Are You Ok Baby Review: பணமா? பாசமா?.. லட்சுமி ராமகிருஷ்ணனின் ஆர் யூ ஓகே பேபி விமர்சனம் இதோ!
இசை: இளையராஜா
நேரம் : 1 மணி நேரம் 53 நிமிடங்கள்
சென்னை: Lakshmi Ramakrishnan's Are You Ok Baby Review - சொல்வதெல்லாம் உண்மை ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான லட்சுமி ராமகிருஷ்ணன் 'ஆரோகணம்', 'நெருங்கி வா முத்தமிடாதே', 'ஹவுஸ் ஓனர்' உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ளார்.
வித்தியாசமான கதைகளை திரைப்படங்களாக இயக்கி வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் புதிதாக உருவாகி உள்ள ஆர் யூ ஓகே பேபி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் சமுத்திரகனி, அபிராமி, மிஷ்கின், முல்லையரசி, அசோக் மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சொல்வதெல்லாம் ரியாலிட்டி ஷோவையே சொல்லாததும் உண்மை எனும் ரியாலிட்டி ஷோவாக படத்தின் இயக்குநரே இந்த படத்திற்குள் நடத்தி உள்ள நிலையில், படம் எப்படி இருக்கிறது என்பது தொடர்பான விரிவான விமர்சனத்தை இங்கே காணலாம் வாங்க..

உண்மை கதை: சொல்வதெல்லாம் உண்மை டாக் ஷோவில் இடம்பெற்ற கதையா? என்கிற கேள்விக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய ஷோவில் நடந்த கதை இல்லை என்றும், ஆனால், இன்னொரு டாக் ஷோவில் நடந்த உண்மையை கதையை அடிப்படையாக வைத்துத் தான் இந்த படத்தை உருவாக்கி உள்ளேன் என்றும் கூறியிருந்தார்.
ஆர் யூ ஓகே பேபி கதை: திருமணம் செய்யாமல் அசோக் என்பவருடன் நெருங்கி பழகும் அறிமுக நாயகி முல்லையரசி கர்ப்பமாகிறார். ஆனால், காதலனை நம்பி கருவுற்ற நிலையில், அந்த குழந்தையை தனது வறுமையின் காரணமாக வளர்க்க முடியாத சூழலில் அந்த குழந்தையை தொழிலதிபரான சமுத்திரகனி மற்றும் அபிராமி தம்பதியினருக்கு விற்று விடுகிறார்.
பல ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்து வரும் தம்பதியினர் அந்த குழந்தையை சொந்த குழந்தையை போல சீவி சிங்காரித்து பாசத்தை பொழிந்து வளர்ந்து வருகின்றனர். மீண்டும் அந்த குழந்தையை அவர்களிடம் இருந்து ஒரு காரணத்திற்காக வாங்க முல்லையரசி போராடுவது தான் இந்த படத்தின் கதை.

பாசிட்டிவ்: சிக்கலான கதையை சீரான திரைக்கதையுடன் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய விதத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பம் முதல் கடைசி வரை எந்தவொரு குழப்பமும் இல்லாமல் படத்தை கொண்டு சென்று இருக்கிறார்.
சொல்வதெல்லாம் உண்மை போலவே சொல்லாததும் உண்மை எனும் டாக் ஷோவில் இயக்குநரே கதைக்குள் நுழைந்து காப்பாற்ற முயற்சித்து இருக்கிறார். இளையராஜாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பலம். சமுத்திரகனி மற்றும் அபிராமியின் தேர்ந்த நடிப்பு படத்தை ரசிக்க வைக்கிறது. தொழில்நுட்ப ரீதியாகவும் எந்தவொரு குறையும் இல்லாதது படத்திற்கு பலமாக மாறி உள்ளது.
நெகட்டிவ்: குழந்தையை காசுக்காக விற்று விட்ட நிலையில், பாசத்திற்காக போராடும் முல்லையரசி மீண்டும் குழந்தையை பெற நிகழ்ச்சியை நாடுவதும், நீதிமன்றத்தை நாடுவது போன்ற உண்மை சம்பவங்கள் இடம் பெற்றிருந்தாலும், திரைக்கதை வழியாக அந்த காட்சிகள் பல இடங்களில் தொய்வை தருகின்றன.
மேலும், படத்தின் கிளைமேக்ஸ் யூகிப்பதை போன்றே முடிவடைவதால் படம் பெரிதாக கடைசியில் ரசிகர்களை கவர தவறுகிறது. ஆனால், உண்மையான பாச போராட்டமும், பணத்துக்கும் இடையே நடக்கும் ஒரு விஷயத்தை தைரியமாக படமாக்கிய நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணனை நிச்சயம் ரசிகர்கள் பாராட்ட தவறவில்லை. தாராளமாக ஒரு முறை தியேட்டரில் இந்த படத்தை பார்க்கலாம்.
ஆர் யூ ஓகே பேபி - ஓகே பேபி தான்!


Click it and Unblock the Notifications











