Engal Thangam Review: எங்கள் தங்கம் விமர்சனம்.. ரஜினியோட பாட்ஷாவா?.. சமந்தாவோட அஞ்சனா?.. படம் எப்படி?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தை வைத்து ஒரு டஜன் படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி மற்ற மொழி சினிமாவிலும் வந்து குவிந்துள்ளன. சூர்யா, சமந்தா நடித்த அஞ்சான் படமும் அந்த வரிசையில் அடங்கும். இந்நிலையில், சூர்யா இல்லாமல் சமந்தா மட்டுமே நடித்த அஞ்சான் படமாக 'எங்கள் தங்கம்' இருந்ததா? அல்லது ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா அளவுக்கு மாஸ் காட்டியதா? என்கிற விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா தயாரித்து நடித்துள்ள 'மா இன்டி பங்காரம்' எனும் தெலுங்கு படம் தமிழில் 'எங்கள் தங்கம்' என தலைப்பு வைக்கப்பட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியான அர்ஜுனின் பிளாஸ்ட் படத்தை போல சமந்தாவின் ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் பக்கா தியேட்டர் மெட்டீரியல் தான்.

உடல்நலக்குறைவு பிரச்னை, விவாகரத்து, 2வது திருமணம் என பல தடைகளை கடந்து வந்த சமந்தா மீண்டும் தான் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் என்பதை இந்த படத்தில் நிரூபித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
எங்கள் தங்கம் கதை: ஸ்வர்ணா (சமந்தா) அனிருத் (திகந்த்) இருவரும் காதலிப்பது வீட்டாருக்கு பிடிக்கவில்லை. ஆனாலும், ஒரு கட்டத்தில் ஸ்வர்ணாவும் திகந்தும் வீட்டுக்கு வரவேண்டிய சூழல் ஏற்படுகிறது. மாமனார் வரவேற்கவில்லை என்றாலும் மாமியார் கெளதமி இருவரையும் வரவேற்கிறார். சமந்தாவை விட அந்த வீட்டில் உள்ள இன்னொரு மருமகள் தான் அனைவருக்கும் ஃபேவரைட். அவரை விட சூப்பரான மருமகளாக மாறி காட்டுகிறேன் என சமந்தா செய்யும் சேட்டைகள் எல்லாம் ஃபன் ஃபீஸ்ட்.
சமந்தாவை திடீரென சந்திக்கும் நபர் நீ ஜான்சி தானே என கேட்கும் இடத்தில் பஞ்சாயத்து ஸ்டார்ட் ஆகிறது. சிறையில் இருக்கும் கர்ணாவிடம் (குல்ஷன் தேவைய்யா) ஜான்ஸி பற்றி சொன்னதுமே அவர் நேரடியாக சமந்தாவை சந்திக்க வருகிறார். அதன் பின்ன என்ன ஆனது? ஜான்சியாக சமந்தா என்ன செய்துக் கொண்டார். இப்போ மருமகளாக குடும்பத்துக்கு வந்துள்ள பிரச்னையை எப்படி காப்பாற்றினார் என்பது தான் எங்கள் தங்கம் படத்தின் கதை.
பிளஸ்: சமந்தா ஆக்ஷன் காட்சிகளில் அசால்ட்டு காட்டுகிறார். அதிலும், சேலை அணிந்துக் கொண்டு சண்டை போடும் இடங்களில் அட்டகாசம் தான். திரையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சமந்தாவின் ஆக்ஷன் காட்சிகள் கண்டிப்பாக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும். குடும்ப ஆடியன்ஸை கவர் செய்ய இடை இடையே வரும் ஃபன் மொமண்ட்ஸ் எல்லாமே நல்லாவே ஒர்க்கவுட் ஆகியுள்ளது. காந்தாரா 2 வில்லன் இந்த படத்தில் கர்ணனாக பார்வையாலும் பேச்சாலுமே அதிகம் மிரட்டுகிறார். நடிகர்கள் பலர் பாட்ஷா பாணி படங்களை எடுத்து கல்லா கட்டிய நிலையில், சமந்தாவை வைத்து அப்படியொரு படத்தை பக்காவாக கொடுக்க நந்தினி ரெட்டி மெனக்கெட்டு இருப்பது பிளஸ் ஆக தெரிகிறது.
மைனஸ்: ஆனால், அதே நேரத்தில் ஜான்ஸி குறித்த ஃபிளாஷ்பேக் குட்டியாக முடிவதும். படம் இதற்கு மேல் இப்படித்தான் சென்று நிறைவடையும் என்கிற கிளைமேக்ஸ் வரையிலான யூகங்கள் அப்படியே ஒன்றன் பின் ஒன்றாக நடப்பது படத்துக்கு பெரிய பலவீனமாக உள்ளது. அந்த படத்தில் ஸ்க்ரீன்பிளேவை இன்னமும் கொஞ்சம் சுவாரஸ்யமாக புதிய காட்சிகளை வைத்து செதுக்கி இருந்தால் படம் பக்காவாக பிளாக்பஸ்டர் அடித்திருக்கும். இப்போதைக்கு பாட்ஷாவாகவும் இல்லாமல், அஞ்சானாகவும் இல்லாமல் அபவ் ஆவரேஜ் ஆக உள்ளது. எங்கள் தங்கம் கண்டிப்பாக தியேட்டர் மெட்டீரியல் தான் என்பதால் ஓடிடிக்கு வரும் வரை காத்திருக்க வேண்டாம்.


Click it and Unblock the Notifications