Kumaara Sambavam Review: குமார சம்பவம் விமர்சனம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனுக்கு வெற்றி கிடைத்ததா?
சென்னை: இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் மூலம் பிரபலமான குமரன் தங்கராஜ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள 'குமார சம்பவம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பலரும் போட்டிப் போட்டுக் கொண்டு ஹீரோவாக களமிறங்கி வருகின்றனர். கஷ்டப்பட்டு எப்படியாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற போராட்டத்துடன் தனது முதல் படத்தை குமரன் ரிலீஸ் செய்துள்ளார்.

சந்தானம், சிவகார்த்திகேயன், யோகி பாபு, கவின், ரியோ, ராஜு ஜெயமோகன், கேபிஒய் பாலா என தொடர்ந்து விஜய் டிவியில் இருந்து ஏகப்பட்ட ஹீரோக்கள் அறிமுகமாகி வரும் நிலையில், அந்த வரிசையில் புது வரவாக களமிறங்கியுள்ளார் குமரன். முதல் படத்திலேயே காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன் என கலந்துக்கட்டி எண்டர்டெயின்மெண்ட் படமாக கொடுக்க முயற்சித்துள்ள அவரது படம் எப்படி இருக்கு என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
குமார சம்பவம் கதை: சமூகப் பிரச்னைகளுக்காகப் போராடும் இளங்கோ குமரவேலுவுக்கு, ஜி.எம். குமார் தனது வீட்டை வாடகைக்குக் கொடுத்து நெருங்கிய நண்பராகிறார். இளங்கோ குமரவேலுவுக்கும், ஜி.எம். குமாரின் பேரனான குமரன் தங்கராஜுக்கும் இடையே ஆரம்பத்திலிருந்தே கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன. இதற்கிடையில், சினிமா இயக்குநராகப் போராடும் தனது பேரன் குமரனுக்காக, ஜி.எம். குமார் தனது சொந்த வீட்டை விற்று பணம் தர முடிவெடுக்கிறார். அந்தப் பணத்தில் ஒரு பகுதியை இளங்கோ குமரவேலுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஜி.எம். குமார் உயில் எழுதி வைக்கிறார்.
ஆனால், திடீரென இளங்கோ குமரவேல் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். மொத்த சொத்துக்காக ஆசைப்பட்டு ஹீரோ தான் கொலை செய்துவிட்டாரா என அனைவரது சந்தேகப் பார்வையும் குமரன் மீது விழ, போலிஸ் விசாரணையைத் தொடங்குகிறது. அதன் பிறகு என்ன நடந்தது, இளங்கோ குமரவேலின் மரணத்திற்கான காரணம் என்ன? குமரன் நினைத்தது போல டைரக்டர் ஆனாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படம் எப்படி இருக்கு?: சின்னத்திரையில் பிரபலமான குமரன் தங்கராஜ், தனது முதல் படத்திலேயே நகைச்சுவை, சண்டைக் காட்சிகள், காதல் என பல பரிமாணங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். முக பாவனைகளிலும் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது. பாயல் ராதாகிருஷ்ணா தனது அழகு மற்றும் நடிப்பால் கவர்கிறார். ஜி.எம். குமார் மற்றும் இளங்கோ குமரவேலின் அனுபவ நடிப்பு படத்திற்குப் பலம் சேர்க்கிறது.
பிளஸ்: கிரைம் த்ரில்லர் படமாக சீரியஸாக கொண்டு செல்லாமல், காமெடி படமாக மாற்றிய இடத்தில் இயக்குநர் ஸ்கோர் செய்கிறார். பால சரவணனின் நகைச்சுவை ஓரளவுக்கு ரசிக்க வைக்கிறது. ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவும், அச்சு ராஜாமணியின் இசையும் படத்திற்குச் சரியான வேகத்தைக் கொடுத்துள்ளன. பாடல்கள் கேட்கும் ரகம். அறிமுக ஹீரோ என்கிற தடம் தெரியாத அளவுக்கு முடிந்தவரை குமரன் நல்லாவே நடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
மைனஸ்: வித்தியாசமான, கலகலப்பான காட்சிகள் படத்திற்குப் பலம் சேர்க்கின்றன. ஆனால், சலிப்புத் தட்டும் திரைக்கதை படத்தின் பலவீனமாக உள்ளது. சில காட்சிகள் சீரியல் போல நகர்வதால், ஒரே காட்சியை மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. வழக்கமான கதைக்களமாக இருந்தாலும், அதில் புதுமையான காட்சிகளைப் புகுத்தி இயக்குநர் பாலஜி வேணுகோபால் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தியுள்ளார். இளங்கோ குமரவேலின் இறப்புக்கான காரணம் சொல்லப்படும் இடம் புதுமையாக உள்ளது. 'குமார சம்பவம்' படத்தைப் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம். இன்னும் மெனக்கெட்டு இருந்தால் குடும்பஸ்தன் படம் அளவுக்கு சூப்பராகவே வந்திருக்கும்.


Click it and Unblock the Notifications











