கங்குவா விமர்சனம்.. சூர்யா மட்டுமே ஆறுதல்.. கதையை சொதப்பிய சிறுத்தை சிவா!
நடிகர்கள்: சூர்யா, பாபி தியோல், திஷா பதானி
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
இயக்கம்: சிறுத்தை சிவா
ரேட்டிங்:
சென்னை: தமிழ் சினிமாவின் பாகுபலி என்று கங்குவா படக்குழுவினரால் பெரும் பில்டப் செய்யப்பட்டு கடந்த ஒரு மாதமாக நடிகர் சூர்யா இந்த படத்தை வாயை பிளந்துக்கொண்டு பார்ப்பீர்கள் என மாஸ் ஸ்பீச் எல்லாம் கொடுக்கப்பட்ட நிலையில், இன்று வெளியான கங்குவா படத்தை பார்த்த ரசிகர்கள் தலைவலிக்குது என்றே தியேட்டர்களை விட்டு வெளியேறும் நிலைதான் உள்ளது.
நடிகர் சூர்யா மட்டுமே ஒட்டுமொத்த படத்தில் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை தெரிகிறார். அவரைத் தாண்டி படத்தில் பாபி தியோல் கூட பெரிதாக தெரியவில்லை. கல்கி படத்தை விட திஷா பதானிக்கு இந்த படத்தில் குறைவான நேரம் தான் இருக்கும் எனத் தெரிகிறது.

பெரும் நம்பிக்கையுடன் வந்த சூர்யாவையும் 300 கோடிக்கு மேல் பணத்தைக் கொட்டிய ஞானவேல் ராஜாவையும் இயக்குநர் சிறுத்தை சிவா இப்படி ஏமாற்றுவார் என ரசிகர்கள் கொஞ்சம் கூட நினைத்து இருக்கமாட்டார்கள். ஆனால், படத்தின் வேலைப்பாடு மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் எல்லாம் வேறலெவல் என்று தான் சொல்ல வேண்டும். கங்குவா படத்தின் முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
கங்குவா கதை: ஐந்தீவில் ஒரு இடமாக பெருமாச்சி எனும் இடத்தை கங்குவாவின் அப்பா ஆட்சி செய்து வருகிறார். அவர்களுக்கு போர் தான் வாழ்வு முறை. நெருப்பு தான் கடவுள். இன்னொரு இடத்தை பாபி தியோல் ஆட்சி செய்து வருகிறார். அவர்கள் வாழும் பகுதிக்கு ரத்தம் தான் கடவுள். நிலவு வழியாக பீரியட் போர்ஷனுக்கும் நிகழ்காலத்திற்கும் படம் பயணிக்கிறது. கங்குவா காலத்தில் தன்னால் பெற்றோர்களை இழந்த சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியாமல் போவதால் மனம் வருந்துகிறார். நிகழ்காலத்தில் அதீத மூளை சக்தியுடன் இருக்கும் அந்த குழந்தையை பிரான்சிஸ் சூர்யா காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் கங்குவா முதல் பாகத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: ஜீட்டா எனும் சிறுவன் அதீத மூளை ஆற்றல் கொண்டவனாக இருக்கிறான். ஆனால், அது ஏன்? அவன் யார்? அவனை வில்லன் ஏன் துரத்துகிறார் என எதையுமே சொல்லாமல் கதைக்குள் சிவா நம்மை அழைத்துச் செல்கிறார். கோவாவில் பவுண்ட்டி ஹண்டர் என சூர்யாவையும் அவருக்கும் அவரது எக்ஸ் லவ்வர் திஷா பதானிக்கும் இடையே சண்டை நடப்பது போன்ற காமெடிகள் அரங்கேறுகின்றன. ஆரம்பத்தில் வரும் அந்த காட்சிகள் படத்தில் ஒட்டாமல் இருப்பதே கங்குவாவை காட்டும் போது பெரிதாக ரசிகர்களுக்கு இம்பேக்ட் க்ரியேட் ஆகாமல் குறைந்து விட்டது.
ஜீட்டா சிறுவனை காப்பாற்ற சூர்யா போராடுகிறார். அதே நேரத்தில் அவனுக்கும் சூர்யாவுக்கும் இடையேயான தொடர்பை 1070 எனும் காலக்கட்டத்தில் காட்டுகின்றனர். ரோமானிய அரசர் ஐந்தீவில் பெருமாச்சி எனும் கங்குவாவின் இடத்தை பிடிக்க முற்படுகிறார். அவருக்கு எட்டப்பனாக இருந்து நட்டி நட்ராஜ் உதவுகிறார். 100க்கணக்கான பெருமாச்சி வீரர்களை கப்பல் கட்டும் வேலைக்கு அழைத்துச் செல்கிறேன் என அழைத்துக் கொண்டு கொன்று குவிக்கிறார் நட்டி நட்ராஜ். அவர் செய்த துரோகம் கருணாஸ் மூலமாக கங்குவாவுக்கு தெரிய வர கட்டி வச்சு கட்டைகளை அடுக்கி எரித்து விடுகிறார்.

நட்டி நட்ராஜின் மகனையும் கொல்ல வேண்டும் என ஊர் மக்கள் சொல்ல, இவன் என் மகன் என குழந்தையை காப்பாற்றத் துடிக்கும் கங்குவாவுக்கு அந்த சிறுவனால் தனது ஊரையே இழக்கும் சூழல் உருவாகிறது. மீண்டும் தனது மண்ணை காப்பாற்ற அவர் என்ன செய்கிறார். அந்த சிறுவனை ஏன் அவரால் காப்பாற்ற முடியாமல் போகிறது. நிகழ்காலத்தில் மீண்டும் அந்த சிறுவனை பார்த்தவுடன் அவனை காப்பாற்ற போராடும் பிரான்சிஸ் கடைசியில் சிறுவனை காப்பாற்ற என்ன செய்கிறார். அந்த சிறுவனுக்குள் இருக்கும் சக்தி என்ன? என்கிற விதத்தில் படம் நிலவை மையமாகக் கொண்டு இரண்டு காலக்கட்டத்துக்கும் பயணிக்கிறது.
பிளஸ்: சூர்யாவின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். இந்த படத்தை எப்படியாவது வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என தனது உடல் பொருள் ஆவி அனைத்தையுமே கொடுத்து நடித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஆரம்பத்தில் வரும் யோலோ பாடல் திஷா பதானியின் கவர்ச்சியில் ரசிகர்களை ஜாலி ஆக்குகிறது. ஆதி நெருப்பே பாடலில் நெருப்பை காலில் கட்டிக் கொண்டு ஆடும் காட்சிகள் கூஸ்பம்ப்ஸ். மன்னிப்பு பாடல் மற்றும் தலைவனே பாடல் ஆறுதல். ஒளிப்பதிவாளரின் வெற்றியின் உழைப்பு அபாரம். மறைந்த ஆர்ட் டைரக்டர் மிலனின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட சிறு கத்தி முதல் பெரிய கப்பல் வரை பிரம்மிக்க வைக்கிறது. கிளைமேக்ஸில் வரும் கார்த்தியின் கேமியோ சூப்பர்.

மைனஸ்: படத்தை தொடங்கிய இடத்திலேயே கோட்டை விட்டு விட்டார் இயக்குநர் சிறுத்தை சிவா. கதை மற்றும் திரைக்கதையில் வலுவில்லாத எழுத்து தான் நல்லா எடுக்கப்பட்டுள்ள படத்தை கொண்டாடப்பட வேண்டிய படமாக மாற்ற தவறியிருக்கிறது. யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி அடிக்கும் காமெடிகள் எல்லாம் கிரிஞ்ச் என சூர்யாவே சொல்லி விடுகிறார். பின்னணி இசையில் தேவி ஸ்ரீ பிரசாத் காது வலியை கொடுத்து படத்தை பல இடங்களில் கெடுத்து விடுவதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. சூர்யாவுக்கு லைஃப் டைம் படமாக அமைந்திருக்க வேண்டிய கங்குவா படம் பல இடங்களில் 7ஆம் அறிவு படத்தை பார்க்கும் ஃபீலிங்கை கொடுக்கிறது. முதலை சண்டைக் காட்சி, கருங்காட்டில் சோலோவாக சூர்யா ஒரு படையை இயற்கையின் சக்தியை வைத்து சண்டை போடுவது எல்லாம் படத்திற்கு கை கொடுக்கவில்லை. பெருமாச்சியின் பெண்களே பல வீரர்களை கொல்லும் போது, பெருமாச்சியில் கங்குவாவை தவிர வேறு போர் வீரர்களே இருப்பது போல காட்டாதது பெரும்குறை.


Click it and Unblock the Notifications











