Indian 2 Review: இந்தியன் 2 விமர்சனம்.. ரசிகர்களை கதறவிட்ட ஷங்கர்.. கமல்ஹாசன் நடிப்பு எப்படி?
நடிகர்கள்: கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங்
இசை: அனிருத்
இயக்கம்: ஷங்கர்
சென்னை: 1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் எந்தளவுக்கு சிலாகித்து பேசியிருப்பார்களோ அதற்கு ரிவர்ஸாக காலை முதலே சோஷியல் மீடியாவில் இந்தியன் 2 படத்துக்கு எதிரான நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வந்தன.
எதுவாக இருந்தாலும் படத்தை பார்த்து விட்டு விமர்சனத்தை முழுமையாக கொடுக்கலாம் என இந்தியன் 2 படத்தை பார்த்து விட்டு வந்த நிலையில், அதன் நிறை மற்றும் குறைகளை முழுமையாக இங்கே பார்க்கலாம் வாங்க..

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ஜெகன், விவேக், பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு இன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்தியன் 2 கதை: 'பார்க்கிங் டாக்ஸ்' எனும் யூடியூப் சேனலை சித்தார்த் தனது நண்பர்களான பிரியா பவானி சங்கர், ஜகன் உள்ளிட்டோருடன் நடத்தி வருகிறார். சமூகத்தில் ஊழலால் நடக்கும் அநியாயங்களை யூடியூப் வீடியோக்களால் தட்டிக் கேட்கின்றனர். ஆனால், அதன்மூலம் எந்தவொரு பயனும் இல்லை என்றதும், இந்தியன் தாத்தா வந்தால் நல்லா இருக்கும் என நினைக்கும் அவர்கள் #ComebackIndian ஹாஷ்டேக்கை உருவாக்குகின்றனர்.
அதை தாய்பெய் நாட்டில் உள்ள காளிதாஸ் ஜெயராம் பார்க்க, இந்தியன் தாத்தா இங்கே தான் இருக்கிறார் என்கிறார். அவரை இந்தியாவுக்கு போகவும் சொல்கிறார். இந்தியா திரும்பும் இந்தியன் தாத்தாவை நெடுமுடி வேணுவின் மகனான பாபி சிம்ஹா கைது செய்ய துடிக்க, அவரிடம் இருந்து தப்பித்து ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஊழல்வாதிகளை வர்மக் கலை வாயிலாக போட்டுத் தள்ளும் இந்தியன் தாத்தா கடைசியில் கைதானாரா? தப்பித்தாரா? என்பது தான் இந்தியன் 2 படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: கதை ரீதியாகவும் கருத்து ரீதியாகவும் நிச்சயம் இந்திய மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் தான் இந்தியன் 2. இயக்குநர் ஷங்கர் அதற்காக மெனக்கெட்டு கதையையும் இந்தியன் தாத்தா மட்டுமே இந்த நாட்டை திருத்த முடியாது இளைஞர்கள் உங்கள் வீட்டில் உள்ள களைகளை பிடுங்க முயற்சியுங்கள் என்கிற இரு வழி பாதை கதைக்கு நல்ல வலு சேர்த்துள்ளது. ஷங்கரின் புத்திசாலித்தனமும் அங்கே விளையாடி இருக்கிறது. ஆனால், அதை படமாக்கிய விதத்தில் ஷங்கரின் புத்திசாலித்தனம் பெரிதாக ஷைன் ஆகவில்லை என்பது தான் படத்திற்கு மிகப்பெரிய பாதிப்பாக மாறியுள்ளது.
இந்தியன் தாத்தாவையும் அந்நியனையும் மிக்ஸ் செய்து விட்டாரே ஷங்கர் என்று தான் பல இடங்களில் தோன்றுகிறது. விவேக்கின் ஒரு சில காமெடிகள் வொர்க்கவுட் ஆகிறது. ஆனால், பாபி சிம்ஹா காட்சிகள் பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. வர்மக் கலையை லேசாக இந்தியன் படத்தில் தொட்டுக் கொண்ட ஷங்கர் இந்த படத்தையே அதை மட்டுமே நம்பி எடுத்திருப்பது ஆடியன்ஸை திருப்திப்படுத்தவில்லை. அதிலும், வர்மக் கலை மூலமாக தொங்கியிருக்கும் வயதான உடம்பை ஒரு நொடியில் சிக்ஸ்பேக் உடம்பாக மாற்றும் காட்சிகளை ஷங்கர் எதை நம்பி வைத்தார் என தெரியவில்லை.
பாசிட்டிவ்: இந்தியன் 2 படத்தில் ஷங்கரின் பிரம்மாண்ட மேக்கிங் அடிக்கடி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அதே போல கமல்ஹாசன் பிராஸ்தெடிக் மேக்கப் போட்டுக் கொண்டு ஆக்ஷன் காட்சிகளை செய்திருப்பதும், அந்த மெட்ரோ டிரெயின் ஃபைட் சீனும் மாஸ். விஜய் மல்லையாவை இந்த படத்திலும் போட்டு பொளந்துள்ளனர். கேலண்டர் சாங் குறியீடு, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற கோடீஸ்வரர் என அவரை காட்டியதும், பெரிய திருமணத்தை குஜராத்தை சேர்ந்த நபர் நடத்துவதும், அவரது வீட்டில் தங்க டாய்லெட் உள்ளதாக காட்டும் காட்சிகள் எல்லாம் பிரம்மிக்க வைக்கிறது.
மார்ஸ் கிரகத்துக்கு செல்வதாக இன்னொரு கோடீஸ்வரர் ஜீரோ கிராவிட்டியில் பயிற்சி செய்யும் இடத்திற்கே சென்று கமல்ஹாசன் அவரும் பறந்துக் கொண்டே சண்டை போட்டு அவரை வர்மக் கலை மூலமாக போட்டுத் தள்ளுவதும் சிறப்பு. இரண்டாம் பாதியில் சித்தார்த் உள்ளிட்ட அவரது யூடியூப் நண்பர்களின் வீடுகளில் உள்ளவர்கள் செய்யும் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வருவதும் அதனால் அவர்களுக்கு நேரும் பிரச்சனைகளும் படத்திற்கு எமோஷனல் கனெக்ட்டை நன்றாகவே கடத்துகின்றன.
கமல்ஹாசனை தாண்டி சமுத்திரகனியின் நடிப்பு சூப்பர். சித்தார்த் முடிந்த வரை நடிக்க முயற்சித்துள்ளார். அனிருத்தின் பின்னணி இசை மற்றும் ஏ.ஆர். ரஹ்மானின் இந்தியன் பட பின்னணி இசை பலம் சேர்க்கிறது.

நெகட்டிவ்: இந்தியன் தாத்தாவை காட்டுவதற்கு முன்பாக சித்தார்த் மற்றும் அவரது டீம் யூடியூப் மூலம் செய்யும் காட்சிகள் தொடங்கி கடைசியில் கிளைமேக்ஸில் வரும் டாம் அண்ட் ஜெர்ரி கேம் வரை சொதப்பலான திரைக்கதையை கொடுத்து ரசிகர்களை தியேட்டரில் சோதித்து விட்டது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய புள்ளியான சகலகலா வல்லவன் என்கிற பெயரில் வரும் எஸ்.ஜே. சூர்யாவை விட்டு விட்டு மற்ற மாநிலங்களில் உள்ளவர்களை கமல்ஹாசன் போட்டுத் தள்ளுவது ஏன் என்கிற கேள்வியையும் எழுப்புகிறது.
அடுத்த பாகத்தில் தான் அவருடன் மோத போகிறார் என தெரிகிறது. கம்பேக் இந்தியனில் தொடங்கும் படம் கோபேக் இந்தியனாக முடிவடைவதை போலவே இந்தியன் படத்தை பார்த்த உணர்வு இந்தியன் 2வில் குறைந்து விடுகிறது. ஷங்கரின் இயக்கத்தில் வெளியான படங்களிலேயே ரொம்பவே வீக்கான படமாக இந்தியன் 2 உள்ளது. ஆனாலும், ஒவ்வொரு இந்தியரும் இந்த படத்தை பார்த்து தங்கள் மனசாட்சி உறுத்தினாலே அதுதான் இந்த படத்தின் வெற்றியாக பார்க்கப்படும்.


Click it and Unblock the Notifications











