Kottukkaali Review: கொட்டுக்காளி விமர்சனம்.. சமூகத்தை பிடித்து ஆட்டும் பேய்.. எப்போது சரியாகும்?
நடிகர்கள்: சூரி, அன்னா பென்
இயக்கம்: பி.எஸ். வினோத்ராஜ்
தயாரிப்பு: சிவகார்த்திகேயன்
சென்னை: சர்வதேச திரைப்பட விழாவான பெர்லின் உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட 'கொட்டுக்காளி’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் பார்வைக்கு வரும் ஆகஸ்ட் 22ம் தேதி திரைக்கு வருகிறது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ளனர்.
இவர்கள் இருவரை தவிர மற்ற நடிகர்கள் எல்லாமே கிராமத்து ஆட்கள் தான். பின்னணி இசை இல்லாமல் வெறும் வண்டி சப்தங்களையும், சேவலின் கொக்கரக்கோ சத்தத்தையும் மட்டுமே வைத்துக் கொண்டு முழு படத்தையும் கொடுக்க முடியும் என பரிசோதனை முயற்சி நடத்தி வினோத்ராஜ் கொடுத்துள்ள இந்த படைப்பு உலகத் தரம் வாய்ந்த படைப்பாகவே பார்க்கப்படுகிறது.

இந்த கொட்டுக்காளி படத்தின் மூலம் வினோத்ராஜ் சமூகத்திற்கு சொல்ல வரும் கருத்து என்ன என்பது குறித்தும் வெகுஜன ரசிகர்களை இந்த படம் கவருமா? என்பது குறித்தும் விரிவாக பார்க்கலாம் வாங்க..
கொட்டுக்காளி கதை: 12ம் வகுப்பு முடிந்த உடனே தனது முறைப்பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளாமல் பாண்டி (சூரி) அவரை கல்லூரிக்கு படிக்க அனுப்புகிறார். ஆனால், கல்லூரியில் காதல் வயப்பட்ட மீனா (அன்னா பென்) பாண்டியை திருமணம் செய்ய மறுக்கிறார். அவருக்கு பேய் பிடித்து விட்டதாகக் கூறி குடும்பமே சாமியார் ஒருவரிடம் அழைத்துச் செல்லும் பயணம் தான் இந்த படமே. கடைசியாக மீனாவுக்கு பிடித்த பேய் ஓட்டப்பட்டதா? இந்த சமூகத்தில் நிலவும் பேய் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதா? என்பது தான் கதை.

படம் எப்படி இருக்கு?: பாண்டியாக சூரி தனது வித்தியாசமான நடிப்பால் மிரட்டியிருக்கிறார். படம் முழுக்க அவர் கவ்விய தொண்டையுடன் பேசி நடித்திருப்பது பிரம்மிக்க வைக்கிறது. காமெடி நடிகராக இருந்த சூரியை ஒரு சீனில் கூட காணமுடியவில்லையே என்கிற அளவுக்கு இந்த படத்தில் சிறந்த நடிகராக உருமாறியிருக்கிறார். சூரியை தவிர்த்து மீனா கதாபாத்திரத்தில் நடித்த அன்னா பென் எவ்வளவு அடி வாங்கினாலும், உதை வாங்கினாலும், பிடிவாதம் கொண்ட பெண்ணாகவும், சூரியை ஏறெடுத்தும் பார்க்காத பெண்ணாகவும் அண்டர்பிளே நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.
சூரி, அன்னா பென்னை தவிர்த்து பாண்டியின் அப்பாவாகவும், மீனாவின் அம்மாவாகவும் மற்றும் அந்த இரு அக்காக்களும் கூடவே வரும் குடும்பத்து நபர்களும், பலி கொடுக்க அழைத்துச் செல்லப்படும் சேவலும், அதற்கு நெல் கொடுக்கும் அந்த சிறுவனும் என ஒவ்வொருவரின் நடிப்பும் நடிப்பாக தெரியாமல் இயற்கையாகவே இருப்பது ஹைலைட்.
ஒரு டிராவல் படத்தில் இடைவேளை வரை ஆட்டோ ஓடுவதும், இரு சக்கர வாகனங்களில் குடும்பத்தினர் பயணிப்பதை மட்டுமே காட்டி, ஆங்காங்கே சிரிக்கவும், ரசிக்கவும், ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்கிற பதபதைப்பையும் இயக்குநர் வினோத்ராஜ் கடைசி வரை சரியாகவே கடத்தியிருக்கிறார்.
கிளைமேக்ஸ் காட்சியில் பெண்ணுக்கு பேயோட்டும் காட்சியை படமாக்கப்பட்ட விதமும், அந்த பெண்ணுக்கான பிரச்சனையை விவரிக்கும் இடத்தில் தான் சமூகத்தில் பிடித்திருக்கும் பேயை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

பிளஸ்: சூரி மற்றும் அன்னா பென்னின் நடிப்புக்காகவே இந்த படத்தை பார்க்கலாம். இடைவேளை வரை பெரிதாக எந்தவொரு காட்சியும் இல்லை என்றாலும், அந்த இடைவேளைக்கு முந்தைய சண்டை காட்சியில் சூரி நடித்திருக்கும் நடிப்பு அபாரம். சூரிக்குள் இப்படியொரு நெகட்டிவ் கதாபாத்திரம் இருக்கிறதா? என்றே ஆச்சர்யப்பட வைத்து விட்டார். ஒளிப்பதிவாளர் சக்திவேல், மலைகளையும், சாலைகளையும், மனித முகங்களையும், அவர்களின் மனதில் உள்ள எண்ணங்களையும் படம் பிடித்துள்ள விதம் தான் சர்வதேச ரசிகர்களையும் இந்த படம் ஈர்க்க காரணம். அந்த ஆட்டோவை திருப்பும் சீனில், அன்னா பென் மட்டும் தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்க மாட்டேன் என அமர்ந்திருப்பது காட்சி உருவகம்.
மைனஸ்: கலை படைப்புகளை காண்பவர்களுக்கான படமாக இயக்குநர் வினோத்ராஜ் எடுத்துள்ள இந்த கொட்டுக்காளி படத்தின் கிளைமேக்ஸ் காட்சி வெகுஜன ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து நிறைவுடன் வெளியேறுவார்களா? என்றால் நிச்சயம் இல்லை என்கிற பதில் தான் வரும். பொதுமக்களுக்கு தியேட்டரில் படத்தை கொடுக்க வரும் போது, கடைசி கிளைமேக்ஸ் காட்சியை நிறைவான படமாக முடித்திருந்திருக்கலாம். தியேட்டரில் எந்தளவுக்கு மக்களை இந்த படம் ஈர்க்கும் என்பது கேள்விக்குறி தான். அதற்கான பதில் படம் வெளியானதும் நிச்சயம் தெரிந்து விடும். ஆனால், அதையெல்லாம் தாண்டி ஒரு வாழ்வியல் படத்தை அனுபவிக்கவும் அந்த மீனாவின் வாழ்வு எப்படி இருந்தால் நல்லா இருக்கும் என்கிற முடிவை நீங்கள் எடுக்கவும் இந்த படத்தை தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











