Love Review: ‘காதல்’ நாயகன் பரத்தின் 50வது படம் Love எப்படி இருக்கு..? திரைவிமர்சனம் இதோ!
இயக்கம்: ஆர்பி பாலா
இசை: ரோனி ரபேல்
சென்னை: ஷங்கரின் பாய்ஸ் படத்தில் 5 ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமானவர் பரத்.
தமிழில் காதல், செல்லமே, வெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதுவரை 49 படங்களில் நடித்துள்ள பரத், தற்போது அவரது 50வது படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.
அதன்படி பரத்தின் 50வது படமாக உருவான 'லவ்' எப்படி இருக்கிறது என்ற விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

காதலில் தொடங்கி கொலையில் முடியும் 'லவ்' : பரத்தின் 50வது படமாக உருவாகியுள்ளது 'லவ்.' ஆர்பி பாலா இயக்கத்தில் அவரே சொந்தமாக தயாரித்துள்ள இத்திரைப்படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பரத்துடன் வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதாரவி, டேனியல் ஆகியோர் நடித்துள்ளனர். பரத்தின் 50வது படம் என்பதால் அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ளது 'லவ்.'
காஃபி ஷாப்பில் தொடங்கும் முதல் காட்சியிலேயே வாணி போஜனை சந்திக்கிறார் பரத். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் பிடித்துப்போக திருமணத்திற்கு ரெடியாகின்றனர். ஆனால், பரத் பிஸினஸில் தோற்றுக்கொண்டே இருப்பதால் திருமணம் வேண்டாம் என வாணி போஜனை எச்சரிக்கிறார். ஆனாலும் பரத் மீதான நம்பிக்கையில் திருமணமும் நடைபெற, இருவரும் ராதாரவி அன்பளிப்பாக கொடுத்த பிளாட்டில் குடியேறுகின்றனர்.
பிஸினஸில் செட்டில் ஆகும் வரை குழந்தை வேண்டாம் என்ற பரத்தின் முடிவுக்கு வாணி போஜன் ஓக்கே சொல்கிறார். அடுத்த சீனில் கதை ஒரு வருடத்திற்குப் பிறகிருந்து தொடங்குகிறது. வாணி போஜன் கர்ப்பமாக பரத் மதுவுக்கு அடிமையான நிலையில் விரக்தியுடன் காணப்படுகிறார். திடீரென இருவருக்கும் சண்டை வர, பரத் வாணி போஜனை தள்ளிவிடுகிறார். அந்த எதிர்பாராத விபத்தில் வாணி போஜன் இறந்துவிட அடுத்து என்ன நடக்கிறது என்பது தான் கதை.
எமோஷனலாக நடக்கும் க்ரைம்களுக்குப் பின்னணியில் 'லவ்' படத்தின் கதை நகரும் என எதிர்பார்த்திருந்தால் அதுதான் இல்லை. சரி ஹாரர் த்ரில்லர் என நினைத்தால் அதுவும் கிடையாது. அப்படியானால் கொலை செய்துவிட்டு தப்பிவிடும் பரத்தை தேடுவதும், அதன் பின்னணி என்னவாக இருக்கும் என இன்வெஸ்டிகேஷன் ஜானரில் திரைக்கதை வேகமெடுக்கும் என நினைத்தால் அங்கேயும் ரசிகர்களுக்கு பல்பு தான்.
அப்படியானால் வாணி போஜன் என்ன ஆனார், அவரை கொலை செய்த பரத் தப்பினாரா என எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார் இயக்குநர். இதனிடையே விவேக் பிரசன்னா, டேனியல் இருவரும் சம்பந்தமே இல்லாமல் கதைக்குள் வருகிறார்கள். சரி அப்படியாவது எதாவது நடக்கும் என பார்த்தால், அங்கேயும் மொக்கை தான். இறுதியாக பரத் - வாணி போஜன் இடையே என்ன பிரச்சினை, ஏன் அந்த கொலை என முடிச்சை அவிழ்க்கும் இடத்தில், ரசிகர்களின் கழுத்தில் ஒரு தூக்கு கயிறை மாட்டிவிடுகிறார் இயக்குநர்.

அதாவது படத்தின் நோக்கம் என்னவென்று யாருக்கும் புரியாதபடி ஒரு கதை. ஆனால், அதில் மர்மங்களும் இல்லை, திருப்பங்களும் கிடையாது. External Affairs மூலம் கணவன், மனைவி உறவுக்கள் நடக்கும் விபரீதங்கள் குறித்து பேச நினைத்துள்ளார் இயக்குநர். ஆனால், அது கொஞ்சம் கூட ஒர்க் அவுட் ஆகாமல் ஏனோதானோ என செல்கிறது. அதிலும் பரத்தும் வாணி போஜனும் சண்டைப் போட்டுக் கொள்ளும் காட்சிகளில் அப்படியொரு இழுவை. முக்கியமாக படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை ஜீரணிக்க தனி எனர்ஜி வேண்டும்.
எந்த காட்சியிலும் சுவாரஸ்யமே இல்லை என்பதோடு, ஒரு இடத்தில் கூட கதையின் நோக்கம் என்னவென்பதை கூட சொல்ல முடியாமல் திணறுகிறார் இயக்குநர். பரத்துக்கு இது 50வது படமா என யோசிக்க வைக்கும் அளவிற்கு 'லவ்' டார்ச்சராக உருவாகியுள்ளது. இசை, பாடல்கள், எடிட்டிங், சினிமோட்டோகிராபி என அனைத்துமே மனதில் ஒட்டவே இல்லை. காதல் எப்படி வரும்ன்னு தெரியாதுன்னு சொல்லுவாங்க, அப்படித்தான் இந்த லவ் படமும்.


Click it and Unblock the Notifications











