Kiss Review: கிஸ் விமர்சனம்.. இதுக்கு ப்ளடி பெக்கர் படமே பரவாயில்லை.. கவின் கியரை மாத்தணும்!
சென்னை: நடன இயக்குநரான சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் தான் கிஸ். கவின், ப்ரீத்தி அஸ்ரானி, விடிவி கணேஷ், ராவ் ரமேஷ், தேவயானி, கெளசல்யா, பிரபு, ஆர்ஜே விஜய், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஃபேண்டஸி லவ் ஸ்டோரி படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. படத்தின் கதை மற்றும் நடிகர்கள் பட்டாளமே போதும் இதை ஒரு நல்ல படமாக கொடுத்து இருக்கலாம்.
ஆனால், முதல் படம் என்பதால் இயக்குநர் சதீஷ் பல இடங்களில் தடுமாறி இருப்பது தெளிவாக தெரிகிறது. அதுவே படத்துக்கு பெரிய பிரச்னையாகவும் மாறியுள்ளது.

கிஸ் அடித்தால் அந்த ஜோடிக்கு நடக்கப் போவது எல்லாம் கவினுக்கு விஷுவலாக தெரிந்துவிடும் என்றும் அதற்கு பின்னால் ஒரு ராஜா ஃப்ளாஷ்பேக் ஸ்டோரி எல்லாம் வைத்துக் கொண்டும் பிரமாதமான படத்தை கொடுக்க முடியாமல் எங்கே படக்குழு தவறியது என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
கிஸ் கதை: யாராவது ஒரு ஜோடி லிப் லாக் கிஸ் கொடுத்தால், அவர்களுக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது, அவர்கள் சேர்ந்து வாழ்வார்களா? அல்லது பிரிந்து விடுவார்களா? அவர்களது உயிரே போய்விடுமா உள்ளிட்ட அனைத்து ஜாதகமும் கவினின் கண் முன் வந்து செல்கிறது. இதற்கு காரணம் அவனுக்கு கிடைக்கும் ஒரு பழங்காலத்து புத்தகம். ஊரில் யார் காதலித்தாலும் அவர்களை பிரித்து விடும் அரசன் ஒரு ஜோடியை தீயிட்டுக் கொளுத்த அந்த ஜோடி சாபம் விடுகிறது. அதற்கு பிறகு அந்த அரசன் என்ன ஆனான், அவனுக்கும் கவினுக்கும் என்ன சம்பந்தம், காதலி ப்ரீத்தி அஸ்ரானியை கிஸ் அடித்த பிறகு அந்த பெண்ணுக்கு என்ன ஆகும் என்பதை அறிந்துக் கொள்ளும் ஹீரோ அவளை பிரிய முடிவு செய்ய கடைசியில் இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் கிஸ் படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: ஆரம்பத்தில் விஜய் சேதுபதிக்கு நன்றி கார்டு போடும் போதே கேமியோவா என்று நினைக்கத் தோன்ற மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்தது போல கவின் உருவத்தை ஸ்கெட்ச் ஆர்ட் செய்தது போல காட்டப்படும் ராஜா காலத்து கதையை சொல்பவராக குரலாக வருகிறார் விஜய் சேதுபதி. கவின் நல்ல அழகாகவும் இளமை ததும்பவும் வருகிறார். பெண்கள் என்றாலே பிடிக்காத மனநிலை கொண்டவர். அவருடைய அப்பாவாக ரமேஷ் ராவ் நடித்துள்ளார். அம்மா தேவயானிக்கு துரோகம் செய்துவிட்டு இன்னொரு பெண்ணான கெளசல்யாவுடன் அப்பா முத்தம் கொடுத்துக் கொண்டிருப்பதை பார்க்கும் கவின் இருவருக்கும் விவாகரத்து வாங்கி தருகிறார்.
டான்ஸ் ஸ்கூல் நடத்திக் கொண்டிருக்கும் ப்ரீத்தி அஸ்ரானி கீழே இருக்கும் புத்தகம் கவின் உடையது என எடுத்துக் கொடுத்துவிட்டு செல்ல அதற்கு பிறகு தான் மற்றவர்கள் கிஸ் அடிப்பதை பார்த்தால் கவினுக்கு அந்த காட்சிகள் எல்லாம் கண் முன்னே வருகிறது. ஆர்ஜே விஜய்யின் அப்பாவான விடிவி கணேஷ் சைக்காட்ரிஸ்ட் என்கிற பெயரில் வந்து காமெடி செய்கிறார். அவரது அட்வைஸ் கேட்டு புத்தகத்தை கொடுத்த பெண்ணை சந்திக்க செல்லும் கவின் அந்த பெண் மீது காதலில் விழுகிறார். கவினை பார்த்து ப்ரீத்தி அஸ்ரானியும் காதலில் விழ, இருவரும் சேர்ந்தால் என்ன ஆகும் என்பது இடைவேளை லிப் கிஸ் காட்சியில் ரிவீலாகிறது.
அதன் பின்னர், அந்த புத்தகத்தை பற்றி அலசி ஆராயும் கவினுக்கு சில விஷயங்கள் தெரிய வருகிறது. காதலிக்கு நடக்கப் போகும் கெட்ட விஷயத்தை கவின் தடுத்தாரா? மீண்டும் இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? அப்பாவின் செகண்ட் சேனல் கதை என்ன? என ஏகப்பட்ட விஷயங்களை படம் தொட்டுச் செல்கிறது.

பிளஸ்: கவின், ப்ரீத்தி அஸ்ரானி காம்போ பார்க்கவே அழகாக இருக்கிறது. இருவரும் அடிக்கும் அந்த லிப் கிஸ் காட்சி செம ஹைலைட்டாக உள்ளது. இருவரும் இணைந்து நடனமாடும் காட்சிகளும் குறிப்பாக அந்த காத்தாடி திருவிழாவில் கண்ணை மூடிக் கொண்டு நடனமாடும் காட்சிகள் லா லா லேண்ட் படத்தையே நினைவூட்டுகிறது. ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு படத்துக்கு ரிச்னஸை கொடுக்கிறது. ஜென் மார்ட்டின் இசையில் சில பாடல்கள் சிறப்பாக உள்ளது. விடிவி கணேஷ் மற்றும் ஆர்ஜே விஜய் சில இடங்களில் சிரிக்க வைக்கின்றனர்.
மைனஸ்:ஆரம்பத்தில் இருந்தே படம் ஸ்லோவாகத்தான் செல்கிறது. சூப்பரான ஃபேண்டஸி விஷயத்தை வைத்திருந்தாலும் அதை காட்சிகளாக கடத்தும் இடத்தில் இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் ரொம்பவே சிரமப்படுகிறார். ராஜா காலத்து கதை எல்லாம் விஷுவலாக காட்டியிருந்தால் படத்தின் ரேஞ்சே சிறப்பாக சென்றிருக்கும். முதல் பாதியை விட இரண்டாவது பாதியில் கதை சூடு பிடித்தாலும், அந்த கிளைமேக்ஸ் ஃபயர் சீன் ஃபயராக இல்லாமல் சிஜி காட்சியை போல தெரிவது ஏமாற்றத்தை தான் கொடுக்கிறது. காதலர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு ஜாலியான ரைடாக இந்த படம் இருக்கும். கவின் கண்டிப்பாக தனது கியரை மாற்றித்தான் ஆக வேண்டும்.


Click it and Unblock the Notifications











