Madha Gaja Raja Review: மத கஜ ராஜா விமர்சனம்: 12 வருஷம் பழைய விஷால் படம்.. எப்படி இருக்கு?
நடிகர்கள்: விஷால், வரலட்சுமி, அஞ்சலி
இசை: விஜய் ஆண்டனி
இயக்கம்: சுந்தர். சி
சென்னை: இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள "மத கஜ ராஜா திரைப்படம் இன்று வெளியாகிறது. கடந்த 2013ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இத்திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. ஆனால், பல வருடங்கள் கழித்து அதே திட்டத்துடன் "மத கஜ ராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பிறகு பொங்கல் பண்டிகையில் மக்களை குதூகலிக்க வருகிறது.

சென்னை சத்யம் திரையரங்கில் மத கஜ ராஜா படத்தின் ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த விஷால் தனது படத்தின் புரமோஷனுக்காக தியேட்டர் விசிட் அடித்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் எல்லாம் இவரை பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றனர்.
12 வருடம் லேட் ரிலீஸ் என்கிற நிலையில், வெளியான இப்படம் மக்களின் ரசனையை பூர்த்தி செய்ததா, சுந்தர்.சி - விஷால் கூட்டணி வெற்றி பெற்றதா என்பதை இப்படத்தின் விமர்சனத்தில் காணலாம்.

மத கஜ ராஜா கதை: கேபிள் டிவி நடத்தும் மத கஜ ராஜா (எம்ஜிஆர்) விஷால். இவரது நண்பர்களான நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ் இருவரும் கற்குன்றன் விஸ்வநாத்தால் (சோனு சூட்) பாதிக்கப்படுகின்றனர். அரசியல் பலம், பணபலம் நிறைந்த வில்லனாக வரும் சோனு சூட்டை எதிர்த்து, சண்டையிடும் சாதாரண கேபிள் டிவி ஆபரேட்டரான விஷால் தனது நண்பர்கள் இழந்த பணத்தை மீட்டாரா? தனது சவாலில் ஜெயித்தாரா? என்பதே கதை.
படம் எப்படி இருக்கு?: படத்தின் முதல் காட்சியே சந்தானத்தின் காமெடியுடன் தொடங்கி கலகலப்பை ஏற்படுத்துகிறது. நந்தகோபாலாக வரும் சந்தானம் சவத்தை சுமக்கும் வண்டி ஓனராக இருப்பதால், அவரை வெறுக்கும் மனைவி. இதனால், நந்தகோபாலிடம் (சந்தானம்) இருந்து அவரது மனைவி டைவர்ஸ் கேட்கிறார். நந்தகோபால் (சந்தானம்) மனைவியை விட்டு பிரிய மனம் இல்லாமல், கோர்ட்டுக்கு செல்லாமல் வாய்தா, மேல் வாய்தாவாக வாங்குகிறார். இப்படி ஆளுக்கொரு பிரச்னையோடு பால்ய நண்பர்களான நந்தகோபால், மத கஜ ராஜா, சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா ஆகிய நால்வரும் முன்னாள் பி.டி. சார் மகளின் கல்யாணத்திற்காக மதுரையில் சந்திக்கின்றனர்.
அப்போது சடகோபன் ரமேஷ் மனைவியின் தங்கையாக வரும் வரலட்சுமி சரத்குமார் தனது அறிமுக காட்சியிலேயே கவர்ச்சியில் குளியல் ஆட்டம் போடுகிறார். வரலட்சுமி தண்ணீரில் குளிப்பதை பார்த்து ஜொள்ளு விடும் சந்தானம், நிதின் சத்யா, விஷால் மூவரையும் சடகோபன் ரமேஷ் கண்டிப்பதுமாக கலகலப்பான காமெடியுடன் கதை நகர்கிறது. இதனிடையே, நடிகர் ஆர்யா டிக்கி பாபுவாக கேமியோ ரோலில் திருடனாக நண்பர்களின் மனைவி இருக்கும் அறைக்குள் புகுந்து டைவர்ஸ் கேட்கும் நந்தகோபால் (சந்தானம்) மனைவியின் மனதை மாற்றும் சென்டிமெட் காட்சிகள் சலிப்பை தட்டாத நட்புக்கு இலக்கணம்.
ஆர்யாவை ஆண்டி லவ்வர்ஸ் என சந்தானம் கலாய்க்கும் காட்சிகள் திரையரங்கில் சிரிப்பலைகளை எழுப்புகின்றன.

சுந்தர்.சியின் பொங்கல் விருந்து: படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை சிரித்து கொண்டே இருக்கலாம். கதை, லாஜிக் எதுவும் எதிர்பார்க்காமல் வருவோருக்கு இயக்குநர் சுந்தர்.சியின் ஒரு தரமான மேஜிக்கான சிரிப்பு வெடியுடன் கூடிய பொங்கல் விருந்து ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. 12 வருடங்களுக்கு பிறகு வந்த படம் மாதிரியே இல்லை என்று படம் பார்த்து சென்ற ரசிகர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். விண்டேஜ் சந்தானத்தை மீண்டும் திரையில் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. சந்தானம் காமெடியனாக கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக மாறியுள்ளது. அந்தளவுக்கு மத கஜ ராஜா குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இருக்கும் என்பது கியாரண்டி.

மிஸ் யூ மனேபாலா சார்: மத கஜ ராஜா படத்தில் பிரபல அரசியல்வாதியாகவும், நல்லமுத்துவாக வரும் நடிகர் மனோபாலா எளிதில் மறக்க முடியாத காமெடி காட்சிகளை அள்ளி தெளித்து விட்டு சென்றிருக்கிறார். வடிவேலு போன்ற வரைந்த மீசையை வைத்து கொண்டு, அபரிதமான நடிப்பை உடல் மொழியால் வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் 2ஆம் பாகத்தில் மனோபாலாவை பார்த்தால் "வி மிஸ் யூ சார்" என்றே சொல்ல தோன்றும். அந்தளவிற்கு நடிப்பால் எல்லோரையும் சிரிக்கவைத்து விட்டு சென்றுள்ளார். சந்தானமும், மனோபாலாவும் சேர்ந்தால் காமெடிக்கு பஞ்சமில்லை. இதற்கு முன்பு இவர்கள் நடித்த ஆம்பள படத்தை போன்றே இருவரது காம்பினேஷனும் இப்படத்தில் பக்காவாக பொருந்தியிருக்கிறது.
மணிவண்ணனுக்கு மரியாதை: அரசியல்வாதியின் பி.ஏவாக தூள் படத்தில் வந்து செல்லும் காட்சிகளை போன்று மறைந்த நடிகர் சிட்டி பாபு இதிலும் தனது நடிப்பால் சிரிப்பை வரவழைத்துள்ளார். இயக்குநர் சுந்தர்.சி படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது அறிந்தது தான். ஆனால், ஆம்பள படத்தில் விஷாலை சுமோ காரில் பறக்கவிட்டிருப்பார். மதகஜராஜாவில் புல்லட்டில் நிற்கவைத்து இன்ட்ரோ கொடுக்கும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். தனது ஆஸ்தான குரு இயக்குநர் மணிவண்ணனுக்கு இதயபூர்வமான நன்றியை தெரிவித்து அனைவரது பாராட்டையும் பெற்றுவிட்டார்.
பிளஸ்: விஜய் ஆண்டனி தான் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். “மை டியர் லவ்வரு”, “சிக்கு புக்கு ரயில் வண்டி” பாடல்களை எல்லாம் தியேட்டரில் ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. சந்தானத்தின் சரவெடி காமெடிகள், அஞ்சலி மற்றும் விஷாலின் லவ் மற்றும் பிரேக்கப் போர்ஷன், வரலட்சுமி மற்றும் விஷால் கெமிஸ்ட்ரி என ஏகப்பட்ட பாசிட்டிவான விஷயங்கள் உள்ளன.
மைனஸ்: அதே நேரத்தில் படம் முழுவதும் லாஜிக் இல்லாமலும், வழக்கம் போல நடிகைகளை கவர்ச்சி பொருளாக சுந்தர். சி காட்சிப்படுத்தியுள்ள விஷயங்களும் மைனஸ் என்று தான் சொல்லவேண்டும். இந்த பொங்கலுக்கு ஜாலியாக குடும்பத்துடன் பார்த்து சிரிக்க இந்த படம் உதவுமா? என்றால் நிச்சயம் சுந்தர். சி டைப் கமர்ஷியல் கலாட்டா படம் தான் இந்த மத கஜ ராஜா.


Click it and Unblock the Notifications











