை இயக்குநர் கொடுத்துள்ளார். இடைவேளை காட்சி மாஸாக காட்டிய பின்னர், 2ம் பாதியில் மம்மூட்டி பல வேலைகளை பார்ப்பார் என்று பார்த்தால், மீண்டும் அவர் வழக்கம் போலவே வேட்டையாடும் காட்சிகள் சற்றே சலிப்பை தட்டுகிறது. ஆனால், கடைசி வரை படத்தை மம்மூட்டி மற்றும் விநாயகன் தங்களது நடிப்பால் கச்சிதமாக நிறைவு செய்துள்ளனர். கண்டிப்பாக களம் காவல் மம்மூட்டி ரசிகர்களுக்கும் கிரைம் த்ரில்லர் விரும்பிகளுக்கும் ஒரு நல்ல தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும்!


Click it and Unblock the Notifications











