Lover Review: அந்த பொண்ணோட ஃப்ரீடம்ல தலையிட நாம யாரு.. மணிகண்டனின் ’லவ்வர்’ விமர்சனம் இதோ!
நடிகர்கள்: மணிகண்டன், ஸ்ரீகெளரி பிரியா
இசை: ஷான் ரோல்டன்
நேரம்: 2 மணி நேரம் 25 நிமிடங்கள்
இயக்கம்: பிரபுராம் வியாஸ்
ரேட்டிங்:
சென்னை: லிவ்வின் வெப்சீரிஸ் மூலம் பிரபலமான பிரபுராம் வியாஸ் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்த லவ்வர் படத்தை இயக்கி உள்ளார். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் பிலிம்ஸ் நிறுவனம் மீண்டும் மணிகண்டனை வைத்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். மணிகண்டன், ஸ்ரீகெளரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான குட் நைட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில், அதே அளவுக்கு வெற்றியை லவ்வர் படம் பெறுமா என்பதை விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..
லவ்வர் கதை: ஃபாஸ்ட் ஃபுட் உலகத்தை விட டாக்ஸிக் உலகமாக தற்போது நெகட்டிவிட்டி மற்றும் வன்மத்துடன் சுழன்றுக் கொண்டிருக்கிறது. காதலிலும் டாக்ஸிக் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு பெண்ணை காதலிக்க என்னவெல்லாமோ குரங்கு வித்தைக் காட்டும் இளைஞர்கள் அதே ஒரு பொண்ணு ஓகே சொல்லி விட்டால் அவளை அதை செய்யக் கூடாது, இதை பண்ணக் கூடாதுன்னு அவங்க அம்மாவை விட அதிகமாக டார்ச்சர் செய்யும் சூழலில் இன்றைய இளைஞர்களின் காதல் எப்படி மாறி இருக்கிறது. இது எப்படி இருக்க வேண்டும் என்பதை பாடமாக நடத்தாமல் அருண் (மணிகண்டன்) மற்றும் திவ்யா (ஸ்ரீகெளரி பிரியா) இருவரையும் நடிக்க வைத்து படமாக எடுத்திருக்கிறார் பிரபுராம் வியாஸ்.

ரொம்ப லவ் டார்ச்சரா இருக்கே: மணிகண்டன் ஸ்க்ரீனில் தோன்றும் போதெல்லாம் ஒரு ஹீரோ வரும் ஃபீலே கொடுக்காமல் வந்துட்டான்டா அந்த பொண்ணை டார்ச்சர் பண்ண என நினைக்க வைக்கும் அளவுக்கு மணிகண்டன் இந்த படத்தில் பர்ஃபார்மன்ஸை பர்ஃபெக்ட்டாக கொடுத்திருக்கிறார். குட் நைட் படத்தில் குறட்டை பிரச்சனையாக இருந்தாலும், அன்பையும் காதலையும் அழகாகவும் ஆழமாகவும் சொல்லி ரசிக்க வைத்தனர். ஆனால், யதார்த்தம் கலந்த காதலர்களுக்குள் பிரச்சனை எப்படி வருகிறது. அதற்கு பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் முறை எப்படி காரணமாக அமைகிறது என்பதை சீன் பை சீனாக படத்தில் செதுக்கி உணர வைக்கிறார் இயக்குநர்.
சுதந்திரம் பொதுவானது: நமக்கு ஒரு பெண் ஓகே சொல்லி விட்டாலோ கழுத்தை நீட்டி விட்டாலோ அதன் பின்னர் அவள் நமக்கு அடிமை இல்லை. அவளுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யலாம். யாருடன் பேச வேண்டுமோ பேசலாம், யாருடன் பழக வேண்டுமோ பழகலாம், யாருடன் என்ன செய்ய வேண்டுமோ செய்யலாம். அது அவளது தனிப்பட்ட சுதந்திரம். அதே நிலை தான் அவனுக்கும் என்கிற விஷயத்தை ஆணித்தரமாக சொல்லி காதலர்களுக்கு உண்மையிலேயே காதல்னா என்ன என்பதை புரிய வைக்க முயற்சித்து இருக்கிறார். படத்தில் பிக்னிக் போகும் போது ஒரு சீனில் மணிகண்டன் உன் ஆளை எங்க வேணா ஜாலியா போக விடுறப்போல என கேட்க அந்த நபர், அவங்களோட ஃப்ரீடம்ல தலையிட நாம யாருன்னு செருப்பால அடிப்பது போல சொல்லும் வசனம் வேறலெவல்.

பிளஸ்: இயக்குநர் பிரபுராம் வியாஸ் திரைக்கதை மற்றும் வசனத்தை சிறப்பாக எழுதி இயக்கியிருப்பது இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். அதே போல படத்தின் இடைவேளை காட்சி மற்றும் கிளைமேக்ஸில் அவர் செய்திருக்கும் விஷயமும் படத்தை கண்டிப்பாக பார்க்க வைத்து விடுகிறது. மணிகண்டனை தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஸ்ரீகெளரி பிரியா ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை அள்ளுகிறார். ஹீரோயின் கதாபாத்திரத்தை ஸ்ட்ராங்காக எப்படி எழுத வேண்டும் என்பதை மற்ற இயக்குநர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு தேவையான பலத்தை கொடுத்திருக்கிறது. அம்மாவாக நடித்துள்ள கீதா கைலாசம் போர்ஷனும் அருமை.
மைனஸ்: ஸ்லோவாக நகரக்கூடிய காட்சிகள் மற்றும் காதலர்களுக்கு இடையே நடக்கும் டாக்ஸிக் சண்டை, பெஸ்டி, பிரேக்கப், பேட்ச் வொர்க் உள்ளிட்ட விஷயங்கள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால், குழப்பத்தில், டாக்ஸிக் மனநிலையில் இருக்கும் காதலர்களுக்கு இந்த படம் பிடிப்பதை விட ஒரு தெளிவை கட்டாயம் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications