twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கவண் - விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    3.0/5
    Star Cast: விஜய் சேதுபதி, டி ராஜேந்தர், மடோனா
    Director: கே வி ஆனந்த்

    -எஸ் ஷங்கர்

    நடிகர்கள்: விஜய் சேதுபதி, டி ராஜேந்தர், மடோனா, ஜெகன், ஆகாஷ்தீப், விக்ராந்த்

    ஒளிப்பதிவு: அபிநந்தன் ராமானுஜம்

    இசை: ஹிப் ஹாப் ஆதி

    தயாரிப்பு: ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட்

    இயக்கம்: கே வி ஆனந்த்

    ஊர் உலகத்தையே கேள்வி கேட்கும் மீடியா உலகின் இன்னொரு முகம் கோரமானது. லஞ்சம், தில்லு முல்லு, ஒரு சார்புத் தன்மை என இருக்கிற அத்தனை எதிர் நிழல்கள் உலாவும் அந்த முகத்தை, கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக, சதை கிழியும் அளவுக்குத் தோலுரித்துவிட்டார் கே வி ஆனந்த், கவண் மூலம்!

    மீடியாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு விஸ்காம் மாதிரி ஒரு பட்டப்படிப்பை முடித்து, ஒரு தனியார் சேனலில் சேர்கிறார் விஜய் சேதுபதி. இடையில் மடோனாவுடன் ஒரு காதல்... பின்னர் பிரிவு. பார்த்தால், அதே சேனலில் மடோனாவில் வேலை செய்வது தெரிகிறது.

    Kavan Review

    இன்னொரு பக்கம் அரசியல்வாதி போஸ் வெங்கட்டின் தொழிற்சாலை கழிவு அந்தப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கலந்து குடிநீரை விஷமாக்க, அதற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துகிறார்கள் விக்ராந்த் மற்றும் அவர் தோழி. போராட்டத்தை நசுக்க தோழியைக் கற்பழித்துவிடுகிறார் போஸ் வெங்கட். மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் அந்தப் பெண்ணை மடோனாவும் விஜய் சேதுபதியும் நேரில் பார்த்து வீடியோ பேட்டி எடுத்து சேனலில் வெளியிடுகின்றனர்.

    கடுப்பாகும் போஸ், சேனல் அதிபர் ஆகாஷ்தீபுடன் டீல் பேசி, அந்த பேட்டியையே மாற்றிவிடுகின்றனர். தொடர்ந்து சேனல் அதிபருடன் மோதல் வெடிக்க, விஜய் சேதுபதி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து வெளியேறி, டி ராஜேந்தர் நடத்தும் ஒரு சின்ன சேனலில் சேர்கிறார்கள்.

    டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்திலிருக்கும் ஆகாஷ்தீப் சேனலை, டிஆரின் சின்ன சேனலை வைத்து எப்படி வீழ்த்துகிறார்கள் என்பது மீதி (கவண் - உண்டிவில்).

    Kavan Review

    கேவி ஆனந்த் படங்களுக்கே உரிய அத்தனை அம்சங்களும் இந்தப் படத்திலும் உண்டு. ஒரு பக்கம் அது ஓகேதான் என்றாலும், ஒரே மாதிரி காட்சிகளைப் பார்க்கும் ஆயாசம் வருகிறது.

    மற்றபடி மீடியா உலகின், குறிப்பாக தொலைக்காட்சித் துறையில் டிஆர்பிக்காக நடக்கும தகிடுதத்தங்களிலிருந்து அத்தனை இருட்டுப் பக்கங்களையும் பட்டவர்த்தனமாக்கியுள்ளார் கேவி ஆனந்த்.

    எந்தப் பாத்திரமென்றாலும் அதைச் செய்யவே படைக்கப்பட்டவர் போலத் தெரிகிறார் விஜய் சேதுபதி. ஒரு மில்லிமீட்டர் கூட மிகையில்லாமல் இத்தனை இயல்பான நடிகனைப் பார்க்கும்போது பரவசமாக உள்ளது. கல்லூரியில் கலகல மாணவர், சமூகப் பொறுப்புள்ள ஒரு செய்தியாளர் என ஒவ்வொரு பரிமாணத்திலும் நுணுக்கமான மாறுபாடுகள் காட்டுகிறார். குறிப்பாக அவரது வசன உச்சரிப்பு செம! நடிகர்கள் ஒரு பட்டாளம் இருந்தாலும், பல வகையில் இது விஜய் சேதுபதி படம் எனலாம்.

    Kavan Review

    அடுத்து டி ராஜேந்தர். மனுசன் அந்த அடுக்கு மொழி ஸ்டைலை மட்டும் ஊறுகா மாதிரி பயன்படுத்தினால், அவர் இருக்கும் ரேஞ்சே வேறாக இருக்கும். ஆனால் சதா அடுக்கு மொழி வசனம் பேசி சோதிக்கிறார். ஆனால்ஒரு காட்சியில் உருக்கமான நடிப்பில் டச் பண்ணுகிறார். எம்.ஜி.ஆர், ரஜினி, பாலையா, நம்பியார் என கலந்து கட்டி பேசும் காட்சியில் அசத்துகிறார்.

    Kavan Review

    வெறும் டூயட் நாயகியாக இல்லாமல், கனமான நடிப்பைத் தர வேண்டிய பாத்திரம் மடோனாவுக்கு. நிறைவாகச் செய்திருக்கிறார்.

    போராளியாக வரும் விக்ராந்த், சேனல் அதிபர் ஆகாஷ் தீப், வில்லன் போஸ் வெங்கட், ஜெகன், பாண்டியராஜன், நாசர் என அனைவருமே தங்கள் பங்களிப்பைச் சரியாகச் செய்துள்ளனர்.

    படத்துக்கு பெரும் பலம் வசனங்கள். ஆனால் திகட்டத்திகட்ட டாக் ஷோ காட்சிகள். அவற்றை கணிசமாக வெட்டியிருந்தால் படம் சரியான மீடியா த்ரில்லராக இருந்திருக்கும்.

    Kavan Review

    படத்துக்கு பலமாக இருந்திருக்க வேண்டிய இசை டல்லடிக்கிறது. ஆனால் ஒளிப்பதிவாளரின் தேர்ந்த கையாளுகை விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொள்கிறது.

    மாற்றானில் சறுக்கி, அநேகனில் சற்று தடுமாறிய கேவி ஆனந்த், கவணை சரியாகக் கையாண்டு வெற்றியைத் தொட்டிருக்கிறார்.

    English summary
    KV Anand's Vijay Sethupathy - TR starring media Thriller Kavan review. Verdict: Good.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X