»   »  கற்றது தமிழ் - விமர்சனம்

கற்றது தமிழ் - விமர்சனம்

Subscribe to Oneindia Tamil


வழக்கமாக வந்து போகும் கதைகளுக்கு மத்தியில் வித்தியாசமான கதையுடன் வந்திருக்கிறது கற்றது தமிழ்.

Click here for more images

இப்போதுள்ள 30, 40 வயதுக்காரர்களின் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தைத்தான் இப்படத்தின் கதையாக கையாண்டிருக்கிறார்கள். சாதாரண வேலைக்காரர்களுக்கும், சாப்ட்வேர் என்ஜீனியர்களுக்கும் இடையில் நிலவும் சம்பள ஏற்றத்தாழ்வுதான் அது.

கதையை மட்டும் வித்தியாசமாக கொண்டிராமல், அதை அழகாகவும் கையாண்டிருக்கிறார் இயக்குநர் ராம்.

மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல், தமிழகத்தில் மட்டும்தான் தமிழே படிக்காமல், தெரியாமல், உயர் கல்வியை முடித்து விட்டு வெளியேற முடியும் என்ற நிலை உள்ளது. தமிழ் படித்தவர்களுக்கு சொற்ப சம்பளத்தில் வேலையும், கொஞ்சம் ஆங்கில அறிவுடன் தமிழே தெரியாவிட்டாலும் கூட கம்ப்யூட்டர் அறிவை மட்டும் வைத்துக் கொண்டு மாதம் ரூ. 2லட்சம் வரை சம்பாதிக்கும் ஆட்கள் இப்போது அதிகரித்து விட்டார்கள்.

இந்த ஏற்றத்தாழ்வைப் பார்த்து மனம் வெதும்பும் இளைஞனின் கதைதான் கற்றது தமிழ். பிரபாகர் (ஜீவா), சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியர். சாதாரண ஒரு லாட்ஜில் தங்கிக் கொண்டு வேலை பார்க்கிறார். தமிழ் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் நல்ல மரியாதை இல்லை, கெளரவம் இல்லை, உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று மனம் வெதும்புகிறார் பிரபாகர்.

தமிழ் படித்தவர்களுக்கு நல்ல சம்பளம் இல்லாத நிலையும், பிற படிப்பு படித்தவர்களுக்கு பெரிய சம்பளமும் என்ற ஏற்றத்தாழ்வு அவரை வேதனைப்படுத்துகிறது. தற்கொலைக்கும் முயல்கிறார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு 2000 முதல் 20 ஆயிரம் வரைதான் அதிகபட்சமாக சம்பளம் இருந்தது. ஆனால் இன்று ஐடி நிறுவனங்களின் பெருக்கத்தால் சாதாரணமாக 2 லட்சம் ரூபாயிலிருந்து சம்பளம் பெறுகிறார்கள். ஆனால் மறுபக்கம், வெறும் 2000 ரூபாய் சம்பளம் வாங்கும் பிரபாகரும் இருக்கிறார்கள்.

இந்த குழப்பங்கள் பிரபாகரை மன நிலை பாதிக்கும் அளவுக்கு கொண்டு சென்று விடுகிறது. வெதும்பி வெதும்பி வெறி கொண்டு கொலைகாரனாக மாறுகிறார் பிரபாகர். ரயில்வே கிளார்க் முதல் விபச்சாரி வரை 23 பேரை கொன்று குவிக்கிறார்.

கடைசியில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் கேமராமேன் கருணாஸை சந்திக்கிறார். அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். பின்னணியில், அவரது தமிழ்ப் பற்றும், அழகான கடந்த காலமும் வந்து போகின்றன.

இயக்குநர் ராம் எடுத்துக் கொண்ட அழகானது, டைமிங்கானது. அதைச் சொல்லியுள்ள விதத்திலும் குறையில்லை. ஆனால் தேவையில்லாத கொலைக் காட்சிகளும், நீளமான பல வாதங்களும் படத்தின் வேகத்தை மட்டுப்படுத்தி விடுகிறது.

அதேசமயம், தமிழ் படித்தவர்கள் மகா மோசமான நிலையில் இருப்பதைப் போல சித்தரித்திருப்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழ் படித்தவர்களும் நல்ல நிலையில்தான் இருக்கிறார்கள் என்பது கண்கூடு.

கடந்த காலங்களிலும் சரி, இப்போதும் சரி தமிழாசிரியர்கள் ஒருபோதும் புறக்கணிக்கப்பட்டதில்லை. நல்ல சம்பளத்தையும் பெற்றே வந்துள்ளனர். இதை இயக்குநர் ராம் கவனிக்கத் தவறி விட்டார் போலும்.

தமிழ் படித்தவர்களுக்கும், கம்ப்யூட்டர் துறையில் வேலை பார்த்தவர்களுக்கும் இடையிலான சம்பள பாரபட்சத்தை, வித்தியாசத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக விளக்கியிருந்தால், பொருத்தமான காட்சிகளைச் சித்தரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஜீவாவின் நடிப்பு சிறப்பாக உள்ளது. ஒரு சைக்கோபாத் கேரக்டரை அழகாக செய்துள்ளார். நடிப்பில் மேலும் நல்ல வளர்ச்சி தெரிகிறது. கால் சென்டரில் வேலை பார்க்கும் தனது நண்பனை அவரது அலுவலகத்தில் சந்திப்பது, அவரது சம்பளத்தைக் கேட்டு டென்ஷன் ஆவது, ஆச்சரியப்படுவது, யாருமற்ற தெருவில் புலம்பித் தவிப்பது, திரிவது என ஒவ்வொரு காட்சியிலும் மெனக்கெட்டு அக்கறை கொண்டு நடித்துள்ளார்.

கதாபாத்திரங்கள் நன்றாக இருந்தும், திரைக்கதையில் சிறிய ஓட்டை இருப்பதால் காட்சிளுக்கு வலு கூடிப் போகாமல் தொய்வாகவே தெரிகின்றன.

ஜீவாவுக்கு பல இடங்களில் தாடி பொருத்தமாக இல்லை. செட்டப் தாடி என்று பளிச்சென தெரிகிறது.

அஞ்சலி, புதுமுகம். பளிச்சென பக்கத்து வீட்டுப் பெண் போல இருக்கிறார். ரசிகர்களின் மனதில் எளிதாக ஒட்டிக் கொள்கிறார்.

தமிழாசிரியராக, நிமிடங்களே வந்து போனாலும், இயக்குநர் அழகம்பெருமாள் தனது அபாரமான நடிப்பாற்றலால் ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசைதான் படத்தின் பெரும் பலம். மிக மிக அற்புதமான இசை. பின்னணி இசையிலும் மிளிர்கிறார். இளையராஜாவின் ரலில் வரும் பறவையே ஏன் இங்கு இருக்கிறாய் என்ற பாடல் வசீகரிக்கிறது.

கதிரின் கேமராவும் இயக்குநர் ராமோடு இணைந்து கதை சொல்கிறது.

கதையைச் சொன்ன விதத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

கற்றது தமிழ் - அரைகுறையாக கற்றிருக்கிறார்கள்

Read more about: review

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil