Karate Kid Legends Review: கராத்தே கிட் லெஜண்ட்ஸ் விமர்சனம்.. ஜாக்கி சான், பென் வாங் படம் எப்படி?
சென்னை: ஜாக்கி சான் மற்றும் வில் ஸ்மித் மகன் ஜேடன் ஸ்மித் நடித்து கடந்த 2010ம் ஆண்டு வெளியான கராத்தே கிட் படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள். அந்த படத்திற்கு முன்னாடியே கராத்தே கிட் படங்கள் வெளியாகி இருக்கின்றன. 1984ம் ஆண்டு வெளியான தி கராத்தே கிட், 1986ம் ஆண்டு வெளியான தி கராத்தே கிட் 2ம் பாகம் மற்றும் 1989ல் வெளியான அதன் 3ம் பாகம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் ரால்ஃப் மாச்சியோவுடன் இணைந்து இந்த படத்தில் ஜாக்கி சான் நடித்துள்ளார்.
இரண்டு கிளைகள் ஒரு மரம் என்கிற கான்செப்ட்டில் மிஸ்டர் ஹான் கதாபாத்திரத்தில் நடித்த ஜாக்கி சான் மற்றும் டேனியல் லா ரூசோ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ரால்ஃப் மாச்சியோ இருவரும் இணைந்து அறிமுக நடிகரும் இந்த கராத்தே தி லெஜண்ட்ஸ் படத்தின் ஹீரோவுமான லீ (பென் வாங்)க்கு எப்படி சண்டை போட கற்றுக் கொடுத்து சண்டைப் போட்டியில் வெற்றிப் பெற வைக்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை.

சிறு வயதில் இருந்தே ஜாக்கி சான் படங்கள் என்றாலே உலகளவில் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அவரது ஸ்டன்ட் காட்சிகளில் நகைச்சுவை கலந்து ரசிகர்களை ரொம்பவே என்டர்டெயின் செய்தது தான் அவரது வெற்றியின் ரகசியம். இந்த படத்தில் எதெல்லாம் சிறப்பாக இருந்தது, எதெல்லாம் மிஸ் ஆனது என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
கராத்தே கிட் லெஜண்ட்ஸ் கதை: ஆரம்பத்திலேயே மிஸ்டர் ஹான் ஜாக்கி சான் ஒரு குங்ஃபூ சண்டைப் பயிற்சி கூடத்தை நடத்தி வருகிறார் என்பதை காட்டுகின்றனர். அவருக்கும் ரால்ஃப் மாச்சியோ குடும்பத்துக்கும் இடையே ஒரு கனெக்ஷன் இருப்பதை அழகாக கொண்டு வந்து முந்தைய பாகங்களுடன் இந்த படத்தை இயக்குநர் கனெக்ட் செய்த விதம் அற்புதம். கராத்தே கிட் லெஜண்ட்ஸ் என டைடிட்லில் ஜாக்கி சானுக்கும் ரால்ஃப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்தாலும், படம் முழுக்க இளம் நாயகன் பென் வாங்கின் காதல் கதை மற்றும் அவனுக்கும் வில்லனுக்கும் இடையேயான மோதல் கதை தான் நிறைந்திருக்கிறது. வழக்கம் போல அம்மா மகனை வேற ஊருக்கு அழைத்துச் சென்று விடுகிறார். அங்கே ஹீரோவுக்கு காதல் மலர்கிறது. அதன் காரணமாக வில்லன் ஆட்களுடன் பிரச்சனை வெடிக்க கராத்தே போட்டியில் களமிறங்கி வெற்றிப் பெற்று எப்படி ஜெயிக்கிறார் என்கிற கதையை எந்தளவுக்கு சுவாரஸ்யமாக கொடுக்க முடியுமோ அந்தளவுக்கு இயக்குநர் ஜானதன் எண்ட்விஸ்ட்டில் கொடுத்துள்ளார்.

படம் எப்படி இருக்கு?: வயதான தோற்றத்தில் ஜாக்கி சானை பார்க்கவே கஷ்டமாக இருந்தாலும், மிஸ்டர் ஹான் கதாபாத்திரத்தில் அவரை மீண்டும் பார்ப்பதில் ரசிகர்கள் ஹேப்பி ஆகி விடுகின்றனர். இந்த படத்தில் அவருக்கு பெரிதாக சண்டைக் காட்சிகள் இல்லை என்றாலும், அவர் செய்யும் நகைச்சுவை காட்சிகளுக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லை. ரால்ஃப் வரும் காட்சிகளையும் அதகளமாகவே செதுக்கியிருக்கிறார் இயக்குநர். இரண்டு லெஜண்டுகளும் சேர்ந்து சிறுவன் பென் வாங்கை டிரெய்ன் செய்யும் காட்சிகள் தான் படத்தின் ஹைலைட்.
பிளஸ்: ஜாக்கி சான், ரால்ஃப் மாச்சியோ மற்றும் பென் வாங் என முக்கியமான 3 பேரின் கதாபாத்திர வடிவமைப்பும் படத்துக்கு பெரிய பலமாக உள்ளது. சோனி பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் பிரமாண்டத்துக்கு கொஞ்சம் கூட பஞ்சமே இல்லை. ஜஸ்டின் பிரவுன் ஒளிப்பதிவில் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் தெறிக்கிறது. டாமினிக் லீவிஸ் இசையும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.
மைனஸ்: ஜாக்கி சான் மற்றும் ரால்ஃப் மாச்சியோவின் சண்டைக் காட்சிகளை பார்க்க நினைத்து படத்துக்கு சென்றால் சற்றே ஏமாற்றம் அடையத்தான் செய்வீர்கள். அவர்களுக்கு பதிலாக அந்த சிறுவன் செமையா சண்டை செய்கிறான். 2010ல் வெளியான தி கராத்தே கிட் படத்தில் இருந்த எமொஷன் காட்சிகள் மற்றும் வில்லன் போர்ஷன் எல்லாம் இந்த படத்தில் பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. ரொமான்ஸ் போர்ஷனிலும் பெரிதாக கெமிஸ்ட்ரி செட் ஆகாதது குறையாக தெரிகிறது. ஆனால், பழைய கராத்தே கிட் படங்களை பார்க்காமல் ஃபிரெஷ்ஷாக இந்த படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் படம் செம ட்ரீட்டாகவே இருக்கும். பழைய படங்களை பார்த்த ரசிகர்களுக்கு நாஸ்டால்ஜியா மொமண்ட்ஸ் மற்றும் கடைசி நேர கேமியோ மகிழ்ச்சியைத் தரும்.


Click it and Unblock the Notifications











