Kannappa Review: கண்ணப்பா விமர்சனம்.. கிளைமேக்ஸ் எமோஷனல் கனெக்ட் வேறலெவல்.. பிரபாஸ் பெரிய பிளஸ்!
சென்னை: முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, ப்ரீத்தி முகுந்தன், சரத்குமார், அக்ஷய் குமார், மோகன்லால், பிரபாஸ் மற்று காஜல் அகர்வால் என பான் இந்தியா நடிகர்கள் நடித்துள்ள கண்ணப்பா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. காலஹஸ்தி கோயிலுக்குச் சென்று வாயு லிங்கத்தை வழிபடும் அனைவருக்கும் கண்ணப்பா கதை தெரிந்திருக்கும். மகாபாரதம், ராமாயணம் கதைகளை பிரம்மாண்ட படமாகவும் தொலைக்காட்சி தொடர்களாகவும் பலரும் எடுத்து வெளியிட்டுள்ளனர். வெளியிட்டும் வருகின்றனர். அந்த வரிசையில், கண்ணப்பா கதையை பிரம்மாண்ட படமாகவே மோகன் பாபு தனது தயாரிப்பில் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.
கண்ணப்பா படம் நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட நிலையில், அதன் அழகு கொஞ்சும் எழில், அந்த இடத்தை தேர்வு செய்ததற்கான காரணம் எல்லாம் திரையில் தெளிவாகவே தெரிவது சிறப்பு. புராண கதைகளை படமாக்கும் போது ஏகப்பட்ட சிரமங்களும் கதை சிக்கல்களும் உருவாகும்.

கண்ணப்பா கதை அந்த மகா சிவராத்திரியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதை மட்டுமே பக்தர்கள் அறிந்த நிலையில், கண்ணப்பாவுக்கு ஒரு முன் கதை மற்றும் மகாபாரத கனெக்ட் உள்ளிட்டவற்றை கூடுதலாக இயக்குநர் சேர்த்திருக்கிறார். அது எந்தளவுக்கு ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகிறது, கண்ணப்பா படத்தின் நிறைகள் மற்றும் குறைகள் என்ன என்பது குறித்த முழுமையான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
கண்ணப்பா கதை: வாயு லிங்கத்தை மற்றவர்கள் யாரும் பார்த்திடாத அளவுக்கு தான் மட்டுமே அந்த சிவலிங்கத்துக்கு பூஜை செய்ய வேண்டும் என மகாதேவ சாஸ்திரிகள் (மோகன் பாபு) வழிபாடு நடத்தி வருகிறார். சிறு வயதில் காளி தேவிக்கு தனது நண்பனை நரபலி கொடுப்பதை பார்த்து கடவுள் மீதே கடுப்பாகும் திண்ணன் சாமியே இல்லை என நாத்திகனாக வளர அவன் எப்படி சிவனுக்காக தனது கண்களையே தானமாக வழங்கி கண்ணப்பர் ஆகிறார் என்பது தான் கண்ணப்பா படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: சிறு வயதில் இருந்தே கடவுள் பக்தி இல்லாத நபராக வளரும் திண்ணன் பெரும் வில்லாளியாக திகழ்கிறான். தனது நண்பன் நரபலி கொடுக்கப்பட்ட நிலையில், இனிமேல், இந்த ஊரில் ஒரு உயிர் கூட போகக் கூடாது என போராடும் வீரனாக மாறுகிறார். அறிமுக காட்சியிலேயே, கழுகு ஒரு குழந்தையை தூக்கிச் செல்ல திண்ணனாக ஹீரோ விஷ்ணு மஞ்சுவின் இன்ட்ரோ சிறப்பாகவே உள்ளது.
சிவனை வழிபடும் நெமலியாக ப்ரீத்தி முகுந்தன் கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட குறைவு வைக்காமல் முதல் காட்சியில் இருந்து கடைசி வரை நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் விஷ்ணு மஞ்சுவை விட அவர் அதிகம் ஸ்கோர் செய்கிறார்.
விஜய் டிவியில் தமிழில் ஒளிபரப்பப்பட்ட லேட்டஸ்ட் மகாபாரத சீரியலில் துரியோதனனாக நடித்த அர்பித் ரங்கா இந்த படத்தில் வாயு லிங்கத்தை களவாடி செல்லும் நோக்கத்துடன் திண்ணன் இருக்கும் பட்டியை படையெடுத்து வருகிறான். மற்ற பட்டி இன மக்களை ஒன்று திரட்டி வில்லனை எதிர்க்க தலைவனாக திண்ணனை தேர்வு செய்கின்றனர். ஆனால், காதல் பிரச்னை காரணமாக நாட்டாமை சரத்குமார் தனது மகனை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார். அதனால், படையெடுத்து வரும் வில்லனின் படையை சரத்குமார் சோலோவாக எதிர்கொள்ள அவர் உயிரை துறக்கிறார். அப்பாவை கொன்றவனை மொத்த படையுடன் எதிர்கொண்டு வெற்றி காண்கிறான் திண்ணன். கடைசியில் கண்ணப்பா கதைக்கு வரும் இடத்தில் இருந்து படம் இறுதி வரை சூடு பிடித்து ரசிகர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.

பிளஸ்: கடவுளுக்கு மாமிசம் படைத்து, தனது வாயால் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்து பக்திக்கு நல்ல மனசு மட்டுமே முக்கியம் என்பதை உலகுக்கே எடுத்துரைத்த கண்ணப்பாவின் கதையை இந்தளவுக்கு மெனக்கெட்டு பெரிய பட்ஜெட்டில் பல முன்னணி நடிகர்களை கேமியோக்களாக நடிக்க வைத்து எடுத்ததே பிளஸ் தான். இடைவேளைக்கு முன்பாக மோகன்லால் வரும் இடமெல்லாம் ப்யூர் கூஸ்பம்ப்ஸ். அதன் பின்னர், கடைசியில் பிரபாஸ் ருத்ராவாக வரும் இடம் தான் படத்தை தூக்கி நிறுத்துகிறது. மணிசர்மா, ஸ்டீவன் தேவசியின் இசை படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. சில பக்தி பாடல்கள் தமிழிலும் கை கொடுக்கின்றன. சாதி மத பேதம், தீண்ட தகாதவர்கள் என்று சொல்பவர்களும் அன்னையின் புனிதமான கருவறையில் இருந்து பிறந்தவர்கள் தானே என விஷ்ணு மஞ்சு வசனம் பேசும் இடமெல்லாம் அப்ளாஸ் அள்ளுகிறது. படத்தை எதை எதிர்பார்த்து ரசிகர்கள் வந்தார்களோ, அது முழுக்க முழுக்க 2வது பாதியில் கிடைத்த நிலையில், படம் ஹிட்டடிக்கிறது.
மைனஸ்: படத்தின் முதல் பாதியில் கண்ணப்பாவின் முதல் கதை என சேர்த்த இடத்தில் இன்னமும் கொஞ்சம் இயக்குநர் எழுத்தில் கவனம் செலுத்தி காட்சிகளை சுவாரஸ்யப்படுத்தியிருந்தால், ஆரம்பத்தில் உள்ள குறைகளும் இல்லாமல் பெரிய பிளாக்பஸ்டர் படமாகவே கண்ணப்பா வந்திருக்கும். அந்த இடத்தில் மட்டும் கோட்டை விட்டு விட்டனர். ஆனால், 2ம் பாதியில் படத்திற்கு போட்டுள்ள உழைப்பு கிளைமேக்ஸ் வரை கொஞ்சமும் குறையாத நிலையில், படத்தை தாராளமாக தியேட்டர்களில் பார்க்கலாம் என்றே சொல்லத் தூண்டுகிறது. கண்ணப்பா.. பக்தி பரவசம்!


Click it and Unblock the Notifications











