For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சயின்டிஃபிக் த்ரில்லர் 'மாயவன்' - படம் எப்படி? #MaayavanReview

  By Vignesh Selvaraj
  |

  திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் பல நல்ல படங்களைத் தயாரித்த சி.வி.குமார் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் 'மாயவன்'.

  சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, பகவதி பெருமாள், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

  தயாரிப்பாளராக வெற்றிபெற்ற சி.வி.குமார், இயக்குநராக முதல் முயற்சியில் வெற்றிக்கோட்டைத் தொட்டாரா, ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றாரா..? வாங்க பார்க்கலாம்...

  மாயவன்

  மாயவன்

  இன்ஸ்பெக்டர் சந்தீப் கிஷனுக்கு சிறு வயதில் நிகழ்ந்த சம்பவத்தால் ரத்தத்தைப் பார்த்தாலே மூளை சூடாகும் மனநலப் பிரச்னை இருக்கிறது. அதுவும் போதாதென தலையில் பயங்கரமாகத் தாக்கப்பட்டு சாவின் விளிம்பைப் பார்த்துவிட்டு மீண்டு வருகிறார். மீண்டும் பணியில் சேரும் சந்தீப் கிஷன் சீரியல் கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஏற்கிறார். ரத்தத்தை பார்த்தாலே அஞ்சும் அவர், ரத்தம் தெறிக்கக் கொல்லும் கொலையாளியைக் கண்டுபிடித்தாரா, அந்தக் கொலையாளியின் பின்னணி என்ன எனக் கொஞ்சம் வித்தியாசமாகச் சொல்லியிருக்கிறது 'மாயவன்'. மனநலப் பிரச்னையைத் தீர்க்கும் மனநல மருத்துவராக ஹீரோவோடு ஒட்டிக் கொள்கிறார் ஹீரோயின் லாவண்யா திரிபாதி. சந்தீப் கிஷனுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி மனரீதியாக அவரைத் திடப்படுத்தி பணியேற்கச் செய்கிறார்.

  சீரியல் கொலைகள்

  சீரியல் கொலைகள்

  ஒரே மாதிரியாக தொடர்ந்து சில கொலைச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. கொலை நடந்த இடங்களில் கிடைக்கும் சில தடயங்கள் ஒரே மாதிரியானதாகவும், திட்டமிட்டு விட்டுச் செல்லப்பட்டதாகவும் இருக்கின்றன. அந்தத் தடயத்தை தன்னைக் கொல்ல முயற்சி செய்தவன் மூலம் ஏற்கெனவே பார்த்திருக்கிறார் சந்தீப் கிஷன். ஆனால், தன்னைக் கொல்ல முயற்சித்த அந்தக் கொலையாளி இறந்துவிட்டான். எனில், அதே போன்ற கொலைகளை வரிசையாகச் செய்வது வேறு யார் எனும் கேள்விக்கு விடை தேடுகிறது சந்தீப் கிஷன் தலைமையிலான காவல்துறை.

  சீரியல் கில்லரை காவல்துறை வெவ்வேறு கோணங்களில் தேடிக்கொண்டிருக்க, கதை இன்டர்வெல்லிருந்து விஞ்ஞானத்தின் பக்கம் வீம்பாகத் தாவுகிறது. இது நாள் வரை பேய்ப் படங்களில் பார்த்துவந்த கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையை லேசான சயின்ஸ் மசாலா தூவி சத்யம் தியேட்டர் பாப்கார்னாகக் கொடுத்திருக்கிறார் சி.வி.குமார். விஞ்ஞான வளர்ச்சியும், மாயவித்தையும் எகிடுதகிடாகக் கலந்த கலவைதான் 'மாயவன்'.

  சயின்டிஃபிக் க்ரைம் த்ரில்லர்

  சயின்டிஃபிக் க்ரைம் த்ரில்லர்

  மனிதனின் மூளை நினைவுச் செல்களை விஞ்ஞான ரீதியாக இன்னொரு மனிதனின் மூளைக்குள் செலுத்தி, ஒரே மனிதனை சாகாவரம் பெற்றவனாக அடுத்தடுத்த உடல்களில் வாழ வைக்க முடியும் என ஒரு விஞ்ஞானி கண்டுபிடிக்கிறார். அதைத் தானே பரீட்சித்துப் பார்த்து, தனக்கு வேண்டாதவர்களைத் தீர்த்துக் கட்டுகிறார். அந்த விஞ்ஞானி, தனது ஜிம் பயிற்சியாளராக இருக்கும் தீனா, சினிமா நடிகையாக இருக்கும் அக்‌ஷரா கௌடா, நடிகைக்கு மேக்-அப் மேனாக பணியாற்றும் மைம் கோபி, தன்னம்பிக்கை பேச்சாளர் டேனியல் பாலாஜி, ராணுவ மேஜர் ஜாக்கி ஷெராப் ஆகியோரின் உடல்களுக்குள் அடுத்தடுத்து தனது நினைவுச் செல்களை உட்புகுத்தி, தன் பலிவாங்கல்களை நிறைவேற்றிக் கொள்(ல்)கிறார்.

  சாதா டு ஸ்பெஷல் சாதா

  சாதா டு ஸ்பெஷல் சாதா

  காமெடி, காதல், பாடல் என தமிழ் சினிமாவின் சில அத்தியாவசியங்களை அதிகமாகவே குறைத்துவிட்டு முதல் படத்தையே சயின்டிஃபிக் த்ரில்லராக எடுத்த தைரியத்திற்காக சி.வி.குமாருக்கு பாராட்டுகள். படத்தின் முதற்பாதியில், சாதா க்ரைம் த்ரில்லராக நகரும் கதை இன்டர்வெல்லுக்குப் பிறகு ஸ்பெஷல் சயின்டிஃபிக் த்ரில்லராக மாறுகிறது. ஆனால், "இன்டர்வெல்லுக்கு மேல் லாஜிக்கை மறந்துவிட வேண்டும்" என கேப்ஷன் போட மறந்துவிட்டார்கள் போலும். சாகாவரம் எனும் கான்செப்ட்டை நம்பவைக்கும் விதமாக எந்த ஆராய்ச்சிகளையும், படத்தில் காட்டவில்லை. படத்தின் டைட்டில்கார்டில் வரும் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஸ்லைடுகளை மட்டுமே வைத்து ரசிகர்களை நம்பவைத்துவிடலாம் என தப்புக்கணக்கு போட்டிருக்கிறார் இயக்குநர்.

  திரைக்கதை புஸ்ஸ்

  திரைக்கதை புஸ்ஸ்

  நல்ல கான்செப்ட்தான். ஆனால், அதைத் தாங்கும் அளவுக்கு பலமான திரைக்கதையும், காரணங்களும் படத்தில் இல்லை. அவ்வளவு ஆற்றல் கொண்ட விஞ்ஞானி தனது மேதாவித் தனத்தை அற்ப விஷயங்களுக்காகவா பயன்படுத்தி இருப்பார் என நிறைய யோசிக்க வைக்கிறது. இப்படத்திற்கு திரைக்கதை நலன் குமாரசாமி என்பதை வருத்தத்தோடு பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது. நலன் ஸ்கோர் செய்யத் தவறியிருக்கிறார். சாகாவரம் கான்செப்ட்டை செமையாக பிடித்த இயக்குநர் படத்தின் திரைக்கதை நேர்த்தியிலும், வெகு சுலபமான லாஜிக்கிலும் மெனக்கெட்டிருந்தால் படத்திற்கு லைக்ஸ் காட்டியிருக்கலாம். புல்லட் வேகத்தில் பறக்கவேண்டிய திரைக்கதை பி.எஸ்.ஏ சைக்கிள் வேகத்தில் நகர்வது பெரும் மைனஸ்.

  லிப் சிங்க் - மொக்கை

  லிப் சிங்க் - மொக்கை

  கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் குறையொன்றும் இல்லை. டெக்னிகலான விஷயங்களையும், க்ரைம் காட்சிகளையும் சிறப்பாக தொகுத்திருக்கிறார் எடிட்டர் லியோ ஜான் பால். ஜிப்ரானின் பிண்ணனி இசை படத்துக்கு ப்ளஸ்ஸாக இல்லாததை விட உறுத்தலாக இல்லாமல் இருந்ததே பெரிய விஷயம். பாடல்கள் மனதில் ஒட்டும்படி இல்லை. படத்தில் மிக முக்கியமாகத் தவித்திருக்க வேண்டிய குறை டப்பிங் படத்தைப் பார்ப்பது போலான உணர்வை ஏற்படுத்தியதுதான். படத்தின் பெருவாரியான காட்சிகளில் லிப் சிங்க் ஏழெட்டு சென்டிமீட்டர் தூரம்.

  வசனங்கள் போர்

  வசனங்கள் போர்

  ஹீரோ சந்தீப் கிஷன் போலீஸ் அதிகாரி வேடத்தில் விறைப்பு காட்டியிருக்கிறார். அவருடன் வரும் போலீஸாக பகவதி பெருமாள் கலக்கியிருக்கிறார். மைம் கோபி, ஜெயப்பிரகாஷ், ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். டேனியல் பாலாஜி அலட்டல் இல்லாமல் நடிப்பில் அசத்தியிருக்கிறார். படத்தில் யாருக்குமே சிறப்பான வசனங்கள் ஏதும் இல்லாத பெரும் குறை. அதுவே, மொத்தக் கதையையும் அழுத்தமின்றி இழுத்துப் போகிறது.

   ஏம்மா... ஏன்..?

  ஏம்மா... ஏன்..?

  ஹீரோயின் லாவண்யா திரிபாதிக்கு சீரியஸ் காட்சிகளில் நடிக்க வரவில்லை. ரொமான்ஸ் காட்சிகள்ல செமயா பண்ணிட்டாங்க போலயே என நினைக்க வேண்டாம். அதுல டெஃபனட்டா நடிக்க வரலை. 'லைஃப்டைம் உங்க கூட இருக்கணும்னு தோணுச்சு' என பட்டும் படாமலும் அழகாகச் சொல்லும் ரொமான்ஸ் வசனத்தை, 'லைஃப்டைம் வேலிடிட்டி சிம் இருக்கு... வேணுமா ப்ரோ..' ரேஞ்சிலேயே கேட்கிறார். நல்லவேளை அப்போதெல்லாம் க்ளோசப் ஷாட் இல்லாததால் ஜஸ்ட் எஸ்கேப். காதல் காட்சிகள் இல்லாதது படத்திற்கு பெரிய பலம் என எண்ணவைத்த லாவண்யா திரிபாதியின் நடிப்புக்கு... அவார்டுகள் பல!

  முதல் முயற்சியில் நல்ல படத்தைத் தர முயன்ற சி.வி.குமார் திரைக்கதை ஆக்கத்தில் வெகுவாக மெனக்கெட வேண்டும் என்பதை இப்போது நிச்சயம் புரிந்துகொண்டிருப்பார். அடுத்த படத்தில் அசத்தலான களத்தோடு, முக்கியமாக வலுவான திரைக்கதையோடு, அல்லது செமையான திரைக்கதை எழுத்தாளரோடு வருவார் என நம்புவோம். ஆக, 'மாயவன்' - ஆவரேஜ்!

  English summary
  Read 'Maayavan' movie review here. 'Maayavan' is a scientific crime thriller movie. This film was CV Kumar's directorial debut, who produced many good films through Thirukkumaran Entertainment. Sundeep Kishan, Lavanya Tripati, Daniel Balaji, Jackie Shroff, Jayaprakash and many others acted in 'Maayavan' movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X