twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லிங்கா விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    3.5/5
    எஸ் ஷங்கர்

    நடிப்பு: ரஜினிகாந்த் (இருவேடங்கள்), சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, சந்தானம், ராதாரவி, விஜயகுமார், இயக்குநர் விஸ்வநாத்

    ஒளிப்பதிவு: ரத்னவேலு

    கதை : பொன் குமரன்

    இசை: ஏ ஆர் ரஹ்மான்

    தயாரிப்பு: ராக்லைன் வெங்கடேஷ்

    இயக்கம்: கே எஸ் ரவிக்குமார்

    இந்தியாவில் வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்ப்பார்ப்புடன் வெளியாகியிருக்கும் ரஜினியின் லிங்கா, சரித்திரமும் சமகாலமும் கலந்த ஒரு சுவாரஸ்யமான கதை. அரங்குக்கு வரும் ஒவ்வொரு ரசிகனையும் அனைத்து விதங்களிலும் திருப்திப்படுத்த வேண்டும் என்று பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு பிரமாண்டம்.

    Lingaa review

    கதை மிக அழுத்தமானது. ஊருக்கு ஆறு என ஒன்று இருந்தாலும், அந்த ஆறால் எந்தப் பயனுமின்றி, பஞ்சத்தில் குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொள்ளும் சோலையூர் மக்களுக்காக ஒரு அணையைக் கட்டுகிறார் ராஜா லிங்கேஸ்வரன் (ரஜினி). இந்த அணைக்காக தான் வகிக்கும் பிரிட்டிஷ் இந்திய அரசின் கலெக்டர் பதவியைத் துறக்கிறார். சொத்து முழுவதையும் இழக்கிறார். ஆனால், எந்த மக்களுக்காக அணை கட்டினாரோ அதே மக்களால் விரட்டப்படுகிறார் ஒரு பிரிட்டிஷ் அதிகாரின் நயவஞ்சகம் மற்றும் நம்ம ஊர் எட்டப்பன்களால். எழுபதாண்டு காலம் ஓடுகிறது. மீண்டும் அந்த ஊர் மக்களுக்கும் அவர் கட்டிய அணைக்கும் ஆபத்து நேர்கிறது, அரசியல்வாதி ரூபத்தில். எப்படி இவர்களைக் காக்கிறார் ராஜாவின் வாரிசு (இன்னொரு ரஜினி) என்பது திரையில் பார்க்க வேண்டிய மீதி.

    வாரே வா... என்ன ஒரு அருமையான கதை, அதற்கேற்ற திரைக்கதை. பாராட்டுகள். குறிப்பாக அந்த ப்ளாஷ்பேக் காட்சிகள் அத்தனை கச்சிதம். இவற்றை மட்டும் தனியாகப் பிரித்தால் கூட ஒரு முதல் தரமான வரலாற்றுப் படம் கிடைத்துவிடும் எனும் அளவுக்கு அற்புதமான பகுதி அது. ரஜினிக்கு மட்டுமே இப்படி அற்புதமான ப்ளாஷ்பேக்குகள் அமைகின்றன.

    Lingaa review

    அடுத்து ரஜினி. படம் முழுவதையும் சுமப்பவர் ரஜினிதான். அறிமுகமாகும் அந்த முதல் காட்சி பிரமிக்க வைக்கிறது. இந்த மனிதருக்கு திரையில் மட்டும் வயதே ஆகாது என்று கற்பூரம் அடித்துச் சொல்லலாம். ஒவ்வொரு காட்சியிலும் அந்த ஸ்டைலும் அழகும் இளமையும் அவரது உடல் மொழியும் பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறது. அந்த ரயில் சண்டையில் கிரிக்கெட் மட்டையால் அவர் ஸ்டன்ட் ஆட்களைப் பந்தாடும் ஸ்டைல் அருமை.

    இரண்டு வேடங்களிலுமே ரஜினி தன் ரசிகர்களை வசியம் செய்துவிட்டார் என்றால் மிகையல்ல. ரஜினிக்கு மேக்கப் போட்டவர்கள், காஸ்ட்யூம் பார்த்தவர்கள் அனைவருக்குமே பாராட்டுகள். லீ விட்டேகரின் அந்த ரயில் சண்டைக் காட்சி உறைய வைக்கிறது.

    கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் இந்தப் படத்தில் அத்தனை நேரமும் சலிப்பின்றி ரஜினியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அந்த அளவு மனிதர் வசீகரிக்கிறார்!

    Lingaa review

    ரஜினியின் நாயகிகளாக வரும் சோனாக்ஷி மற்றும் அனுஷ்கா இருவருக்குமே நடிக்க வாய்ப்புடன் கூடிய பாத்திரங்கள். அருமையாக நடித்துள்ளனர். அந்த மரகத நெக்லஸ் திருடும் காட்சியில் அனுஷ்காவும் ரஜினியும் ரசிகரின் உள்ளங்களைக் கொள்ளையடிக்கின்றனர். ரஜினியிடம் அனுஷ்கா தன்னைப் பறிகொடுக்கும் நெருக்கமான காட்சிகளில் காதல் ரசம்..!

    ஜாக்கெட் போடாத காலத்துப் பெண்ணாக வரும் சோனாக்ஷி சிறப்பாக நடித்துள்ளார். ஒரு காட்சி... எல்லாம் இழந்த ரஜினியிடம் தன்னை ஒப்படைத்துக் கொள்கிறார் சோனாக்ஷி. பின்னர் ஊர்க்காரர்கள் எங்கெங்கோ தேடி ஒரு நாள் அவர்களைக் கண்டுபிடித்து ஊருக்கு அழைக்கிறார்கள். மீண்டும் ராஜவாழ்க்கையை வாழச் சொல்கிறார்கள். அதை சிம்பிளாக மறுத்துவிட்டு, இந்த வாழ்க்கை எப்படி என மனைவி சோனாக்ஷியைப் பார்ப்பார். அதைப் புரிந்து, நிறைந்த மனசு முகத்தில் எதிரொலிக்க சோனாக்ஷி பார்க்கும் பார்வையில் அவரது பக்குவ நடிப்பு தெரிகிறது.

    Lingaa review

    முந்தைய படங்களில் ரஜினியுடன் கொஞ்சம் எட்ட நின்றே காமெடி செய்த சந்தானம் இந்த முறை, மிக நெருங்கிய 'நண்பேன்டா' தோழனாக (கவனிக்க நண்பேன் மட்டும் சந்தானம் சொல்ல, டா என முடிப்பார் ரஜினி.. மரியாதை மரியாதை!!) வருகிறார். முதல் பாதி முழுக்க ரஜினியுடன் சந்தானம் கலக்குகிறார்.

    வில்லனாக வரும் ஜெகபதி பாபு, கருணாகரன், விஜயகுமார், ராதாரவி, அனுமோகன், பொன் வண்ணன், ஜெயப்பிரகாஷ், அந்த பிரிட்டிஷ் கலெக்டர் மற்றும் அவர் மனைவி என அனைவருமே சரியாகச் செய்துள்ளனர்.

    படத்தின் அத்தனை காட்சிகளுமே பிரமாண்டம்தான். அதுவும் அந்த அணை கட்டும் காட்சியும், கூடவே வரும் ஆயிரக்கணக்கான துணை நட்சத்திரங்களும்.. இவ்வளவு பெரும்படையைக் கட்டியாள ரவிக்குமார் மாதிரி இயக்குநர்களால்தான் முடியும்.

    Lingaa review

    ரஜினி படத்தைப் பொறுத்தவரை, அவரது ரசிகனுக்கு எதுவுமே குறையில்லை. அவர் 'வந்தா மட்டும் போதும்'தான். ஆனால் மற்றவர்களுக்கு...?

    படத்தின் ஆகப் பெரிய குறை.. அநியாயத்துக்கு நீளும் அந்த க்ளைமாக்ஸ் துரத்தல், பவர் ரேஞ்சர்ஸ் கேம் மாதிரி ஆகிவிட்ட அந்த பலூன் சண்டை... (ஆதவன் ராக்கெட் லாஞ்சர் மேட்டரை விட மாட்டேங்குறாரே டைரக்டர்!) இத்தனை நம்பகமான வரலாற்று ரீதியான கதையை உருவாக்கியவர்கள், எதற்காக இத்தனை சினிமாத்தன க்ளைமாக்ஸை வைத்தார்கள்? இவற்றை நிச்சயம் தவிர்த்துவிட்டு, தரையிலேயே நடப்பது போல ஒரு அழுத்தமான காட்சியை வைத்திருக்கலாம்.

    முத்து, படையப்பா, அருணாச்சலம், சிவாஜி படங்களில் ரஜினி எல்லா சொத்துகளையும் இழந்து நடுத்தெருவுக்கு வருவார். இந்தப் படத்தில் அப்படி ஒரு காட்சி. சென்டிமென்ட் என்றாலும், கதையின் போக்கை எளிதில் யூகிக்க முடிகிறது.

    Lingaa review

    ரத்னவேலுவின் ஒளிப்பதிவு பிரமிப்பை பல மடங்காக்குகிறது. ரஜினியை ஏக ஸ்டைல், இளமை, அழகுடன் படம்பிடித்திருக்கிறார். கலை இயக்குநருக்கு செம வேலை. அந்த பிரமாண்ட அணையை இவ்வளவு குறுகிய காலத்துக்குள் கட்டி, படமாக்கியது அசர வைக்கிறது.

    ஏ ஆர் ரஹ்மான் இன்னொரு ஹீரோ. அனைத்துப் பாடல்களும் பிரபலம். மன்னவா, இந்தியனே.. பாடல்கள் இனிமை. மோனா கேசோலினாவில் ரஜினியின் ஸ்டைல், நடனம், அனுஷ்காவின் அழகு கிறங்கடிக்கிறது. துவக்கப் பாடல் இன்னும் கூட நன்றாக ட்யூன் செய்திருக்கலாம். அதே போல, ரஜினி படங்களில் அவர் நடந்து வரும் காட்சிகளில் பின்னணி இசையில் பொதுவாகவே கலக்குவார் ரஹ்மான். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். ஆனால் அந்தக் குறையைப் போக்குகிறது ரஜினியின் நடனம். அதே பழைய உற்சாகம், துடிப்பு, துள்ளல்!

    இதுவரை ரஜினியைக் காட்டாத அளவுக்கு இந்தப் படத்தில் புதிதாகக் காட்டிவிட வேண்டும் என்ற மெனக்கெடல் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாருக்கு. அதற்கான பலனும் திரையில் தெரிகிறது. திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்கி, க்ளைமாக்ஸை நச்சென்று முடித்திருந்தால், லிங்கா வெறும் படமல்ல, சரித்திரமாய் மனதில் பதிந்திருக்கும்.

    ஆனால் ரஜினியை, அவர் படத்தை ரசிக்க இது ஒரு பெரும் தடையல்ல.. என்ஜாய்!

    Read in English: Lingaa Movie Review
    English summary
    Lingaa is good a historical action entertainer, story surrounding the King Lingaa who sacrifices everything to build a dam that remembers the construction of Mullaiperiyar Dam constructed in 1890 when British Rulling India.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X