டாடா விமர்சனம்: பிக் பாஸ் கவின்.. பீஸ்ட் அபர்ணா தாஸ்..இளம் வயதில் பெற்றோர்கள் ஆனால் , என்ன நடக்கும்?
நடிகர்கள்: கவின், அபர்ணா தாஸ்
இசை: ஜென் மார்ட்டின்
இயக்கம்: கணேஷ் பாபு
சென்னை: ஊதாரியான கல்லூரி மாணவன் காதலித்து, குழந்தைக்கு தந்தையானதும் மாறுகிறானா இல்லையா என்கிற கதையை இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் படி இயக்குநர் கணேஷ் பாபு இயக்கி உள்ளார்.
பிக் பாஸ் புகழ் கவின் மற்றும் பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணா தாஸ் இருவரும் இணைந்து நடித்துள்ள டாடா படத்தின் டைட்டிலை போலவே ரொம்ப ஃபிரெஷ்ஷாக உள்ளது.
இன்றைய இளைஞர்களுக்கு தேவையான பாடத்தை போர் அடிக்கும் விதத்தில் அட்வைஸ் செய்து அறுக்காமல் இயல்பாக கொண்டு சென்றுள்ள டாடா படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..
டாடா கதை என்ன
எந்தவித கவலையுமின்றி ஊதாரியாக சுற்றித் திரியும் கல்லூரி மாணவன் மணிகண்டனாக கவின் நடித்துள்ளார். பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணா தாஸ் சிந்து எனும் கதாபாத்திரத்தில் கல்லூரியில் கவினை காதலிக்க திருமணம் செய்து கொள்ளாமலே இருவரும் ஒன்றாக இணைந்து குழந்தையை பெற்றுக் கொள்கின்றனர். இரு வீட்டிலும் அவர்களை சேர்க்காத நிலையில், தனியாக வாழும் போது குழந்தையை கலைத்து விடலாம் என கவின் சொல்ல, அபர்ணா மறுக்கிறார். ஆனால், கவின் திருந்துவார் பொறுப்புடன் நடந்து கொள்வார் என காத்திருந்து கடுப்பாகும் அபர்ணா தாஸ் குழந்தை பெற்றதுமே அந்த குழந்தையை கவினிடம் விட்டு விட்டு தன் வீட்டுக்கு சென்று விடுகிறார்.
தந்தையாக மாறும் கவின்
ஜாலியாக கவலைக்கும் கண்ணீருக்கும் அர்த்தம் தெரியாமல் வாழ்ந்து வரும் கவின் தனது மகனை தனியாளாக வளர்க்க படாத பாடு படும் விஷயங்களை போர் அடிக்காமல் காமெடி கலந்து சொல்லி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளார் இயக்குநர். எந்தவொரு மனுஷனுக்கும் சரியான டைம் வந்தால் அவனுக்குள் நிச்சயம் மாற்றம் வரும் என்றும் யாருமே ஊதாரி கிடையாது என்பதையும் இளம் வயதில் திருமணம் செய்து கொண்டால் என்ன என்ன சிக்கல்கள் இளைஞர்களுக்கு வரும் என்பதையும் இயக்குநர் போகிற போக்கில் பளிச்சென சொல்லி உள்ளார்.
அபர்ணா அருமை
பீஸ்ட் படத்தில் மினிஸ்டர் மகளாகவும் ஐபிஎஸ் அதிகாரியாக ஆசைப்படும் பெண்ணாக நடித்திருந்த அபர்ணா தாஸ் இந்த படத்தில் அழுமூஞ்சி கதாபாத்திரத்தில் இளம் வயதில் திடீரென கர்ப்பமாவதும், குழந்தையை கலைக்க மட்டும் சொல்லாதே என கவினிடம் முறைப்பதும், காதலும் அதன் பின்னர் வரும் ஏமாற்றங்களை சுமக்கும் ஒரு கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து அசத்தி உள்ளார்.
பிளஸ்
சாதாரண கதையை சரியான திரைக்கதை அமைத்து இளைஞர்களை ஈர்க்கும் விதத்தில் துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்பது போல, அடுத்தவன் படுற கஷ்டத்தில் மத்தவங்க அடிக்கிற ஜோக்குகளை வைத்து படத்தை தொய்வு அடையவிடாமல் காப்பாற்றி உள்ள இயக்குநரின் எழுத்து மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. கவின் மற்றும் அபர்ணா தாஸின் அளவான நடிப்பு, பாக்கியராஜ், ஐஸ்வர்யா, அட்வைஸ் செய்யும் விடிவி கணேஷ் என துணை கதாபாத்திரங்களும் படத்திற்கு பக்க பலமாக உள்ளன. ஜென் மார்ட்டின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் தரம்.
மைனஸ்
எமோஷன் காட்சிகளில் ஓவரான நெஞ்சை நக்கும் காட்சிகள் வைக்காமல் இயக்குநர் படத்தைக் கொண்டு சென்றதே இந்த படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நெகட்டிவ் என்று பார்த்தால், அடுத்த சீன் என்ன வரும் என ரசிகர்கள் அனைவரும் ஊகிக்கும் விதம் தான். ஆனால், படமாக பார்த்தால் நிச்சயம் சொதப்பாமல் உங்களை அதிகபட்சம் என்டர்டெயின் பண்ணும் இந்த டாடா!


Click it and Unblock the Notifications