Maaman Review: மாமன் விமர்சனம்.. சூரியின் ’பாசமலர்’ கதை கட்டிப்போட்டதா? கதற விட்டதா?
சென்னை: பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரியின் கதையில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இருந்து இப்போது வரை சென்டிமென்ட் படங்களுக்கு சென்னை சிட்டியில் பெரிதாக ஆடியன்ஸ் இல்லை என்றாலும் மற்ற மாவட்டங்களிலும் கிராமங்களிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
தாய் மாமன் உறவு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அக்கா - தம்பி பாசம், கணவன் - மனைவி எப்படி அன்னோன்யமாக கடைசி காலம் வரை இருக்க வேண்டும் என பல உறவுகளை வலுப்படுத்தும் விஷயங்களை அடுக்கி சூரி இந்த கதையை எழுதியதற்கே அவரை பாராட்டலாம்.

நகைச்சுவை நடிகராக பரோட்டா சூரியாக பல படங்களில் நடித்து வந்த சூரி தன்னை ஹீரோவாக மாற்ற வேண்டும் என்பதற்காக காமெடியே வேண்டாம் என என்டர்டெயின்மென்ட் விஷயங்களை எழுதாமல் வெறுமனே சென்டிமென்ட் மற்றும் அழுகாச்சி டிராமாவை ஓவராக எழுதியதன் விளைவு மாமன் படத்தை காப்பாற்றியதா? இல்லை கைவிட்டதா என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே காணலாம் வாங்க..
மாமன் படத்தின் கதை: திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை பாக்கியமே இல்லாமல் இருக்கும் கிரிஜா (சுவாசிகா) மற்றும் ரவி (பாபா பாஸ்கர்) தம்பதியினர் குழந்தை பாக்கியம் வேண்டி பல விரதங்களை மேற்கொள்கின்றனர். கிரிஜாவின் சகோதரரான இன்பா (சூரி) அக்கா மீது அளவு கடந்த பாசத்துடன் வாழ்ந்து வருகிறார். வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் கிரிஜாவின் மாமியார் கரித்துக் கொட்ட அவர் மீதே வாந்தி எடுத்து விடுகிறார் கிரிஜா. மருமக மாசமா இருக்கா என்பதை அறிந்ததும் மாமியாரின் கோபம் தணிகிறது.
அக்காவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, வயிற்றில் வளரும் குழந்தையிடம் "என்னை பெத்தாரே" என முதல் முறையாக பேசுவது, குழந்தை கொடி சுத்தி பிறந்ததும் மாமனுக்கு ஆகாது என்று பலரும் சொல்லி அனுப்பிவிட அழுது கொண்டிருக்கும் சூரிக்கு மருத்துவரான ஐஸ்வர்யா லட்சுமி அதெல்லாம் மூடப்பழக்கம் என சொல்ல குழந்தையின் அப்பா ரவியை தள்ளிவிட்டு மருமகனை முதல் ஆளாக மடியில் ஏந்தும் காட்சிகள் என படத்தின் ஆரம்பமே ஓவர் பாசமாக செல்கிறது.

தன்னுடைய அப்பாவை போல பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறாரே என சூரியை மருத்துவரான ஐஸ்வர்யா லட்சுமி காதலிக்கிறார். 5 ஆண்டுகள் ஆகிவிட்டதாக போட்டு மருமகன் நிலனை (பிரகித் சிவன்) காட்டுகின்றனர். மாமாவை விட்டு ஒருபோதும் பிரியாத மருமகனாக வளர்கிறார் நிலன். சூரியின் திருமணத்தில் கூட அத்தைக்கு நான் தான் தாலி கட்டுவேன் என அடம்பிடிக்க அங்கே சூரி செய்யும் விஷயம், முதலிரவில் வந்து மாமாவுடன் படுத்துக் கொள்வது என சிறுவனின் அடத்தின் காரணமாக ஐஸ்வர்யா லட்சுமியின் வாழ்வில் அடிக்கும் புயல் மாமனையும் மருமகனையும் எப்படி பிரிக்கிறது. அக்காவுக்கும் தம்பிக்கும் என்ன நடக்கிறது. கடைசியில் அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் இந்த மாமன் படத்தின் கதை.
படம் எப்படி இருக்கு?: இன்பா கதாபாத்திரத்தில் அக்கா மீதும் அக்கா மகன் மீதும் அளவு கடந்த பாசக்காரனாக சூரி நல்லாவே நடித்திருக்கிறார். சுவாசிகாவுக்கு லப்பர் பந்து படத்தில் கிடைத்தது போல கடுப்பான கதாபாத்திரம் தான். ஆனால், அதிலும் பாசத்தைக் கலந்துக் காட்டும் இடங்களில் ஸ்கோர் செய்கிறார். பாபா பாஸ்கரின் போர்ஷனும் தாய் மாமன் டார்ச்சர்களால் அப்பாக்கள் அனுபவிக்கும் வலியும் வேதனையும் சொல்லப்பட்ட விதமும் பாபா பாஸ்கரின் நடிப்பும் பாராட்டுக்களை அள்ளுகிறது.
அக்காவின் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வரும் சூரியை பார்த்தவுடனே ஐஸ்வர்யா லட்சுமிக்கு காதல் வருவது எல்லாம் அதே தமிழ் சினிமா டெம்பிளேட் லவ் ஸ்டோரி தான். 5 ஆண்டுகளாக காதலித்துக் கொண்டே இருக்கும் அவர்கள் திருமணத்துக்கு தயாராவது அதன் பின்னர் சூரியின் மருமகனால் பிரச்னைகளை சந்திப்பது என வரும் காட்சிகளில் ஐஸ்வர்யா லட்சுமியின் போர்ஷன் பெரிதாக படத்துடன் ஒட்டவில்லை.
சிங்கராயராக வரும் ராஜ்கிரண் மற்றும் பவுன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜி சந்திரசேகர் போர்ஷன் ஏற்கனவே எம்ஜிஆரின் ராமன் தேடிய சீதை, திருமலை படத்தில் வரும் ரகுவரன் - கெளசல்யா ஜோடி, துல்கர் சல்மானின் ஓகே கண்மணி படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் போர்ஷனையே மீண்டும் நினைவுப்படுத்திகிறது. ஆனாலும், கடைசி வரைக்கும் மனைவி எவ்வளவு முக்கியம் கணவனும் மனைவியும் பேச்சுக்கு சண்டை போட்டாலும் மனதளவில் காதலுடன் இருக்க வெண்டும் என்பதை எல்லாம் எடுத்துக்காட்டிய விதம் அவர்களுக்கு சூரி கொடுத்த ஸ்பேஸ் எல்லாமே அருமை.

பிளஸ்: உறவுமுறை சிக்கல்களும் குடும்பத்தினர் இடையே ஏற்படும் பிரச்னைகளும், எந்தளவுக்கு சண்டை போட்டாலும் கஷ்டம் என்று வந்துவிட்டால் பரிதவிக்கும் மனங்களையும் இயக்குநர் பிரசாந்த் பாக்கியராஜ் எடுத்துக்காட்டிய விதம் அருமை. தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவில் கிராமத்தை அழகாக காட்டியுள்ளார். ஹேஷாம் அப்துல் வாஹாப் பின்னணி இசையால் சென்டிமென்ட் காட்சிகளில் உயிர் ஊட்டியுள்ளார். சூரி, சுவாசிகா, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், குழந்தை நட்சத்திரம் பிரகித் சிவன், ஐஸ்வர்யா லட்சுமி என நடிகர்களின் தேர்வும் நடிப்பும் படத்திற்கு நன்றாகவே கைகொடுத்துள்ளது. மாமனையும் மருமகனையும் பிரிக்க அக்கா சுவாசிகா செய்யும் ஒரு காரியம் பகீரை கிளப்பினாலும் படத்திற்கு பலத்தை கூட்டுகிறது.
மைனஸ்: ஆரம்பத்தில் பெயர் போடும் போது வரும் கல்லாளியே பாடலை தவிர பாடல்கள் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. சிவகார்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இடம்பெற்ற அளவுக்கு சென்டிமென்ட்டும் பெரிதாக ஒட்டவில்லை. மருமகனுக்காக மாமன் என்ன செய்கிறார். மாமன் பற்றிய அப்படியொரு விஷயத்தை அம்மா சொன்னதும் மருமகன் அதை லேசாக எடுத்துக் கொள்வதெல்லாம் பலகீனமாகவே தெரிகிறது. ஃபைட் சீன் வைக்க வேண்டும் என்பதற்காக ஒரேயொரு ஃபைட் சீனை திணித்தது என பல குறைகள் படத்தில் உள்ளன. முதல் பாதி முழுவதும் ரொம்பவே ஸ்லோவாக செல்ல 2ம் பாதியில் ஓவர் பாசத்தை பிழிந்து கொடுத்துள்ளனர். படத்தில் பெரிய குறை என்றால் மருந்துக்கு கூட என்டர்டெயின்மென்ட் காட்சிகளை வைத்து ரசிகர்களை சிரிக்க வைத்துவிடக் கூடாது என சூரி ஏன் நினைத்தார் என்றே தெரியவில்லை. பாசத்தில் பாஸ் மார்க் வாங்கும் இந்த மாமன் விமல் கேமியோவில் சொல்லும் ஒரு வார்த்தைக்கு அரங்கமே சிரிப்பதை போல படம் முழுவதும் குடும்பஸ்தன் வகையறா மோடில் கொண்டு சென்றிருந்தால் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியிருக்கும்.


Click it and Unblock the Notifications











