LIK Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) விமர்சனம்.. விக்கிக்கு வெற்றி கொடுத்தாரா பிரதீப் ரங்கநாதன்?
சென்னை: செல்போன்களால் பறவைகளுக்குப் பாதிப்பு என பிரம்மாண்டமாக ஷங்கர் ரஜினிகாந்த், அக்ஷய் குமாரை வைத்து 2.0 படத்தை எடுத்தார். விக்னேஷ் சிவன் ஒரு படி மேலே போய் ஸ்மார்ட் போன்களால் குழந்தைகளுக்கும் மனிதர்களுக்கும் உண்டாகும் பாதிப்புகளை லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) படத்தின் மூலம் அழகாகவே சொல்லியுள்ளார்.
லவ் டுடே படத்திற்கு பிறகே பிரதீப் ரங்கநாதனை வைத்து பெரிய பட்ஜெட்டில் விக்னேஷ் சிவன் இந்த படத்தை ஆரம்பித்தார். டிராகன், டியூட் படங்கள் முன்னதாக வெளியாகி 100 கோடிக்கும் அதிகமான பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்ற நிலையில், இந்த படத்துக்கும் அதே எதிர்பார்ப்பும் அழுத்தமும் இருப்பதை பிரதீப் ரங்கநாதனே வெளிப்படையாக பேசினார்.

ஆனால், இந்த படமும் கண்டிப்பாக 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை ஈட்டும் அளவுக்கு படம் வொர்த்தாக இருக்கா? இல்லையா? விக்னேஷ் சிவன் பிளாக்பஸ்டர் வெற்றிப் படத்தை கொடுத்துள்ளாரா? இல்லையா? படத்தின் கதை, பிளஸ், மைனஸ் உள்ளிட்ட விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி கதை: காதலர்களுக்கு மத்தியில் இருக்கும் காதல் உண்மையானதா? பொய்யானதா? என்பதை வேவு பார்க்கும் அளவுக்கு கேமரா பொருந்திய ஒரு மோதிரம் போன்ற டிவைஸை 2040ல் சூர்யன் (எஸ்.ஜே. சூர்யா) உருவாக்கி இந்தியாவில் மிகப்பெரிய கம்பெனியாக மாற்றியுள்ளார். தமிழ்நாடு 2040ம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை காட்டிய விதம் மிகவும் அருமை. சூரியனின் கம்பெனியில் அந்த LIK டிவைஸுக்கு குரல் கொடுக்கிறார் வாசு என்கிற வைப் வாசி (பிரதீப் ரங்கநாதன்). குழந்தைப் பருவத்தில் இருந்தே போன் வளர்க்கும் பதுமையாக வளரும் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் தான் தீமாவுக்கும் (க்ரித்தி ஷெட்டி) வாசுவுக்கும் காதல் மலர அவர்களது லவ் மீட்டர் 3 சதவீதமாக குறைவாக இருப்பதாக லைக் காட்ட வாசுவுக்கு டாட்டா காட்டிவிட்டு தீமா செல்கிறார். ஆப்பை விட ஹார்ட் எவ்ளோ பெரிய விஷயம் என்பதை வைப் வாசி நிரூபித்து ஜெயித்தாரா? இல்லையா? என்பது தான் எல்ஐகே படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: 2040ம் ஆண்டு உலகமே டெக்னாலஜி பின்னாடி ஓடிக்கொண்டிருக்க சூரியனின் LIK நிறுவனம் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால், அதே நேரத்தில் ஸ்மார்ட்போன்கள் மூலம் தவறு செய்பவர்கள் சீமான் நடத்தி வரும் சீர்த்திருத்த சிறைச்சாலையில் கைதாவதும் அங்கே ஸ்மார்ட்போன்களை உடைத்து எறிந்து விட்டு உள்ளே செல்லும் காட்சிகளும், போன் காட்டினால் தான் குழந்தைகள் சாப்பிடும் என பெற்றோர்கள் அடம்பிடிக்க சீமானின் மகனாக வரும் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் பெற்றோர்களை பாட்டு பாடச் சொல்லி சோறு ஊட்டும் ஆரம்ப காட்சியிலேயே படம் நல்ல மெசேஜ் உடன் ஆரம்பிக்கிறது.
ஷங்கர் படத்தை போல தீமா உள்ளிட்ட பாடல்கள் பிரம்மாண்டமாகவும் 2040ல் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனை எப்படி இருக்கும், நீதிமன்றம் எப்படி இருக்கும், கூவம் நதி எப்படி இருக்கும் என காட்டிய விதம் அதற்காக செய்யப்பட்ட புரொடக்ஷன் எல்லாமே ஃபர்ஸ்ட் கிளாஸ்.
க்ரித்தி ஷெட்டியின் அம்மாவாக மாளவிகா (வாள மீனு) என்கிற பெயரிலேயே நடித்துள்ளார். ஆரம்பத்தில் அவர் சிறைக்குச் செல்வதும் அதன் பின்னர், தனது மகளை ஸ்மார்ட் போன் கொடுத்து கெடுத்து விட்டோமே என மனம் கலங்கும் காட்சிகளில் கம்பேக் கொடுத்துள்ளார்.
படத்தின் ஹைலைட்டே எஸ்ஜே சூர்யா தான். மேலும், அவருடன் வரும் ரோபோவுக்கு அனிருத் குரல் கொடுத்திருப்பது, கிளைமேக்ஸில் என்னைத் தாண்டி தான் எங்க அண்ணனை தொடணும் என வரும் ரோபோ சண்டைக் காட்சி கண்டிப்பாக குழந்தைகளை கவர்ந்து விடும். ஒட்டுமொத்த தியேட்டரே பிளாஸ்ட் ஆன எக்ஸ்பீரியன்ஸ் தான். பிரதீப் ரங்கநாதன் உடன் யோகி பாபு காம்போ செமையாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. அந்த ஹாலோவீன் பார்ட்டியில் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் லுக்கில் பிரதீப் பண்ணும் விஷயம். எஸ்.ஜே. சூர்யாவிடம் சவால் விட்டு ஜெயிக்கப் போராடுவது, சீமானின் சண்டைக் காட்சி என ஏகப்பட்ட சூப்பரான விஷயங்கள் கடைசி வரை உள்ளன.
பிளஸ்: விக்னேஷ் சிவனின் எழுத்து, இயக்கம் சொல்ல வந்த கருத்து அதை போர் அடிக்காமலும் அட்வைஸ் பண்ணுவது போல சொல்லாமல் அழகாக பிரதீப் ரங்கநாதனை வைத்து கடத்திய விதம் படத்திற்கு பெரிய பலம். அனிருத்தின் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. செவன் ஸ்க்ரீன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் படத்துக்கு தேவையான புரொடக்ஷன் செலவுகளை செய்தது படம் தாமதமாக வெளியான உணர்வை எங்கேயும் தரவில்லை. கெளரி கிஷனின் கதாபாத்திரம், ஆனந்த்ராஜின் கிளைமேக்ஸ் போர்ஷன், ரோபோக்களுடன் பிரதீப் சண்டை போடும் காட்சி, விக்னேஷ் சிவன் காதலை காட்டிய விதம் என அனைத்துமே படத்திற்கு பிளஸ் தான். ரவி வர்மனின் ஒளிப்பதிவு ஷங்கர் படத்தை பார்த்தது போன்ற பிரம்மாண்டத்தை கண் முன்னே காட்டுகிறது. எல்லா ஃபிரேமும் கலர்ஃபுல்லாகவும் அழகாகவும் உள்ளன. பிரதீப் ராகவனின் எடிட்டிங் படத்தை கடைசி வரை வைப் ஆக்குகிறது.
மைனஸ்: படத்தின் பெரிய மைனஸ் ஆக க்ரித்தி ஷெட்டியின் தேர்வு தான் உள்ளது. கடைசியில் அவர் ஃபீல் செய்து அழும் இடங்களில் கூட நடிப்பு பெரிதாக கவரவில்லை. லிப் சிங்க் பிரச்னைகளும் நிறையவே உள்ளன.மமிதா பைஜு டியூட் படத்தில் அந்த விஷயத்தில் செம ஸ்கோர் செய்திருப்பார். படத்தின் முதல் பாதி ஜாலியாக சென்ற அளவுக்கு 2வது பாதி செல்லாமல் கொஞ்சம் சொதப்பியது. ஆனால், ஸ்மார்ட் போன் பயன்பாடு, சோஷியல் மீடியா பயன்பாடு, ஏஐ எல்லாம் மனிதர்களுக்காக வேலை செய்ய வேண்டுமே தவிர மனிதர்களை காலி செய்யக் கூடாது என விக்னேஷ் சிவன் முடித்துள்ள விதம் படத்தை பாராட்ட வைக்கிறது. பிரதீப் ரங்கநாதனுக்கு 4வது பிளாக்பஸ்டரும் ரெடி!


Click it and Unblock the Notifications











